தேனியில் போட்டியா…? ஆளை விடுங்கப்பா…ஓட்டம் பிடித்த காங்., மதிமுக!

Author: Babu Lakshmanan
18 March 2024, 9:17 pm
Quick Share

திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் 9 தொகுதிகள் எவை எவை என்பது கடந்த ஒரு வாரமாக மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆக இருந்து வந்தது. அதற்கு மார்ச் 18ம் தேதியான இன்று திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் பெரிய முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.

திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி,
கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரம் காங்கிரசுக்கு தேனி ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
அந்த தொகுதியை திமுக எடுத்துக் கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

மேலும் திருச்சி தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கும் இந்த அறிவிப்பின் மூலம் ஒரு தெளிவான விடை கிடைத்துவிட்டது. அங்கு மதிமுக போட்டியிடும் என்று ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது தற்போதைய எம்பியான திருநாவுக்கரசருக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கும் ஒன்றுதான். இருந்தபோதிலும் காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ள மயிலாடுதுறை தொகுதிக்கு பதிலாக திருச்சியை எப்படியும் கேட்டு பெற்று விடலாம் என்ற நம்பிக்கை அவரிடம் உள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அதில் உள்ள திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை ஆகிய ஐந்து சட்டப் பேரவை தொகுதிகளும் திமுக வசம் உள்ளது. எஞ்சிய கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியிடம் இருக்கிறது.

இப்படி ஐந்து தொகுதிகள் தங்களிடம் உள்ள நிலையிலும் திமுக களமிறங்காமல் கூட்டணி கட்சிகளிடம் தள்ளிவிட முடிவு செய்திருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சீனியர் அமைச்சர் கே என் நேரு, உதயநிதியின் ஆதரவு அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி சிவா எம் பி, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகிய நால்வருமே தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருபவர்கள் என்பது திருச்சி மக்கள் அனைவரும் அறிந்த விஷயம்.

இத்தொகுதியில் திமுகதான் போட்டியிடும் என்று அறிவித்தால், கட்சியில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும் தங்களது ஆதரவாளர்களுக்குதான் எம்பி சீட் வழங்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த நான்கு பேரின் ஆதரவாளர்கள் யாராவது ஒருவருக்கு தொகுதியை ஒதுக்கினாலும் சிக்கல் ஏற்படலாம் என்று கருதித்தான், அதை சமாளிக்கும் விதமாகவே திருச்சி தொகுதியை கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு அறிவாலயம் ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம் தற்போதைய எம்பியான திருநாவுக்கரசருக்கு திருச்சியை தரவே கூடாது. அவர் நின்றால் தோற்பது நிச்சயம் என்று மாவட்ட திமுக நிர்வாகிகளே போர்க் கொடி உயர்த்தியதால்தான் கட்சித் தலைமை திருச்சியை அவருக்கு கொடுக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

மேலும் கரூர் ஜோதிமணி, திருவள்ளூர் ஜெயக்குமார், கிருஷ்ணகிரி செல்லகுமார் ஆகியோருக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்கக் கூடாது என்று திமுக தலைமை கண்டிப்பாக கூறியதும் தோல்வி பயம் காரணமாகத்தான் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் திருச்சியை குறிவைத்து செயல்பட்டு வந்த திருநாவுக்கரசர் எம்பி தொகுதியில் ஏற்கனவே 790 பூத் கமிட்டிகளை அமைத்து தேர்தல் பணிகளை தொடங்கியும் விட்டார். இந்த நிலையில்தான் இன்று திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்திருப்பது திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துவிட்டது.

