‘பெரும் வலியை ஏற்படுத்திய ராஜமலை சம்பவம்’ : உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீட்டை அறிவித்தார் பிரதமர் மோடி!!
7 August 2020, 5:28 pmடெல்லி : கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ள இந்த மழை, ஆக.,10ம் தேதி வரை நீட்டிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இடுக்கி மாவட்டம் ராஜமலையில் தொடர் கனமழையினால், பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 17 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும், 80 பேர் மாயமாகி உள்ள நிலையில், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடுக்கியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிவாரணத்தையும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்திருப்பது பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தேசிய மீட்பு படையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் களத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சமும், படுகாயடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமும் வழங்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.