PACL மோசடி… 8 வருஷம் ஆச்சு… அப்பாவி மக்களின் பணத்தை மீட்டுக் கொடுங்க : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2024, 1:38 pm
Anbu
Quick Share

PACL மோசடி… 8 வருஷம் ஆச்சு… அப்பாவி மக்களின் பணத்தை மீட்டுக் கொடுங்க : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

“இந்தியா முழுவதும் சுமார் 6 கோடி மக்களிடமிருந்து அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, ரூ.60 ஆயிரம் கோடியை வசூலித்து ஏமாற்றிய பி.ஏ.சி.எல் நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு பணத்தை மீட்டுத் தர உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 8 ஆண்டுகள் ஆகியும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது பெரும் கவலையளிக்கிறது. அப்பாவி மக்களின் முதலீட்டை மீட்டுத் தருவதில் மத்திய. மாநில அரசுகளின் செயலாக்க அமைப்புகள் காட்டும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு நிர்மல்சிங் பாங்கு என்பவரால் கடந்த 1983 ஆம் ஆண்டில் பேர்ல்ஸ் கிரீன் ஃபாரஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், பின்னர் 1996 ஆம் ஆண்டு அதன் பெயரை பேர்ல் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.ஏ.சி.எல்) என்றும், தலைமையிடத்தை தில்லிக்கும் மாற்றிக் கொண்டது.

நாடு முழுவதும் நிலத்தை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருவதாகவும், முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 12.50% வட்டி வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்தது. அதை நம்பி, நாடு முழுவதும் 5.85 கோடி மக்கள், ரூ.49,100 கோடி முதலீடு செய்தனர்.

பின்னர் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 6 கோடியாகவும், முதலீட்டின் அளவு ரூ.60,000 கோடியாகவும் அதிகரித்தது. பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் செயல்பாடுகள் சட்டவிரோதமாக இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பிஏசிஎல் நிறுவனம் செயல்பட தடை விதித்தது.

இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் செபி அமைப்புக்கு ஆணையிட்ட உச்சநீதிமன்றம், நிறுவனத்தின் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணத்தைத் திருப்பித் தர உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் குழு அமைத்தது.

ஆனால், அதன்பின் 8 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், ரூ.10,000க்கும் குறைவாக முதலீடு செய்த 12 லட்சம் பேருக்கு மட்டும் தான் ரூ.429.13 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. இது மோசடி செய்யப்பட்ட பணத்தில் 1%க்கும் குறைவான தொகையாகும்.

மீதமுள்ள முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணத்தை மீட்டுத் தருவதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. பி.ஏ.சி.எல் நிறுவனம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் மொத்தம் 1.83 லட்சம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்திருக்கிறது.

இவை தவிர ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நிறுவனத்திற்கு சொத்துகள் உள்ளன. அவற்றை விற்பனை செய்தால், அந்தப் பணத்தைக் கொண்டு, முதலீட்டாளர்களின் பணத்தை முழுமையாக திருப்பித் தர முடியும்.

அதற்கான முயற்சியில் லோதா குழு ஈடுபட்டிருந்தாலும் கூட, பல இடங்களில் பிஏசிஎல் நிறுவனத்தில் சொத்துகள் சட்டவிரோதமான விற்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் பி.ஏ.சி.எல் நிறுவனத்திற்கு சொந்தமாக திருச்சி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் 8198 சொத்துகள் உள்ளன.

அவற்றில் 5300 ஏக்கர் பரப்பளவிலான 237 சொத்துகள் சட்டவிரோதமான விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பல மாநிலங்களிலும் நடந்திருப்பது பின்னடைவு ஏற்பட்டிருப்பதற்கான காரணம் ஆகும்.
பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் முதலீடு செய்த 6 கோடி பேரில் சுமார் 1 கோடி பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறைந்த அளவு ரூ.2500 முதல் ரூ.10 லட்சம் வரை அவர்கள் முதலீடு செய்திருக்கின்றனர். அவர்களில் பலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் முதலீடு செய்தவர்கள் ஆவர். முதலீடு செய்து 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணம் திரும்பக் கிடைக்காத நிலையில், கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களின் திருமணம், மருத்துவச் செலவுகள் ஆகியவற்றுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். முதலீட்டை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் இல்லை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

மத்திய, மாநில அரசுகளின் சட்ட செயலாக்க அமைப்புகள் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட்டால் தான் பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திரும்பத் தர முடியும்.

எனவே, அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டின் 1 கோடி குடும்பங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 6 கோடி குடும்பங்களை பொருளாதார சீரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Views: - 225

0

0