அத்தியாவசிய பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு… பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசு முன்வருமா..?

17 June 2021, 9:59 pm
dmk petrol - updatenews360
Quick Share

எப்போதெல்லாம் பணத்தின் மதிப்பு குறைகிறதோ, அப்போதெல்லாம் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்காது, என்பது பொருளாதார விதி. அதாவது பொருட்களின் விலை கிடுகிடுவென உயரும்போது அதை வாங்குவதற்கு நுகர்வோர் கூடுதலாக பணத்தை செலவிட நேரும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை, அத்தியாவசிய பொருட்களின் தேவை பல்வேறு மாநிலங்களை சார்ந்ததாக உள்ளது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு சரக்குகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது போக்குவரத்துக்கு தேவையான பெட்ரோல், டீசல் போன்றவையும் பொருட்களின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பணவீக்கமும்.. விலை உயர்வும்..!!

அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி குறைந்தாலும் தேவை அதிகரித்து பொருட்களின் விலை உயர்ந்து விடும். பொருட்கள் ஒரே இடத்தில் தேக்கமடைந்து கிடந்தாலும் அல்லது பதுக்கப்பட்டாலும் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து விலை பல மடங்கு உயர்ந்து விடும்.

இந்த நிலையில்தான் டெல்லியில் உள்ள தேசிய புள்ளியியல் துறை அலுவலகம் அண்மையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக நாட்டின் பணவீக்க அளவு காணப்படுகிறது.

அதாவது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த குறியீட்டு அளவையும் கடந்து மொத்த விற்பனை விலை 12.94 சதவீதமும், அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விற்பனை விலை உயர்வு 6.3 சதவீதமும் கடந்த 6 மாதங்களில் அதிகரித்திருக்கிறது.

Petrol Pirce - Updatenews360

இதில் பெட்ரோல், டீசல் விலை 37.61 சதவீதமும் உணவு பொருட்களின் விலை 6.3 சதவீதமும், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு போன்ற முக்கிய பருப்பு வகைகளின் விலை 9.39 சதவீதமும், சமையல் எண்ணெய் 30 சதவீதமும் வெங்காயத்தின் விலை 23.24 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு கிராமப்புறங்களில் 6.5 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில்
6 சதவீதமாகவும் காணப்படுகிறது.

இரு பெரும் சவால்கள்

தவிர கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஏப்ரல் மாதத்தைவிட மே மாதத்தில் மட்டும் இந்த பொருட்களின் விலை மிக அதிகபட்சமாக 4.2 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

இதற்கெல்லாம் முக்கியக் காரணம் கொரோனா கால ஊரடங்கு ஒரே நேரத்தில் நாட்டின் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மே மாதம் நடைமுறைக்கு வந்ததுதான், என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பணவீக்கம் இப்படி ஊதிப் பெருத்துப் போனதில் 50 சதவீத பங்கு கொரோனாவுக்கும் உண்டு.

Coronavirus_NIAID_UpdateNews360

இதனால் மத்திய, மாநில அரசுகளின் முன்பாக இரு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. முதலில் கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதைத்தொடர்ந்து, ஊரடங்கை நிலைமைக்கு ஏற்ப தளர்த்தி சரக்கு வாகனப் போக்குவரத்தை முழுமையாக செயல்படுத்துவதில் முனைப்பு காட்டவேண்டும் என்பது மிக முக்கிய அம்சங்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சமையலுக்கு அத்தியாவசிய தேவையான பருப்பு மற்றும் எண்ணெய் வகைகள், பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்தே வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இதேபோல் பெரிய வெங்காயம் மராட்டிய மாநிலத்தில் இருந்து பெறப்படுகிறது.

சில்லறை விலை மட்டுமே உயர்வு :

இதுகுறித்து தமிழக வணிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “கொரோனா ஊரடங்கு காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய அத்தியாவசிய பொருட்களும், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய பொருட்களும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் சரக்கு வாகன போக்குவரத்து இன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி விட்டது.

INFLATION-UPDATENEWS360

தேசிய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களில்படி மொத்த சில்லறை விலை 6.5 சதவீதம் மட்டுமே உயர்வு கண்டிருப்பதாக கூறப்படுள்ளது. ஆனால் நடைமுறையில் பார்த்தால் ஒவ்வொரு பொருட்களின் விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்திருப்பது தெரியும்.

விலை குறிப்பு எங்கே?

கிராமப்புற மக்களால் இத்தகைய விலை உயர்வு என்பது நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று.தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது, மாநில அரசின் கடமையாகும். திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதேபோல் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நிரந்தரமாக கட்டுக்குள் வைக்கப்படும் என்றும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

Stalin - Updatenews360

இதில் இரண்டாவது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றுவது அவ்வளவு சாத்தியமில்லை அனைவரும் அறிந்த விஷயம். மாநிலத்தின் நிதி நிலையை சீரமைத்த பின்பே இதுபற்றி தமிழக அரசு சிந்திக்கலாம்.

அதேநேரம் பெட்ரோல் லிட்டருக்கு விலை 5 ரூபாய், டீசல் 4 ரூபாய் குறைப்பு என்பதை தேர்தல் வாக்குறுதிப்படி உடனடியாக திமுக அரசால் நிறைவேற்ற முடியும். தமிழக மக்களை விலை உயர்வு பாதிக்காத வகையில் பாதுகாக்க வேண்டுமென்றால் இதை மட்டும் நடைமுறைப்படுத்தினாலே போதும். இன்னும் 6 மாதங்களுக்கு விலை உயர்வு இல்லாமல் கட்டுப்படுத்த முடியும்.

தற்போது, தமிழக அரசு இரண்டாவது தவணை கொரோனா கால நிவாரண நிதியாக 2000 ரூபாயும், 14 வித அத்தியாவசியப் பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. இந்தப் பணமும், பொருளும் அதிக பட்சமாக ஒரு மாதத்திற்கு தாக்குப் பிடிக்கலாம். அதன் பிறகு மீண்டும் மக்கள் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காக கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். எனவே மக்களின் இப்போதைய உடனடி தேவை, பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதுதான்” என்று குறிப்பிட்டனர்.

விலை குறைப்பிற்கு ஒரே வழி…

சமூக ஆர்வலர்கள் சிந்தனை சற்று ஆழமாக உள்ளது. “கொரோனாவின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் பல வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்கள் சிறு கடைகள் அடியோடு மூடப்பட்டுவிட்டன. இதனால் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்து விட்டனர்.

இன்னும் பல தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக குறைத்தும் விட்டன. பெரும்பாலான மழலையர் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அவற்றில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியைகளின் வேலையும் பறிக்கப்பட்டு விட்டது

cash - updatenews360

வேலைவாய்ப்பும் பறிபோய்விட்டது, வருமானமும் குறைந்து போய்விட்டது, என்கிற நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ செலவிற்காக இன்று அல்லாட வேண்டிய பரிதாப நிலையும் உள்ளது. இதனால் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் லட்சக்கணக்கான குடும்பங்கள் தவியாய் தவித்து வருகின்றன.

தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வந்தால் ஏழை எளிய நடுத்தர மக்களின் நிலைமை படு மோசமாகி விடும். எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு முனைப்பு காட்டுவதுபோல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நிலை உருவாகும். இதற்காக பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும்.

இவ்விஷயத்தில் மத்திய அரசின் உதவியை மட்டுமே, எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் மாநில அரசும் விலையை கட்டுக்குள் வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பது நல்ல யோசனைதான். இதை திமுக அரசு நிறைவேற்றுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 229

0

0