சாதி – மதம், தலைவர்கள் குறித்து அவதூறு பேச்சு.. சர்சைப் பேச்சில் சிக்கி தலைமறைவான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2021, 9:03 am
George Ponniah -Updatenews360
Quick Share

இந்து மதம் மற்றும் அரசியல் தலைவர்களைப் பற்றி அவதுாறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார்.

குமரி மாவட்டம் அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சீல் வைக்கப்பட்டது. இதை கண்டித்து அருமனையில் ஜூலை 18ல் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், தி.மு.க., வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது என்றதுடன், பிரதமர் மோடி, அமித் ஷா பற்றி அச்சிட முடியாத வார்த்தைகளாலும் விமர்சித்தார்.அவர் மீது தமிழகம் முழுதும் பல இடங்களில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அருமனை போலீசார், அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், பாதிரியார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘நான் பேசியது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. என் ஹிந்து சகோதர, சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர்ப்போம்’ எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் பாதிரியார் கைது செய்யப்படவில்லை. திடீரென அருமனையில் டி.ஐ.ஜி., பிரவின்குமார் தலைமையில் போலீசார் முகாமிட்டனர்.

இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கடல் வழியாக படகில் தப்பி விட்டதாகவும், முன்ஜாமின் கிடைத்த பின்தான் ஊர் திரும்புவார் எனவும் கூறப்பட்டது. பாதிரியாரை உடனடியாக கைது செய்யா விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாக, ஹிந்து மகா சபா உள்ளிட்ட பல அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில் மதுரை அருகே கள்ளிக்குடியில் வைத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாக கைது செய்யப்பட்டுள்ளார். 7 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய கோரி பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது குறிப்பிடதக்கது.

Views: - 225

1

0