ஆன்லைன் வகுப்பில் விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
1 September 2020, 3:52 pmசென்னை : ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் பள்ளிகளை விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையை பார்க்கும் போது, இந்த ஆண்டு இறுதி வரையில் கல்வி நிறுவனங்களை திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஆன்லைன் வகுப்புகளினால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், தவறான பாதையில் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறி வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், ஆன்லைன் வகுப்பிற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் குறித்த அறிக்கையை சமர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், மலைப்பகுதியில் வாழும் மாணவர்களுக்கு எப்படி ஆன்லைன் கல்வி அளிக்கப்படும் என்பதை குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்தது. மேலும், கல்வி தொலைக்காட்சியின் மூலம் மலைப்பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் பயனடைய முடியும் என தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, ஆபாச இணையதளங்களுக்குள் மாணவர்கள் நுழைவதை தடுக்கும் விதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
0
0