பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டிப்பிடித்ததால் கொந்தளிப்பு… திமுக கூட்டணியில் நீடிக்குமா காங்கிரஸ்…?

Author: Babu Lakshmanan
20 May 2022, 2:48 pm
Quick Share

கட்டியணைத்து மகிழ்ச்சி

ராஜீவ் கொலை கைதியான பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த பின்பு தமிழகத்தில் அரசியல் சூழல் பெரிதும் மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, தமிழகத்திலுள்ள அத்தனை கட்சிகளும் வரவேற்றுள்ளன.
ஆனால் 31 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது தலைவர் ராஜீவ் காந்தியை ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பறிகொடுத்த காங்கிரஸ் மட்டும் வேதனையில் இருப்பது தெரிகிறது.

அதுவும் ஆளும் கட்சியான திமுகவும் விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சிகளும் பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடுவது அந்த கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின், பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்பு அளித்தது, மாநில காங்கிரஸ் தலைவர்களை மட்டுமின்றி டெல்லி மேலிட தலைவர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாட்சி இருப்பதுபோல் தெரிகிறது.

போராட்டம்

இந்த நிலையில்தான், வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அறவழி போராட்டத்தை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் முன்னெடுத்தது.

மாநில தலைவர் அழகிரி, சிதம்பரத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார்.

மீண்டும் கைது செய்க

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உச்சநீதிமன்றம் பேரறிவாளனை குற்றவாளி இல்லை எனக் கூறி விடுதலை செய்யவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தியதால்தான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? இது நியாயமற்ற செயல். 

Cbe KS Alagiri Byte - updatenews360

எங்களது கூட்டணிக் கட்சிகள் நிலைப்பாட்டில் மாறுபடுகிறார்கள் என்பதற்காக எங்களது கொள்கைகளைப் பற்றி அவர்கள் ஏன் என்று கேட்கப்போவதில்லை. அவர்கள் கொள்கைகளைப் பற்றி நாங்களும் பேசப் போவதில்லை. கொள்கை வேறு. கூட்டணி வேறு. ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது” என்றார்.

ஆனால் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த போராட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாநில துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் “விடுதலை செய்யப்பட்டவர் தியாகி அல்ல. அவர் ஒரு பயங்கரவாதி. கொலைக் குற்றவாளிகளை தமிழர்கள் என்று அடையாளம் காட்டி, அவர்களை விடுதலை செய்வது அபத்தமான ஒன்று.

இந்த பயங்கரவாதியை கொஞ்சுவதும் கட்டிப் பிடிப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் யாரும் இந்த விடுதலையை கொண்டாடவில்லை. இதை ஆதரிக்கும் கழகத்திடம் கேட்கிறேன். உங்கள் குடும்பத்தில், உங்கள் கழகத்தில் யாராவது இறந்தால் இப்படி கொண்டாடுவீர்களா?… பேரறிவாளனை மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளும் வரை போராடுவோம்” என்று ஆவேசப்பட்டார்.

ரத்தம் கொதிக்கிறது

தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன் பேசும்போது
“பேரறிவாளனை முதலமைச்சர் விமான நிலையத்தில் சந்தித்தது எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த காட்சியை பார்த்து எங்கள் ரத்தம் கொதிக்கிறது.
எங்கள் தயவால்தான் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கிறது. 30 தொகுதிகளில் ஆயிரம் ஓட்டுகளுக்கு குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அது எங்களுடைய ஓட்டுதானே?

ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியை ஒரு முதலமைச்சர் கட்டியணைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. திமுக எங்கள் கூட்டணியில் இருக்கிறது.
படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பதைப் போல தன்னுடைய தம்பி என்று எங்கள் தலைவர் ராகுலை கட்டிப் பிடிக்கிறார். அவரது தந்தை ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் தகர்த்த பேரறிவாளனையும் கட்டிப் பிடிக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் எங்கள் கேள்வி” என்று கொந்தளித்தார்.

தைரியம் உண்டா..?