அவருடைய ஆதரவாளர்களோ “நாங்கள் இங்கு ஆறு மாதத்துக்கு முன்பே களப்பணி ஆற்றத் தொடங்கி விட்டோம். ஏனென்றால் எங்கள் அண்ணன் 2019 தேர்தலில் இங்கே ஐந்தரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருடைய சொந்த மாவட்டமான புதுக்கோட்டையும், அதில் உள்ள கந்தர்வக் கோட்டையும் திருநாவுக்கரசருக்கு மிகவும் பரிச்சயமானவை. அதனால் கடந்த தேர்தலை விட அவரால் இன்னும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும். வைகோவின் மகனும் இந்த தொகுதியை குறி வைத்தார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

பேசாமல் அவர் தேனி தொகுதியை கேட்டு வாங்கி போட்டியிடலாம். தென் மாவட்டத்தில் மதிமுகவுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் வலுவான ஓட்டும் துரை வைகோவுக்கு தேனியில் வெற்றியைத் தரும். எனவே திருச்சியில் திருநாவுக்கரசர் போட்டியிட விரும்பியதை தடுத்து இருக்கக் கூடாது” என்கின்றனர்.

அதேநேரம் வைகோவின் மகன் துரை வைகோ திருச்சியில் தங்கி இருந்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தில்லைநகர் மற்றும் கேகே நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.

மதிமுக நிர்வாகிகளோ, “2009 தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆரூண் ரஷித் வெற்றி பெற்றார். அப்படி இருக்கும்போது தேனியை காங்கிரசுக்கு ஒதுக்கினால் அதை ஏன் திருநாவுக்கரசர் மறுக்கவேண்டும். அவர் எங்களைக் குறி வைத்துக் கொண்டே இருந்தார். இப்போது அவர் மயிலாடுதுறைக்கோ அல்லது நெல்லைக்கோ செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது” என்று ஆவேசமாக கூறுகின்றனர்.

தேனி தொகுதியை பொறுத்தவரை அதை திமுக ஒரு மிகப்பெரிய சவாலாகவே எடுத்துக் கொண்டுள்ளது. ஏனென்றால் தேனி தொகுதியில் இந்த முறை கடுமையான மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணி சார்பில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் களமிறங்குவார் என்று தெரிகிறது.

இண்டியா கூட்டணியில் இருந்து விலகி அதிமுக பக்கம் வந்திருக்கும் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு தேனி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகளிலும் முக்குலத்தோர் சார்ந்த கணிசமான வாக்கு வங்கி உண்டு. இது தவிர அதிமுகவுக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது.

இத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் களமிறங்குவது உறுதி என்கின்றனர். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி அடங்கிய பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்தான் டிடிவி தினகரன். அதனால்தான் அவர் இந்த முறை தேனியில் போட்டியிட விரும்புகிறார். அவரும் முக்குலத்தோரின் வாக்குகளை பெரிதும் நம்புகிறார். அவருக்காக தேனி தொகுதியின் தற்போதைய எம் பியான ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் கூட மீண்டும் இங்கே போட்டியிடாமல் விட்டுக் கொடுத்து விட்டு சிவகங்கைத் தொகுதியில் களமிறங்குகிறார் என்று கூறப்படுகிறது.

2017ல் ஆர் கே நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அத்தனை விதமான தேர்தல் நெளிவு சுழிவுகளையும் அறிந்தவர். அந்த வித்தைகளை இம்முறை தேனி தொகுதியிலும் அவர் காட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் இரு பெரும் மலைகளுக்கிடையே நாம் போய் சிக்கிக் கொள்ள வேண்டுமா? என்று திருநாவுக்கரசரும், துரை வைகோவும் அஞ்சி இருக்கலாம். அதனால்தான் தேனி தொகுதியே எங்களுக்கு வேண்டாம் என்று இருவரும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே தேனி தொகுதியில் தற்போது திமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளது. அங்கு அக்கட்சி சார்பில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர் 2018ம் ஆண்டுக்கு முன்புவரை அமமுகவில் டிடிவி தினகரனுக்கு வலதுகரமாக திகழ்ந்தவர். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தொகுதி முழுக்க இவருக்கு நல்ல அறிமுகமும் உண்டு. அதிமுக சார்பில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து மூன்று முறை தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

எனவே அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் கதிரவனுக்கும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கும் கடுமையான சவால் அளித்து வெற்றி பெறக் கூடியவராக தங்க தமிழ்ச்செல்வன் இருப்பார் என்று திமுக தலைமை கருதுகிறது.

அதனால்தான் மதிமுகவும் காங்கிரசும் போட்டியிட தயங்கிய தேனி தொகுதியை திமுக துணிந்து தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Views: - 101

0

0