ராகுல், மம்தாவை மோதவிட்ட PK : ஆட்டம் காணும் 2024 வியூகம்!
Author: Udayachandran RadhaKrishnan10 October 2021, 11:33 am
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு இதுபோதாத காலம் போலிருக்கிறது. கடந்த காலங்களில் ஆந்திரா, டெல்லி பஞ்சாப், மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்காக அவர் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றின.
PK காட்டில் மழை
இதனால் அவருடைய காட்டில் பண மழை பொழிந்தது, அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் அறிந்த விஷயம். இப்படி மாநில கட்சிகளுக்கு ஆலோசனை கூறிவந்த பிரசாந்த் கிஷோருக்கு திடீரென தேசிய அரசியல் மீது ஒரு ஆசை துளிர்விட்டது. அதை பேராசை என்றுகூட சொல்லலாம்.
2024 தேர்தலில் மோடி அரசை வீழ்த்தி காட்டுவேன் என்று மனதுக்குள் சபதம் எடுத்தாரோ என்னவோ, கடந்த சில மாதங்களாகவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி,காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி என மாறிமாறி சந்தித்துக் கொண்டிருந்தார்.
பிகேவுக்காக காத்திருந்த காங்கிரஸ்
இதனால் அவர் விரைவில் காங்கிரசில் சேர்க்கப்படுவார் என்ற தகவலும் ஊடகங்களில் பரவியது. 2024-ல் காங்கிரஸ் எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காக சமீபகாலமாக சில வியூகங்களையும் அவர் வகுத்துக் கொடுத்தார். இதனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதற்கு சோனியாவும் ராகுலும் கிரீன் சிக்னல் காட்டினர்.
பாஜகவை வீழ்த்த வலிமையான ஒரு ஆயுதம் கிடைத்து விட்டதாக கருதி எதிர்க்கட்சிகள் இதை கொண்டாடி மகிழ்ந்தன. அப்படியிருந்தும் கூட அவரை காங்கிரசில் சேர்க்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிகேவுக்கு காங்., மூத்த தலைவர்கள் எதிர்ப்பு
பஞ்சாபில் காங்கிரசின் கதி கந்தல் ஆனதற்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம், அவரை நம்பி ஒரு காரியத்தில் இறங்குவது ஆழம் தெரியாமல் காலை விடுவதுபோல ஆகி விடும் என்றும் அந்த தலைவர்கள் எச்சரித்தனர். அவர்களின் வாக்கு தற்போது அப்படியே பலித்து விட்டது.
பிகேவுக்கு கதவை மூடிய காங்கிரஸ்
கோவா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாக திகழ்ந்த லூயிசினோ பெலேரோ, காங்கிரஸில் இருந்து விலகி அண்மையில் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தபோது, பிரசாந்த் கிஷோர் என்னை திரிணாமுல் காங்கிரஸில் இணைய அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுத்தான் சேர்ந்தேன். என தெரிவித்திருந்தார். இதன் பின்னரே, பிரசாந்த் கிஷோரை திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவராக காங்கிரஸ் கருத தொடங்கியது. இதனால் அவர் காங்கிரசில் சேர்வதற்கு கதவு அடைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், தனக்கு காங்கிரசில் முக்கிய பதவியும் கிடைக்கவில்லை, காங்கிரஸ் தன்னை புறக்கணிக்கவும் செய்கிறது என்பதை உணர்ந்த பிரசாந்த் கிஷோர் அப்படியே ‘அப்செட்’ ஆகிப் போனார். அந்த ஆத்திரத்தில்தான் அவர் தற்போது காங்கிரசை சிக்கலில் மாட்டிவிடும் வேலைகளை கன கச்சிதமாக செய்யத் தொடங்கிவிட்டார்.
லக்கிம்பூர் வன்முறை
அண்மையில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் அருகேயுள்ள பன்வீர்பூரில்
பாஜகவினர் சென்ற கார்கள் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் வந்த பாஜக நிர்வாகிகள் 4 பேரை அடித்துக் கொன்றனர். இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அசிஷ் மிஸ்ரா ஓட்டிச்சென்ற கார் தான் கருப்புக்கொடி காட்ட திரண்டிருந்த விவசாயிகள் மீது மோதி விவசாயிகளின் உயிர்களை பறித்துவிட்டது என்று ஊடகங்களில் தகவல் பரவியது.
பிரியங்கா காந்தி கைது
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ராகுலும், பிரியங்காவும் அடுத்தடுத்து டுவிட்டரில் விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேரில் ஆறுதல் கூறுவதற்கு சென்றார். ஆனால் 144 தடை உத்தரவை மீறியதால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து சீதாபூர் சிறப்பு விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர்.
இதைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸார் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.இந்த நிலையில் மறுநாள் பன்வீர்பூர் செல்ல பிரியங்காவுக்கு உபி போலீசார் அனுமதி வழங்கினர். இதேபோல் ராகுல்காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆகியோரும் வன்முறை நடந்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
காங்கிரசுக்கு வேட்டு வைத்த பி.கே
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராகுல், பிரியங்கா, காங்கிரசார் போராட்டத்தில் குதித்ததால் காங்கிரஸ் திடீரென எழுச்சி பெற்றது போன்ற ஒரு நிலை காணப்பட்டது. இந்த போராட்டத்தின் மூலம் 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளை தேசிய அளவில் காங்கிரஸ் ஒருங்கிணைத்து விடும் என்றும் பேசப்பட்டது.
காங்கிரசின் இந்த ஆசைக்கு வேட்டு வைக்கும் விதமாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்தார்.
