சோனியாவுக்கு இறுதி கெடு விதித்த மம்தா…! திமுக மீது திரிணாமுல் காங்., நம்பிக்கை…!! ஸ்டாலின் யார் பக்கம்..?

Author: Babu Lakshmanan
27 October 2021, 6:13 pm
Stalin - updatenews360 (2)
Quick Share

2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு, எந்தக் கட்சி தயாராகிவிட்டதோ, இல்லையோ, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இப்போதே புலிப்பாய்ச்சல் காட்டி வருகிறது.

முந்தும் மம்தா..

இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், ஒவைசி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 18 கட்சிகள் மத்திய பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுதான்.

Mamata 5 Lakhs - Updatenews360

இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தமிழகம்,மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்று பெரிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி கிடைத்தது.

அதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்று மம்தா பானர்ஜி அப்போது கூறினார்.

கைகோர்ப்பு

மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டம், பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் போன்றவற்றில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டன. கடும் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கவும் செய்தன. இதே ஒற்றுமையுடன் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவும் குறிப்பிட்டனர். இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் கருதப்பட்டது.

mamata - sonia -updatenews360

இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 5 நாள் பயணமாக டெல்லி வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அங்கு சோனியா, ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், திமுக எம்பி கனிமொழி ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவேண்டும். தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருந்தாலும் கூட இப்போதே இது குறித்து எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

போன் மூலம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சரத்பவாரும் இதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

பிரதமர் வேட்பாளர்

இதனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் ஒருவரை பாஜகவுக்கு எதிராக அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இது குறித்து விரைவில் தங்களது முடிவை தெரிவிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு மம்தா வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

ஆனால் 6 மாதங்கள் ஆகியும் இந்த விஷயம் கிணற்றுக்குள் போட்ட கல் போல ஆகிப்போனதால் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எரிச்சல் அடைந்துள்ளது. அதனால், எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் பெரிய அளவில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்ததற்கு முக்கிய காரணமாக ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. மேற்கு வங்க தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக பெரும் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்த பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை எதிர்க் கட்சிகள் அறிவிக்கவேண்டும் என்ற நிபந்தனையை திரிணாமுல் காங்கிரஸ் வைத்ததுதான் என்கிறார்கள்.

Mamata_Banerjee_UpdateNews360


     
இந்நிலையில், அக்கட்சியின் தலைவா்களில் ஒருவரான சுகேந்து சேகா் ராய் நேற்று டெல்லியில் செய்தியாளா்களிடம் கூறும் போது, “எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தில் அனைத்து முக்கிய எதிா்க்கட்சிகளின் தலைவா்களையும் மம்தா பானா்ஜி சந்தித்துப் பேசினாா். ஆனால், அதன் பிறகு அந்தக் கட்சிகளிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை எடுத்த ஒரே தலைவா் மம்தா மட்டுமே. அவா் கௌரவம் பார்க்காமல் சோனியா உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் அனைவருடனும் தாமாகாவே முன்வந்து சந்தித்துப் பேசினாா். ஆனாலும், அக்கட்சிகள் உரிய பதிலளிக்காமல் உள்ளன. இது எங்களுக்கு வேதனை தருவதாக உள்ளது. நாங்கள் 6 மாதம் வரை காத்திருந்துவிட்டோம்.

இனி மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பதிலுக்காக காத்திருக்க முடியாது என்பதால்தான் பிற மாநிலங்களிலும் எங்கள் கட்சியை வலுப்படுத்தும் பணியைத் தொடங்கி விட்டோம். காங்கிரசில் உட்கட்சி பிரச்னையைத் தீா்ப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. இனிமேல் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தில் இணைவதா? வேண்டாமா?… என்பதை காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள்தான் முடிவு செய்யவேண்டும்” என்றாா்.

தள்ளிப்போட்ட காங்.,

ஆனால் காங்கிரஸ் கட்சியோ அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற இருக்கும் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது பற்றி யோசித்து முடிவெடுக்கலாம் என்னும் நிலையில் உள்ளது.

இந்த மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றிவிட்டால் எதிர்க்கட்சிகளிடம் அடிபணிந்து போகும் நிலை தங்களுக்கு ஏற்படாது என்று சோனியா நம்புகிறார்.

Sonia_Gandhi_UpdateNews360

அதன் ஒரு பகுதியாகத்தான் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையாக நவம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்கள் உள்பட
4 கோடிப் பேரை உறுப்பினர்களாக சேர்க்க கட்சி மேலிடம் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

அக்கட்சியில் புதிதாக உறுப்பினராகச் சேர்வோருக்கு மதுப் பழக்கம் இருக்கக் கூடாது, போதைபொருள் பயன்படுத்தக்கூடாது, கட்சியை ஒருபோதும், பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக்கொண்டால்தான் கட்சியில் உறுப்பினர் அட்டை கிடைக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக, இளம் பெண்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

நாம் பிரதமர் வேட்பாளர் பற்றி பேசினால், அதற்கு பதில் சொல்லாமல் காங்கிரஸ் இழுத்தடிக்கிறதே என்று அக்கட்சி கடுப்பில் உள்ளது. இதை முன்கூட்டியே ஓரளவு யூகித்து விட்டதால்தான் உத்தரப்பிரதேசம் அசாம் திரிபுரா கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாகிகளை சமீபகாலமாக திரிணாமுல் காங்கிரஸ் வளைத்துப் போட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநில தேர்தலிலும், மம்தாவின் கட்சி களமிறங்க முடிவு செய்துள்ளது.

திமுக மீது நம்பிக்கை

இதுகுறித்து டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம் திரிபுரா, கோவா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனது கட்சியால் 70 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெற முடியும் என்று மம்தா கணக்குப் போடுகிறார். வேறு எந்தக் கட்சிக்கும் இத்தனை இடங்கள் கிடைக்காது என்பதால் தன்னை விட்டால் வேறு யாரும் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவராக இருக்க மாட்டார்கள் என்றும் மம்தா கருதுகிறார்.

மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,
தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதாதளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் தங்களை ஆதரிக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ் நம்புகிறது. அதனால் எதிர்க்கட்சி தலைவர்களிடம் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மூலம் ஆதரவு பெறுவதற்கு மம்தா காய் நகர்த்தி வருகிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாத நிலையில்
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தன்னால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று மம்தா பானர்ஜி உறுதியாக நம்புகிறார்.

அதற்காகத்தான் திரிணாமுல் காங்கிரஸ் இப்போதே களத்தில் இறங்கி விளையாடத் தொடங்கிவிட்டது. எங்கள் அணிக்கு வருகிறீர்களா? இல்லையா?… கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறோம் என்பதுபோல காங்கிரசுக்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது.

அதேநேரம் 5 மாநிலத் தேர்தல்கள் நடந்து முடிவுகள் தெரியாதவரை மம்தாவுக்கு, எந்த விதத்திலும் காங்கிரஸ் பிடி கொடுக்காது. மம்தா அவசரப்படுத்துவதால் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் மாநிலக் கட்சிகளில் பல குழம்பிப்போய் உள்ளன என்பதும் உண்மை”என்று அந்த அரசியல் ஆலோசகர்கள் தெரிவித்தனர்.

Views: - 217

0

0