கட்சியின் பலத்தை நிரூபிக்கும் சின்னங்கள் : எம்ஜிஆரை வீழ்த்திய இரட்டை இலை!!

20 April 2021, 4:16 pm
MGR - cover -updatenews360
Quick Share

ஒரு அரசியல் கட்சி வேகமாக வளர்ச்சி காண வேண்டுமென்றால், அதன் தலைவர்களும் மக்களால் நன்கு அறியப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த கட்சி இன்னும் துரிதமாக முன்னேற்றம் காணும். இந்த இரண்டுடன் தேர்தலை சந்திப்பதற்கு மக்கள் மனதில் பளிச்சென்று எளிதில் பதியும் சின்னங்களும் தேவை.

நமது நாட்டில் தேர்தலில் சின்னங்கள் பயன்படுத்தப்படுவது 1952 பொதுத்தேர்தலில் அறிமுகமானது. அந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு நுகத்தடியில் பூட்டிய இரட்டை மாடுகள் சின்னமும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரிவாள் சுத்தியல் சின்னமும் இருந்தது. இவைதான் நாடு முழுவதும் அந்தத் தேர்தலில் அறிமுகமான பிரபல சின்னங்களாக இருந்தன. அதே ஆண்டு சென்னை மாகாண சபைக்கு நடந்த தேர்தலிலும் இந்த இரண்டும்தான் பிரதான சின்னங்கள்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப் பட்டாலும் கூட சின்னங்கள் இல்லாமல் பச்சை, சிவப்பு, ஊதா, மஞ்சள் என பல்வேறு வித நிறங்கள் கொண்ட பெட்டிகள் வைக்கப்பட்டு அதில் வாக்குச்சீட்டுகளை அவரவருக்கு பிடித்த வண்ண நிற பெட்டியில் போடுவதுதான் தேர்தல் நடைமுறையாக இருந்தது.

இப்போதுள்ள பாரதிய ஜனதா, 1952ல் பாரதிய ஜன சங்கம் என்று அழைக்கப்பட்டது. அன்று மக்களிடையே அவ்வளவு பரிச்சயம் இல்லாத கட்சியாக திகழ்ந்த பாரதிய ஜன சங்கத்தின் தேர்தல் சின்னம் எண்ணை விளக்கு ஆகும்.

மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை தமிழகத்தில் 1957-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு சுயேச்சைகளுக்குரிய சின்னங்கள்தான் ஒதுக்கப்பட்டது. அப்போது அண்ணா சேவல் சின்னத்திலும், கருணாநிதி உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

விடியலை ஏற்படுத்தும் சூரிய உதயத்தை குறிக்கும் விதமாக 1962 தேர்தலில் உதயசூரியனை அண்ணா நிரந்தர சின்னமாக தேர்வு செய்தார். அப்போது முதல் திமுகவின் சின்னமாக உதயசூரியன் உள்ளது.

DMK -Updatenews360

1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டது. அப்போது புதிதாக உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கதிர் அரிவாள் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

1969-ல் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டது. அப்போது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸுக்கு பசுவும் கன்றும் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஸ்தாபன காங்கிரஸ் என்னும் பழைய காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1978-ல் காங்கிரஸ் மீண்டும் பிளவுபட்டபோது இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் கை சின்னத்தை கேட்டு பெற்றது. அதன்பிறகு காங்கிரசின் தேர்தல் சின்னம் மாறவேயில்லை.

flags_bjp_congress_updatenews360

இதற்கிடையே, 1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜன சங்கம், மொரார்ஜி தேசாய் தலைமையிலான எதிர்க் கட்சிகளின் கூட்டணியான ஜனதா கட்சியுடன் இணைந்து ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிட்டது.1980-ம் ஆண்டு பாரதிய ஜனதா தொடங்கப்பட்டபோது, அக்கட்சிக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த 41 ஆண்டுகளாக நாடு முழுவதும் அக்கட்சியின் சின்னமும் இதுவரை மாறவில்லை.