இப்படி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கொந்தளிப்பதை பார்த்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரசுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். “உச்சநீதிமன்றம் பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருந்தாலும், தனது உத்தரவில் அவரை நிரபராதி என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Annamalai - Updatenews360

நிரபராதி விடுவிக்கப்பட்டது போன்று முதலமைச்சர் நடந்து கொள்கிறார். அவரது இந்த நடவடிக்கையை பார்த்தால் அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்துவிட்டுத்தான் அவர் முதலமைச்சராக பதவியேற்றாரா? என்ற சந்தேகம் எழுகிறது. பாஜகவை பொறுத்தவரை 7 பேருமே குற்றவாளிகள்தான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. சிறையில் இருந்து வெளி வந்திருப்பவர் கொண்டாடப்படக் கூடியவர் அல்ல. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. அக்கட்சிக்கு ஆளுமை இருக்குமானால் அது திமுக கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும். முன்னாள் பிரதமரை கொன்றவர்களை கொண்டாடும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பது தவறு” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த எதிர்பார்ப்பு, அண்ணாமலையிடம் மட்டுமன்றி தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அனைவரிடமும் எழுந்துள்ளது.

U-Turn

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தீர்ப்பு வெளியான அன்று, “உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்துவிட்டது. எனவே இது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். சட்டரீதியாக உச்ச நீதிமன்றம் நடந்து கொண்டிருப்பதால் இதை கட்சி மேலிடமும் ஏற்றுக்கொள்ளும்” என்று கூறிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் அற வழி போராட்டம் நடந்த நாளன்று திருச்சியில் அப்படியே ‘யூ டேர்ன்’ அடித்தார்.

“ஆளுநர் மீதான தவறினால், உச்சநீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி,பேரறிவாளனை விடுவித்துள்ளது. அவர் குற்றமற்றவர் என்றோ, நிரபராதி என்றோ விடுதலை செய்யவில்லை. சட்டத்தின்படி இது சரியென்றாலும் தர்மத்தின்படி தவறு.

Congress-DMK. There is no problem in the coalition interviewed by  Thirunavukar || காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை  திருநாவுக்கரசர் பேட்டி

இந்த விடுதலையை ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் விடுதலையை போல வெடி வெடித்து கொண்டாடுவது ஏற்புடையதல்ல. இதை கண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

காங்கிரசுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இணக்கமாக இருக்கிறார். கூட்டணி குறித்து ஸ்டாலின் தெரிவிப்பதே அதிகாரபூர்வமானது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை வைத்து திமுக-காங்கிரஸ் இடையே யாரும் விரிசலை ஏற்படுத்த முடியாது. இது வேறு. கூட்டணி என்பது வேறு” என்றார்.

கூட்டணியில் நீடிக்குமா..?

இது தொடர்பாக டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கும் ராஜீவ் கொலையாளிகளில் ஒருவரான பேரறிவாளனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கட்டித்தழுவியதும் அவருடைய விடுதலையை கூட்டணி கட்சியினர் கொண்டாடி மகிழ்வதும்தான், திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டுமா?வேண்டாமா? என்ற கேள்வியை தற்போது எழுப்பியிருக்கிறது. பேரறிவாளனை போல மற்ற 6 கொலையாளிகளும் விடுதலை செய்யப்பட்டால் காங்கிரஸ் இதில் இன்னும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

அதுபோன்றதொரு சூழலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி 2024 நாடாளுமன்றத் தேர்தலை தனித்து சந்தித்தால் 2014 தேர்தல் போலவே தமிழகத்தின் முடிவுகள் அமைய வாய்ப்பு உண்டு. அப்போது திமுகவும் காங்கிரசும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மாறாக அதிமுக 37 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதனால் அந்த ரிஸ்க்கை காங்கிரஸும் திமுகவும் துணிந்து எடுக்குமா? என்பது சந்தேகம்தான்.

Congress DMK - updatenews360

என்னதான் கே எஸ் அழகிரியும், திருநாவுக்கரசரும் கொள்கை வேறு கூட்டணி வேறு என்று கூறினாலும் கூட பேரறிவாளன் விடுதலையால் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் தற்போது எழுந்துள்ள மன உளைச்சல், கொந்தளிப்பு காரணமாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும் வாக்களிப்பதில் அவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை இப்போதே கணிக்க இயலாது.

என்றபோதிலும் இன்னும் ஓரிரு நாட்களிலேயே திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? இல்லையா? என்பதற்கு விடை கிடைத்துவிடும். ஏனென்றால் விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு ஓரிடத்தை திமுக ஒதுக்கி இருக்கிறது. அதை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொண்டால் கூட்டணி தொடர வாய்ப்புள்ளது. இல்லையெனில் கூட்டணி முறிவு ஏற்படலாம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சோனியாவும், ராகுலும் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 789

0

0