இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்… மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட்நியூஸ்..!!

Author: Babu Lakshmanan
8 May 2023, 8:24 am
Quick Share

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.

இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

காலை 8 மணி முதல் இரவு 8 வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் பாடப்பிரிவுகளை எவ்வாறு தேர்வு செய்வது, கட் ஆப் மதிப்பெண் குழப்பம் போன்றவற்றை தீர்க்கும் வகையில் இந்த உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உதவி எண்ணை அழைத்தால் பாட வாரியாக உள்ள வல்லுநர்கள் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிப்பார்கள். மதிப்பெண்களை நினைத்து அச்சம் வேண்டாம் எனவும், உங்கள் குறிக்கோளை நிறைவேற்ற இந்த உயர்கல்வி வழிகாட்டிக் குழு உதவும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 377

0

0