1972-ம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது மறு ஆண்டு நடந்த திண்டுக்கல் தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்திக்க நேரிட்டது. அப்போது அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சின்னங்களில் ஒன்றான இரட்டை இலையை தேர்ந்தெடுத்தார். அதற்கு மாயத்தேவர் கூறிய காரணம், “இரட்டை இலையை சுவர்களில் எளிதாக வரைய முடியும் என்பதால் இந்த சின்னத்தை தேர்ந்தெடுத்தேன்” என்பதாகும்.

அச்சின்னம் ஆங்கிலத்தில் வெற்றியைக் குறிக்கும் வகையில் கூறும் “வி பார் விக்டரி” என்பதுபோல் இருந்ததால் இரட்டை இலை சின்னம் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. அவர், இரு விரல்களை காண்பித்து பிரச்சாரம் செய்வதற்கு மிக வசதியாகவும் இது அமைந்துவிட்டது.

அதன்பிறகு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த சந்தர்ப்பங்கள் தவிர, மற்ற நேரங்களில் தமிழ்நாட்டில்
2 விரல்களை காட்டி தேர்தல் பிரச்சாரம் செய்தே கிடையாது.

1977 சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் எம்ஜிஆருக்கே ஒரு இனிய அதிர்ச்சியை அளித்தது.

அந்தத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அய்யாசாமி என்பவரை முதலில் எம்ஜிஆர் அறிவித்தார். பிறகு கடைசி நேரத்தில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டார். அய்யாசாமிக்கு பதிலாக அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை எம்ஜிஆர் வேட்பாளராக நிறுத்தினார். ஆனால் அய்யாசாமி முறைப்படி மனுவை தாக்கல் செய்திருந்தபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான அங்கீகார கடிதத்தையும் கொடுத்திருந்தார். அதை அவர் திரும்பப் பெறுவதற்குள் தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து விட்டன.

இதனால் அய்யாசாமி இரட்டை இலையிலும், எம்ஜிஆர் அறிவித்த அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன் சிங்கம் சின்னத்திலும் போட்டியிட நேர்ந்தது.

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த நிலையில் தாராபுரம் வந்த எம்ஜிஆர், “இந்த தொகுதியில் யாரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டாம். இந்த தொகுதியில் நமது சின்னம் சிங்கம். எனவே சிங்கம் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்” என்று தீவிர பிரச்சாரமும் செய்தார்.

ஆனால் இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு மட்டும், எம்ஜிஆருக்கு சாதகமாக அமையவில்லை. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அய்யாசாமி 2682 ஓட்டு வித்தியாசத்தில் 2-வதாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் சிவலிங்கத்தை தோற்கடித்தார். அதிமுகவின் அதிகாரப் பூர்வ வேட்பாளர் பாலகிருஷ்ணன் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இத்தனைக்கும் அய்யாசாமி வேட்புமனு தாக்கல் செய்ததுடன் சரி. எம்ஜிஆரின் வேண்டுகோளை ஏற்று பிரச்சாரம் செய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admk leaf - updatenews360

இதுபற்றி பின் நாட்களில் எம்ஜிஆர், தனது சக அமைச்சர்களிடம் பெருமிதத்துடன், “தாராபுரத்தில் இரட்டை இலை என்னை வீழ்த்தி விட்டதே” என்று வேடிக்கையாக கூறி சிரிப்பதும் உண்டு.

இப்படி ஒரு தலைவர் கட்சியின் தலைவர் சொன்னதையும் மீறி மக்கள் வாக்களித்தார்கள் என்றால் அதுதான் இரட்டை இலையின் மகத்துவம்.

இது போன்றதொரு அபூர்வ வெற்றி இந்தியாவில் மட்டுமல்ல, வேறு எந்த நாட்டிலும் எந்த கட்சிக்கும் கிடைத்திருக்குமா?என்பது சந்தேகம்தான்!

1987 டிசம்பரில் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டதால் இரட்டை இலை சின்னம் சுமார் இரண்டரை ஆண்டு காலம் முடக்கி வைக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Views: - 94

0

0