யாரை குறை சொல்றது… பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர பல மாநிலங்கள் எதிர்ப்பு : அதிருப்தியில் வாகன ஓட்டிகள்..!!

Author: Babu Lakshmanan
18 September 2021, 10:12 am
petrol bunk - updatenews360
Quick Share

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது, மருந்து பொருட்களுக்கான ஜிஎஸ்டி விலக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது :- கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விலக்கு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 15%ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.16 கோடி மதிப்பிலான தசைநார் சிதைவு நோய்க்கு வழங்கப்படும் 2 மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு 5% வரி குறைக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, அதனை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடியாது. ஸ்விக்கி, ஜொமோடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு டெலிவரிக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும், என்று கூறினார்.

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதாக மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு மாநிலங்களை ஆண்டு வருகின்றன. ஒரு புறம் போராட்டம் நடத்திக் கொண்டே, மறுபுறம் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் மீது வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தற்போது ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வரும் பெட்ரோல், டீசலை, ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரும்பட்சத்தில், விலை குறையும் வாய்ப்பு இருந்தது. ஆனால், வருவாய் இழப்பை விரும்பாத மாநில அரசுகள், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்துள்ள எதிர்ப்பால், தொடர்ந்து அதிக விலை கொடுத்தே பெட்ரோல், டீசலை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நெருக்கடி வாகன ஒட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

Views: - 224

0

0