ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிர்ப்பு.. கருணாநிதி சிலை முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகர் ; மதுரையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
28 June 2023, 1:55 pm
Quick Share

தமிழக ஆளுநரை மாற்ற கோரி கருணாநிதி சிலை முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகியால் பரபரப்பு நிலவியது.

தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி தமிழக அரசின் பல்வேறு விவகாரங்களில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் பேசி வருகிறார்.

இந்நிலையில், மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த ஆவின் திமுக தொழிற்சங்க தலைவரான கணேசன் என்பவர் தமிழக ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார். எனவே, 27ஆம் தேதிக்குள் ஒன்றிய அரசு தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றாவிட்டால் 28 ஆம் தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கு குளித்து சாவேன் என போஸ்டர் ஒட்டியிருந்தார்.

இதனையடுத்து, இன்று காலை 10 மணிக்கு தீக்குளிக்க வருவதாக அறிவித்திருந்த நிலையில், காலை முதலே காவல்துறையினர் தீக்குளிப்பதை தடுப்பதற்காக காத்திருந்த போது, திடீரென 10.30 மணிக்கு கருணாநிதி சிலை முன்பாக காரில் வந்து இறங்கிய கணேசன் திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தலை வழியாக ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி குளிக்க வைத்த பின்பு கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அப்போது, பேசிய கணேசன் சிறப்பாக செயல்படக்கூடிய திமுக அரசை இடையூறு செய்யும் வகையில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார், எனவே அவரை மாற்ற வேண்டும் எனவும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து தலைமையிடம் கேட்டு முடிவு எடுப்பேன், என தெரிவித்தார்.

Views: - 260

0

0