மக்கள் சேவகி டாக்டர் சாந்தா காலமானார் : பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

19 January 2021, 11:03 am
EPS_Modi - updatenews360
Quick Share

மருத்துவ சேவைக்காக பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தாவின் மறைவிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி (93 வயது) காலமானார். அவரது உடல் இன்று பழைய அடையாறு மருத்துவமனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது.

மருத்துவ சேவைக்காக மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான உயரிய விருதுகளை டாக்டர் சாந்தா வென்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தவர் டாக்டர் சாந்தா.

இந்த நிலையில், டாக்டர் சாந்தாவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளித்தவர் மருத்துவர் சாந்தா. அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையின் மூலம் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் மருத்துவ சேவை வழங்குவதில் முன்னணியில் இருக்கிறது. 2018ல் சென்னை சென்றபோது, அடையாறு இன்ஸ்டிடீயூட்டிற்கு சென்ற போது, நினைவு கூர்ந்தேன். டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தமளிக்கிறது. ஓம் சாந்தி,” என தெரிவித்துள்ளார்.

இதேபோல, முதலமைச்சர் பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் வி.சாந்தா அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இவர் தனது வாழ்நாள் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலையில்லாமலும், குறைந்த செலவிலும் மருத்துவசேவை ஆற்றியவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0