ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் கடும் பின்விளைவுகள்..! 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னையைச் சேர்ந்த நபர் நோட்டீஸ்..!

29 November 2020, 5:23 pm
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

சென்னையைச் சேர்ந்த வணிக ஆலோசகர் ஒருவர் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர், கடுமையான நரம்பியல் மற்றும் உளவியல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 40 வயதான இந்த நபர் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நடத்திய தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்டத்திற்கு தன்னார்வலராக இருந்தார். 

இந்நிலையில் 5 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் தடுப்பூசி பரிசோதனை, உற்பத்தி மற்றும் விநியோகத்தை உடனடியாக நிறுத்தி வைக்கக் கோரி, அந்த நபர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் சார்பாக ஒரு சட்ட நிறுவனம் தற்போது டைரக்டர் ஜெனரல், ஐ.சி.எம்.ஆர், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, தலைமை நிர்வாக அதிகாரி, அஸ்ட்ரா ஜெனெகா இங்கிலாந்து, பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை மற்றும் துணைவேந்தர் ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த நவம்பர் 21’ஆம் தேதி சட்ட நிறுவனம் வழங்கிய அறிவிப்பில், “அவரும் அவரது குடும்பத்தினரும் அனுபவித்த மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்களுக்கும் அவருக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று எங்கள் வாடிக்கையாளர் கூறுகிறார்.

அவர் உடல்நிலை இன்னும் மோசமான நிலையில் இருப்பதாகவும், நீண்ட காலமாக மருத்துவ கவனிப்பில் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். எனவே, அவர் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற எதிர்காலத்திற்கும், இந்த அறிவிப்பு கிடைத்ததிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அவருக்கு 5 கோடி ரூபாய் நிதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பரிசோதனை, உற்பத்தி மற்றும் தடுப்பூசி விநியோகம் ஆகியவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதைச் செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர்கள் அனைத்து செலவுகளுக்கும் மற்றும் விளைவுகளுக்கும் பொறுப்பாவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) மற்றும் செயல்படுத்தும் இடத்தில் உள்ள நிறுவன நெறிமுறைகள் குழு ஆகியவை இது குறித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக அக்டோபர் 1’ம் தேதி சோதனை தளங்களில் ஒன்றான சென்னையின் ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0