அதில்,“லக்கிம்பூர் சம்பவத்துக்கு பிறகே எதிர்க்கட்சிகள் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் தலைமையில் விரைவாக, தானாக மீண்டெழ வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் இதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும், ஆழமான பிரச்சனைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க தீர்வு எதுவும் கிடைக்கவில்லை” என்று அவர் காங்கிரசை கடுமையாக சாடினார்.
ராகுல், பிரியங்காவுக்கு சாட்டையடி
அதாவது, “என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் 2024 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது இயலாத காரியம். ராகுல், பிரியங்கா இருவரும் ஒன்று சேர்ந்து காங்கிரஸை வழி நடத்தினாலும்கூட தேர்தலில் வெற்றிபெற முடியாது”என்று பிரசாந்த் கிஷோர் சாட்டையடி கொடுத்ததுபோல் அந்த பதிவு இருந்தது.
இது காங்கிரசை கொதிப்படைய வைத்தது. ‘எங்கு அடித்தால் எங்கு வலிக்கும்’ என்பதை தெரிந்து வைத்திருந்த சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரும், காங்கிரசின் மூத்த தலைவருமான பூபேஷ் பாகல் தன் பங்கிற்கு ஒரு சரவெடியை கொளுத்தி போட்டார். அதில் மம்தா பானர்ஜிக்கு தற்போதும் அரசியலில் வலது கரமாக திகழும் பிரசாந்த் கிஷோரை வம்புக்கு இழுத்து கிண்டலடித்தும் இருந்தார்.
பிகே வை சீண்டிய சத்தீஸ்கர் முதலமைச்சர்
அவர் கூறுகையில் “சொந்த தொகுதியில் கூட வெல்ல முடியாத காங்கிரஸ் தலைவர்களை வளைத்துப் போட்டு தேசிய அளவில் மாற்று சக்தியாக விளங்க நினைப்பவர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். துரதிருஷ்டவசமாக, ஒரு தேசிய மாற்றாக வருவதற்கு, ஆழ்ந்து வேரூன்றிய மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை. ஆனால் அவர்களிடம் விரைவான தீர்வுகள் இல்லை” என்று குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் சவால்விட்டு தோல்வி கண்டதை நினைவூட்டும் விதமாக இப்படி பூபேஷ் பாகல் ‘அட்டாக்’ செய்து இருந்தார்.
காங்., – திரிணாமுல் காங்., விரிசல்
இதனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையேயான உறவில் விரிசல் விழும் விதமாக அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறின. பூபேஷ் பாகல், மம்தாவை கேலியாக விமர்சித்ததற்கு பதிலடியாக திரிணாமுல் காங்கிரஸ் தனது ட்விட்டர் பதிவில், “மிகவும் மதிப்பான வார்த்தைகள் முதல் முறை முதலமைச்சரிடமிருந்து வந்துள்ளது. பூபேஷ் பாகல் அவர்களே! உங்கள் தகுதிக்கு மீறி செயல்படுவதால் உங்களுக்கு பெருமை வந்துவிடாது. உங்கள் கட்சி தலைமையிடம் நற்பெயர் வாங்க இப்படியெல்லாம் முயற்சிக்காதீர்கள்.
அதே நேரத்தில், அமேதி தொகுதியில் ராகுல் அடைந்த வரலாற்று தோல்வியை, மீண்டும் ஒரு ட்விட்டர் ட்ரெண்டிங் செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சி அழித்துவிட முயற்சிக்கிறதா?” என கூறப்பட்டு இருந்தது.
இப்படி காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைக்கும் செயலில் இறங்கி இருப்பது எல்லா எதிர்க் கட்சிகளுக்குமே பாதகத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பிகே மீது அரசியல் வல்லுநுர்கள் பாயச்சல்
இதுபற்றி அவர்கள் கூறும்போது, “காங்கிரஸ் தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ளாததால் பிரசாந்த் கிஷோர், ஒரு இழிவான காரியத்தை செய்திருக்கிறார். லக்கிம்பூர் வன்முறையை ராகுலும், பிரியங்காவும் கையிலெடுத்து இருப்பதன் மூலம் காங்கிரஸ் வலுப் பெற்றுவிடும் என்று அவர் நினைத்தது தவறு. அப்படியே மனதுக்குள் நினைத்திருந்தாலும் அதை வெளிப்படையாக தெரிவித்து இரு கட்சிகளுக்கும் இடையே சண்டையை மூட்டிவிட்டு இருப்பது அதைவிட பெரிய தவறு. இப்படி எதிர்க்கட்சிகள் மோதிக்கொண்டே இருந்தால் 2024 தேர்தலில் மட்டுமல்ல, 2029 நாடாளுமன்ற தேர்தலில் கூட பாஜகவை வீழ்த்துவது கடினம் ஆகிவிடும்.
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக அம்மாநில காங்கிரஸ் தனித்து செயல்பட முடிவு செய்திருப்பதும் பிரசாந்த் கிஷோரின் எரிச்சலுக்கு ஒரு காரணம். தேசிய அளவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதன் மூலம் தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள முடியும் என்று பிரசாந்த் கிஷோர் தப்புக்கணக்கு போடுகிறார்.
அவருடைய சிண்டு முடிந்துவிடும் வேலை தற்போது அம்பலமாகியிருக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகளுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். அந்தக் கட்சிகளை ஒருங்கிணைப்பதும் கடினமாகிவிடும்.மேலும் பிரசாந்த் கிஷோரை இனி மற்ற கட்சிகள் நம்புவதும் கடினம். அரசியல் வியூகங்களை வகுப்பதில் தன்னை சாணக்கியன் என்று கருதிக் கொள்ளும் அவருக்கு இது பெரும் சறுக்கல்தான்” என்று அவர்கள் குறை கூறினர்.
0
0