எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க P. K. காட்டிய ரூட்… பாஜகவுக்கு எதிரான சரத்பவார் திட்டம் ‘பணால்’!!

24 June 2021, 10:03 pm
pk - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும் அரசியல் ஆலோசகராக செயல்பட்டவர் பிரசாந்த் கிஷோர்.

எதிர்கட்சிகளின் சங்கமம்

அவர், கடந்த 3 வாராங்களில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை போன் மூலம் பலமுறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தவிர நேரடியாக மும்பைக்கே சென்று அவருடைய வீட்டில் சந்தித்து சுமார் 4 மணி நேரம் ஆலோசனையும் நடத்தினார். அதேபோல் டெல்லியிலும் ஒருமுறை சந்தித்து பேசினார்.

சமாஜ்வாடி,பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்குதேசம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 16 கட்சிகளை தொடர்புகொண்டும் அவர் பேசியதாக கூறப்பட்டது. பிரசாந்த் கிஷோர் இப்படி எதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசினார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்தது.

sarathpawar advise sachin - updatenews360

அதற்கு அண்மையில் விடையும் கிடைத்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத பொதுவானதொரு வலுவான எதிர்க்கட்சியை கட்டமைத்து பாஜகவுக்கு எதிராக போட்டியிட வைக்க விரும்புகிறார். அதையொட்டி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் கூட்டத் தீர்மானித்து அழைப்பும் விடுக்கப் பட்டது.

புறக்கணித்த எதிர்கட்சிகள் :

அதற்காகத்தான், பிரசாந்த் கிஷோர் இப்படி தூதராக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் டெல்லியில் உள்ள சரத்பவாரின் வீட்டில் நடந்த இந்த கூட்டத்தை ராஷ்டிரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ், திமுக, தெலுங்குதேசம், ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணித்துவிட்டன. சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக் தளம், திரிணாமுல் காங்கிரஸ்,
ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

அதாவது அழைப்பு விடுக்கப்பட்ட 16 கட்சிகளில் பாதி கட்சிகள் சரத்பவாரின் கூட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டன. அதேபோல் பங்கேற்ற கட்சிகளிலும் கூட முக்கிய தலைவர்கள் ஒரு சிலர் தவிர வேறு யாரும் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை.
கலந்து கொண்டவர்களில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த் சின்கா, கூட்டத்தை நடத்திய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மட்டுமே முக்கிய தலைவர்கள் ஆவர்.

சரத்பவாரும், பிரசாந்த் கிஷோரும் இணைந்து நடத்திய பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி பிசுபிசுத்துப் போனதுக்கு பல காரணங்கள் உண்டு.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் அதே ஆண்டின் இறுதியில் குஜராத், இமாச்சலப்பிரதேசத்திலும் சட்டப் பேரவை தேர்தல் நடக்கிறது.

முந்தும் முலாயம்சிங்

உத்தரபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றி விட்டால், பிரதமர் வேட்பாளராக சமாஜ்வாடியின் தலைவர் முலாயம்சிங்கை அறிவிக்கவேண்டும் என்று அக்கட்சி நிச்சயம் வலியுறுத்தும்.

ஆனால் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவின்றி சமாஜ்வாடியால் மட்டும் தனித்து பாஜகவை எதிர்கொள்ள முடியாது. அதனால் அந்த மாநிலத்தில் பாஜகவை கூட்டணியமைத்து வீழ்த்தவேண்டும் என்று சமாஜ்வாடி விரும்புகிறது. மகன் அகிலேஷ் முதலமைச்சர் ஆகிவிட்டால் பிரதமர் வேட்பாளர் கோதாவில் குதிக்கலாம் என்பது முலாயம் சிங்கின் திட்டம். அதனால்தான் சரத்பவார், டெல்லியில் கூட்டிய கூட்டத்தில் முலாயம் சிங்கோ அவருடைய மகனோ கலந்து கொள்ளாமல் கட்சியின் பிரதிநிதிகளை மட்டும் அனுப்பி வைத்தனர்.

