அரசு அனுமதி கொடுத்தாலும் ஆம்னி பேருந்துகளை இயக்க வாய்ப்பில்லை : ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

3 September 2020, 11:33 am
Omni bus - updatenews360
Quick Share

சென்னை : பொது போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், 7ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க வாய்ப்பில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 4வது கட்ட தளர்வில் பொது போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதியளித்தது. அதன்படி, கடந்த 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, வரும் 7ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. அதோடு, ஆம்னி பேருந்துகளின் சேவைகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரும் 7-ந்தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க வாய்ப்பில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று மாலை ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.அன்பழகன் கூறியதாவது :- கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒரு பேருந்தை அதன் உரிமையாளர் இயக்குவதற்கு ரூ.2 லட்சமும், ஏப்., – செப்., வரையிலான காலாண்டு சாலை வரியாக ரூ.2.50 லட்சமும் என மொத்தம் ரூ.4.50 லட்சம் தேவைப்படும். பேருந்துகளை இயக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தும், இயக்க முடியாத சூழலில் இருக்கிறோம்.

இது தொடர்பாக முதலமைச்சர் தலையிட்டு 2 காலாண்டு சாலை வரியை தள்ளுபடி செய்வதுடன், சில கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 0

0

0