களமிறங்கும் ஒவைசி கட்சி.. தமிழக தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டி? கைகோர்க்கும் என எதிர்பார்ப்பு!!

2 March 2021, 11:40 am
Kamal -owaisi - updatenews360
Quick Share

தமிழகத்தில் அதிமுக-திமுக கூட்டணிகளில், தொகுதி பங்கீடு பேச்சுகள் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முழுமையாக தெரிந்து விடும். அதன்பிறகு எந்தெந்த தொகுதிகளில் கட்சிகள் போட்டியிடும் என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பிரதான கட்சி முடிவு செய்யும். அதற்கு இன்னொரு சுற்று பேச்சுவார்த்தையும் நடக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த தலைவலி, கவலையெல்லாம், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு இருப்பதுபோல் தெரியவில்லை. ஒருவேளை இனி நிலைமை மாறவும் செய்யலாம். அதேநேரம், நடிகர் கமல் வலிமையான மூன்றாவது அணி அமைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். எனினும், வருகிற 7-ம் தேதி முதற்கட்டமாக 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kamal_seeman - updatenews360

சீமானோ, அதே நாளில் சென்னையில் நடத்தும் பொதுக் கூட்டத்தில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். அதனால் அவர் மூன்றாவது அணியில் இருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

இன்னொரு பக்கம், டிடிவி தினகரனின் அமமுக,
மூன்றாவது அணி அமைக்க பகீரத முயற்சி எடுத்து வரும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றை தனது தலைமையிலான அணியில் இணைத்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TTV dinakaran 01 updatenews360

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு 2021 தமிழக தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துவிட்டு பின்னர் அமைதி காத்து வந்த ஹைதராபாத் எம்பி ஒவைசியின் AIMIM கட்சி தற்போது களமிறங்கப் போவதாக உறுதிபட அறிவித்திருக்கிறது.

இதை ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்த ஒவைசி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பதை விரைவில் அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டார். கடந்த டிசம்பர் மாதம் அவருடைய கட்சி தமிழ்நாட்டில் 30 இடங்களில் போட்டியிடும் என்று அறிவித்திருந்தால் அந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்று நம்பலாம்.

அகில இந்திய அளவில் முஸ்லிம்களை ஒருங்கிணைத்து பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி ஆட்டம் காட்டுவதுதான் ஒவைசி கட்சியின் இலக்கு. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் சார்பில் 65 முஸ்லிம் எம்பிக்களையும், 25 மாநில சட்டப் பேரவைகளில் 400-க்கும் மேற்பட்ட முஸ்லிம் எம்எல்ஏக்களையும் உட்கார வைப்பேன் என்று உறுதிமொழி எடுத்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாகவும் ஈடுபட்டு வருகிறார், ஒவைசி.

owaisi_updatenews360

உருது பேசும் முஸ்லிம் மக்களிடம், செல்வாக்குப் பெற்றுள்ள ஒவைசி கட்சி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 5 இடங்களில் வென்று ஆச்சரியப்பட வைத்தது என்பதும்,
இக்கட்சியின் வெற்றியால்தான் லாலு பிரசாத் அமைத்த மெகா கூட்டணி நூலிழையில் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் குஜராத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்த கட்சி ஒரு கலக்கு கலக்கியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வார்டுகளில் கணிசமான வெற்றிகளையும் பெற்றது.

பீகார் தேர்தலில் அக்கட்சி எதிர்பாராத வெற்றி பெற்றதால், முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவர்களில் ஒருவராக உருவாகிவரும் ஒவைசியை தனது கூட்டணிக்கு இழுக்க திமுக முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருக்கும் இஸ்லாமிய கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவை பின்னர் திமுக கைவிட்டதாகவும் கூறுவார்கள்.

இதுதொடர்பாக இன்னொரு சர்ச்சையும் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் எழுந்தது. அந்த மாதம் 6-ந் தேதி சென்னையில் நடந்த திமுக சிறுபான்மையினர் பிரிவு மாநாட்டுக்கு ஒவைசி முதலில் நேரடியாக அழைக்கப்பட்டதாகவும், பின்னர் அவரை நாங்கள் அழைக்கவில்லை என்று திமுக பின் வாங்கியதாகவும் சொல்வார்கள்.

Owaisi Stalin -Updatenews360

ஒவைசியின் AIMIM கட்சி தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2016 தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இதில் வாணியம்பாடி தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று பாமக, பாஜக கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி 4-வது இடம் பிடித்தார். ஆனால் கிருஷ்ணகிரி தொகுதியில் அக்கட்சி வெறும் 200 வாக்குகள் மட்டுமே பெற்றது.

என்ற போதிலும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பரவலாக இக்கட்சி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது என்றும், குறிப்பாக வடமாவட்டங்களில் உருது பேசும் முஸ்லிம்களிடையே ஒவைசிக்கு தனி செல்வாக்கு உண்டு என்றும் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் பரவலாக வசிக்கும் தென் மாவட்டங்களிலும் ஓவைசி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கமல் அமைக்கும் மூன்றாவது அணியில் இக்கட்சி கைகோர்க்கும் என்று பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. அப்படி நடந்தால் மக்கள் நீதிமய்யம் அமைக்கும் 3-வது அணி மேலும் வலுவடையும்.

kamal - owaisi 1- updatenews360

முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தனது கட்சி போட்டியிடும் என்று ஒவைசி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், திமுக கூட்டணியில் இணைவதற்கு கடைசி நேரம் வரை தனக்கு அழைப்பு வரும் என்று அவர் காத்திருந்து இருக்கிறார் என்பதையும், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாததால் திமுகவுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தமிழகத்தில் போட்டி என்கிற அறிவிப்பை ஒவைசி வெளியிட்டிருக்கிறார், என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

Views: - 1

0

0