Mulayam_Singh_updatenews360

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை பொறுத்தவரை, காங்கிரசால் தனிப்பட்டமுறையில் தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த முடியாது என்பது நன்றாகவே தெரியும். அதேநேரம், தான் தேசிய அரசியலில் ஈடுபட்டு பாஜகவிடம் தோல்வி காண நேர்ந்தால்,மேற்கு வங்காளத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கு அடியோடு சரிந்து போய்விடும் என்று அவர் பயப்படுகிறார். அதனால் பிரதமர் வேட்பாளர் என்கிற சிந்தனையே மம்தா பானர்ஜி மனதில் எழவில்லை.

லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும், திமுகவும் காங்கிரஸ் உதவி இல்லாமல் பாஜகவை எதிர்த்து நிற்பது கடினம் என்றும் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் கருதுகின்றன. இதனால்தான் ராஷ்ட்ரீய ஜனதா தளம் திமுக சார்பில் ஒருவரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவற்றைப் பொறுத்தவரை ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்களில் காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால் தேசிய அளவில் காங்கிரஸ் அமைக்கும் கூட்டணியிலோ, சரத்பவார் கட்டமைக்க முயற்சிக்கும் 3-வது அணியிலோ இவை இணைவது தர்மசங்கட சூழலை உருவாக்கும் என்று கருதுகின்றன.

பி.கே.வின் பிளான் Failure:

ஒடிசாவின் நவீன் பட்நாயக்கை பொறுத்தவரை எந்த அணியையும் சாராமல் இருப்பதே நல்லது என்ற ‘நியூட்ரல் கியர்’ அரசியலில் ஈடுபட்டு வருபவர். 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அவருடைய இதே நிலைப்பாடு தொடரும் என்று நம்பலாம்.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒன்றாக இணையுமா? என்பது பற்றி டெல்லியின் பிரபல அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறும்போது, “பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. அதை புரிந்து கொண்டதால்தான், இப்போதே வலுவான கூட்டணியை உருவாக்க சரத்பவார் விரும்பினார். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. சரத்பவார், முலாயம்சிங், பரூக் அப்துல்லா, யஷ்வந்த் சின்கா நால்வரும் 80 வயதை கடந்தவர்கள். இவர்களில் யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினாலும் அது மக்களிடம் எடுபடாமல் போய்விடும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பெறும் வெற்றியைப் பொறுத்தே
3-வது அணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? அது ஆட்சியமைப்பதற்கு உதவியாக இருக்குமா? என்பதெல்லாம் தெரிய வரும்.

இதுதவிர பாஜக எதிர்ப்பு நிலையை எல்லா மாநில கட்சிகளுமே எடுக்கும் என்று கூற முடியாது. இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள் மாநில கட்சிகளிடையே நிலவுவதால்தான் சரத்பவார் உத்தரவின்பேரில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த மூன்றாவது வலுவான அணி என்பதற்கு எந்த பலனும் கிடைக்காமல் போய்விட்டது.

அதேநேரம் சரத்பவாரின் மனதில் இன்னொரு திட்டமும் இருப்பதாக சொல்கிறார்கள். பல்வேறு மாநிலக் கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக பணிபுரிந்த பிரசாந்த் கிஷோரையே பேசாமல் பிரதமர் வேட்பாளராக நிறுத்தி விடலாமே என்பதுதான் அது. ராகுல்காந்தி சம்மதித்துவிட்டால் இது சாத்தியமாகி விடும் என்றும் சரத்பவார் நம்புகிறார். இது பிரசாந்த் கிஷோருக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சரத்பவாரின் ஆசையை நிறைவேற்ற அவரும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டனர்.

எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட இந்த முயற்சி தற்போதைக்கு ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாகத்தான் உள்ளது, என்பதே உண்மை!

Views: - 300

0

0