வரும் 7ம் தேதி அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு : செயற்குழுவில் நடந்த காரசார வாதம்..!

28 September 2020, 3:45 pm
Quick Share

சென்னை : தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வரும் அக்.,7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கூட்டாக அறிவிக்க உள்ளனர்.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் கட்சியான அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட 300 பேர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக தேர்தல் வியூகம், முதலமைச்சர் வேட்பாளர், கட்சிக்கு ஒற்றை தலைமை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்யலாம் என அமைச்சர் கேபி முனுசாமி யோசனை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், வரும் அக்டோபர் 7ம் தேதி அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இருந்து அன்றைய தினம் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவிப்பார்கள் என கேபி முனுசாமி தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்பில் காரசார விவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதில், கடந்த 3 ஆண்டு கால ஆட்சி சிறப்பானதாக இருந்ததாக பிரதமரே பாராட்டியாதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு, ஓ.பி.எஸ். தரப்பினர் 2021ம் ஆண்டு வரைதான் முதலமைச்சராக இருக்க ஆதரவு என முன்கூட்டியே தெரிவித்துள்ளதாகக் கூறியதாகக் தெரிகிறது.

மேலும், என்னை மட்டுமல்ல, ஓ.பி.எஸ்.ஸையே முதலமைச்சராக்கியது சசிகலாதான் என்றும், இங்கு யார் யாரை முதலமைச்சராக்கினார்கள் என்பது முக்கியமல்ல, சிறப்பான நல்லாட்சி கொடுக்கப்பட்டுள்ளதே முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விவாதம் ஏற்பட்ட போது, கட்சியை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும் வழிநடத்த முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0