ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு? ஷாக் கொடுத்த மின் வாரியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2023, 9:49 pm
EB DMK - Updatenews360
Quick Share

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அண்மையில் வெளியிட்ட ஒரு உத்தரவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பி விட்டு இருக்கிறது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் 53 சதவீதம் வரை உயர்த்தியதும் இனி ஆண்டுக்கு ஒரு முறை 6 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பும் தமிழக மக்களை கவலையில் மூழ்க வைத்துள்ள நிலையில் இந்த புதிய உத்தரவு அதைவிட பல மடங்கு அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

ஒரு வீட்டு ஒரு மின் இணைப்பு

அதிலும் குறிப்பாக ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் நிலையில் அந்த வீடுகளில் உள்ள பல மின் இணைப்புகளையும் ஒரே இணைப்பாக மாற்றவேண்டும் என்ற தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கடும் நிபந்தனை தமிழக மக்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஆணையம் கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியது.

அதன்படி, ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரே மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும். ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தால் அதனை முறையாக நோட்டீஸ் கொடுத்து கட்டண விகிதப் பட்டியல் படி 1ஏ-ல் ஒரே மின் இணைப்பாக ஆக்க வேண்டும்.

நுகர்வோர் இணைப்பதற்கு முன்வராவிட்டால் அதனை 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்ற வேண்டும். மேலும் மின் வாரியம் மின் இணைப்பு கொடுக்க அந்தப் பகுதியில் வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

100 யூனிட் மானியம் முறை!!

சிலர் ஒரே வீட்டில் தனித் தனிக் குடும்பமாக வாழலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் இதுபோன்ற குடும்பங்கள் உள்ள குடியிருப்பில் மற்றொரு கூடுதல் மின் இணைப்பு பெற்றிருந்தால் அங்கு தனி ரேஷன் அட்டை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதன் நோக்கம் என்னவென்றால் 100 யூனிட் மானியம் என்பது முறையாக இருக்கவேண்டும் என்பதே.
குடியிருப்புகளில் ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1-ஏ கட்டண விகிதப் பட்டியலாக இருக்க வேண்டும்” என்று அந்த உத்தரவில் கறார் காட்டி இருந்தது.

இந்த உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த சூட்டோடு சூடாக மாநிலம் முழுவதும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு தமிழ்நாடு மின்வாரியம் அடுத்த 15 நாட்களுக்குள் நீங்கள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று நோட்டீசையும் அனுப்பி உள்ளது.

கொந்தளித்த மார்க்சிஸ்ட்

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த உத்தரவால் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாகி இருப்பதுடன் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில் “இது முற்றிலும் அநியாயம்! வீட்டில் எத்தனை குடும்பங்கள் இருந்தாலும் ஒரே மின் இணைப்புதான் என்ற மின்சார ஆணையத்தின் ஆணை அட்டூழியமானது, திட்டமிட்டு சாதாரண மக்களை கொள்ளையடிக்கும் முயற்சி.
தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும். இதை அமல்படுத்தக்கூடாது” என்று ஆவேசமாக கூறியுள்ளார். தனது பதிவை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அவர் ‘டேக்’ செய்தும் உள்ளார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு குறித்து சமூக நல ஆர்வலர்கள் கூறுவது இதுதான்.

100 யூனிட் மானியம் பறிப்பு?

“மின் இணைப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆதாரை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த நவம்பர் மாதம் கூறிய போதே அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட100 யூனிட் இலவச மின்சாரம் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம், தமிழக மக்களுக்கு எழுந்தது.

அப்போது இலவச மின்சாரம் வழங்குவது எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது. அதனால் பயமின்றி அனைவரும் மின் இணைப்புடன் ஆதாரை இணையுங்கள் என்று செந்தில் பாலாஜி கேட்டும் கொண்டார். அவர் சொன்னதை நம்பித்தான் மின் இணைப்பு பெற்ற 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

பாதிக்கப்படும் மக்கள்

ஆனால் ஒரு வீட்டில் எத்தனை குடும்பங்கள் இருந்தாலும் அந்த வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு தான் இலவச மின்சாரத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வீட்டில் அண்ணன்-தம்பிகள், அண்ணன்- தங்கைகள், அக்காள்- தம்பிகள், தந்தை- மகன், தந்தை- மகள் என்று தனித்தனி குடும்பமாக வசித்தாலும் அவர்களிடம் தனித் தனியே ரேஷன் கார்டு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அவர்களுக்கு நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று நிபந்தனை விதிப்பது ஏற்புடையது அல்ல.

ஏனென்றால் தமிழகத்தில் வசிக்கும் 2 கோடி 42 லட்சம் குடும்பங்களில் சுமார் 85 லட்சம் குடும்பங்கள் வரை கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். கிராமப் புறங்களில் இது மிக அதிகம். இவர்களில் எத்தனை பேர் தனித்தனி ரேஷன் கார்டு வைத்து இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான். அதனால் இவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம்.

அதேநேரம் 100 யூனிட் இலவச மின்சாரத்தை 70 சதவீதம் ரத்து செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டே மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்கும்படி திமுக அரசு கேட்டுக்கொண்டதோ என்கிற சந்தேகமும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய உத்தரவால் எழுகிறது. ஏனென்றால் ஆதாரை தமிழக மக்கள் இணைத்த பிறகுதான் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

திரும்பப் பெறப்படுமா?

எனவே திமுக அரசு இந்த நிபந்தனைகளை உடனடியாக திரும்பப் பெறுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். தமிழக மின்வாரியத்திற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை இருப்பதை காரணம் காட்டி மக்களை இப்படி வதைப்பது சரியல்ல. ஏனென்றால் ஏற்கனவே பல மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் தமிழக மக்கள் விதிபிதுங்கி நிற்கிறார்கள். அதனால் ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்புதான். அவர்களுக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்னும் நிபந்தனை மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும் என்பதே எதார்த்தமான உண்மை.

அதேநேரம் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி மாதம் ஒரு முறை மின்கணக்கீடு செய்து கட்டணம் வசூலிப்பதை உடனடியாக திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அதன் மூலம் ஓரளவு பணத்தை நுகர்வோரால் சேமிக்க இயலும்” என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Views: - 383

0

0