சிலிண்டருக்கு ரூ.100 எப்போ தருவீங்க…? பிரதமர் மோடி கொளுத்தி போட்ட சரவெடி… திக்கு முக்காடும் CM ஸ்டாலின்!

Author: Babu Lakshmanan
30 August 2023, 9:02 pm
Quick Share

பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் குறைப்பு தமிழகத்தில் திமுக அரசுக்கு பெருத்த சவாலாக உருவெடுத்து இருக்கிறது.

இனி இது தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினால் என்ன செய்வது?…என்ற இக்கட்டான நிலைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தையொட்டி
இந்த அறிவிப்பை மோடி வெளியிட்டு இருந்தாலும் கூட இஸ்ரோவின் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதற்காக குடும்பத்தலைவிகளுக்கு அளித்த பரிசு போலவே இது அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லி நகரில் மிக அண்மையில்
நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு பற்றிய இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறும்போது, “அனைத்து பயனாளிகளுக்கும் பிரதமர் மோடி வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களின் விலையில் 200 ரூபாய் குறைக்க முடிவு செய்து இருக்கிறார். இது ரக்ஷா பந்தன் கொண்டாடும் விதமாக, இந்திய பெண்கள் அனைவருக்கும் மோடி அளித்த
பரிசு ஆகும்.

அதேபோல் உஜ்வாலா திட்டத்தின்கீழ் உள்ள பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும். இதன்மூலம் 10.35 கோடி பேர் பயனடைவார்கள். இதற்காக மத்திய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 7,500 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். இனி உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவோர்
700 ரூபாய்க்கும், மற்றவர்கள் 900 ரூபாய்க்கும் சிலிண்டர்களை வாங்க முடியும்.

இந்தியா தனது இயற்கை எரிவாயுத் தேவைகளில் 60 சதவீதத்திற்கு இறக்குமதியை நம்பியே உள்ளது. தற்போதைய அரசு, பெண்களின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது” என குறிப்பிட்டார்.

இந்த விலை குறைப்பின் மூலம் தற்போது தமிழகத்தில் 1118 ரூபாய்க்கு விற்கப்படும் எரிவாயு சிலிண்டர், ஆகஸ்ட் 30ம் தேதி முதல் 918 ரூபாய் ஆக குறைந்து விட்டது. இதன் மூலம் மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள
38 லட்சம் உஜ்வாலா பயனாளிகளுக்கும் நன்மை கிடைக்கும்.

பிரதமர் மோடியின் இந்த
அறிவிப்பு இவ்வாண்டின் இறுதியில் நடைபெறும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநில சட்டப்பேரவை மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டது என்று காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிகள் குறை கூறினாலும் அவர்களுக்கு வேறொரு விதத்தில் செக் வைப்பதாகவே இது அமைந்துள்ளது.

ஏனென்றால் இனி சட்டப்பேரவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க தயங்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை இதையும் மீறி அறிவித்தால் ஒரு சிலிண்டருக்கு 600 ரூபாய் வரை குறைப்போம் என்றுதான் அவர்களால் அறிவிக்க முடியும். ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள 14 லட்சம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் 500 ரூபாய் விலை குறைப்பு என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தாலும் அந்த மாநில அரசுக்கு அது ஒரு பெரிய நிதிச் சுமையாகவே அமைந்து விட்டது.

உஜ்வாலா பயனாளிகளுக்கு
மத்திய அரசு மேலும் 200 ரூபாயை குறைத்து இருப்பதால், ராஜஸ்தான் அரசு இன்னும் 200 ரூபாய் விலையை குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை அந்த மாநிலத்தில் தீவிரமாக எழுவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் மத்திய அரசே 400 ரூபாய் குறைத்து விட்ட பிறகு 100 ரூபாய் என்பது மிகக்குறைவான தொகையாகவே கருதப்படும்.

அதேபோல தமிழகத்தில் 2021 தேர்தலில் சிலிண்டர் மானியம்
100 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.
அதனால் நீங்க எப்போ தருவீங்க? தேர்தல் வாக்குறுதியை நிறைவேத்துவீங்களா?…. மாட்டீங்களா?… என்று திமுக அரசை நோக்கி தமிழக மக்கள் கேள்வி கேட்கும் நிலையும் ஏற்பட்டுவிட்டது.

மேலும் 27 மாதங்களுக்கு தமிழக மக்கள் குறைந்த பட்சம் 22 கேஸ் சிலிண்டராவது வாங்கி இருப்பார்கள். அப்படியென்றால்
2200 ரூபாய் நிலுவையில் இருக்கிறதே அதையும் சேர்த்து தருவீங்களா?… என்ற கேள்விகளும் திமுக அரசிடம் எழுப்பப்படலாம்.

அது மட்டுமல்ல, 2021 தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைப்போம்,
டீசல் விலையை நான்கு ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் இரண்டு ரூபாய் குறைத்தீர்கள். மீதி 3 ரூபாயை எப்போது குறைப்பீர்கள்? டீசல் விலை குறைப்பை பற்றி மூச்சே காணோமே?…என்ற கிடுக்குபிடி கேள்விகளும் முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி தமிழக எதிர்க்கட்சிகள் கேட்கும் நிலையும் உருவாகும்.

தவிர மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,”இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503-ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்” என்று கிண்டலடித்தும் இருக்கிறார்.

இதனால் திமுகதான் பெரும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி, நாட்டிற்கே சிறந்த வழிகாட்டி என்று மேடைதோறும் முழங்கி வரும் முதலமைச்சர் ஸ்டாலினால் வெளிப்படையாக சமையல் எரிவாயு மானியம் 500 ரூபாய், 600 ரூபாய் குறைப்போம் என்று 2024 தேர்தலுக்கு வாக்குறுதி அளிக்க முடியாது. ஒருவேளை காங்கிரஸ் இந்த வாக்குறுதியை அளித்தால் முதலில் திமுகவை நூறு ரூபாய் கேஸ் சிலிண்டர் மானியம் கொடுக்கச் சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம் என்று பதிலடியும் கிடைக்கலாம்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே 900 ரூபாய்க்கு தற்போது இறங்கிவிட்டது.

ஏனென்றால் 2022-ம் ஆண்டு மார்ச்
1ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை 900 ரூபாய் ஆக இருந்தது.

மேலும் கடந்த 9 ஆண்டுகளில்
17 கோடி சமையல் எரிவாயு நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து 2023 மார்ச்சில் அது 31.26 கோடியாகி விட்டது. 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
நுகர்வோர் எண்ணிக்கை 14.52 கோடியாக இருந்தது. அது 2023 ஜூன் மாத நிலவரப்படி 33 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இதில் 10.75 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு ஒரு சிலிண்டருக்கு 400 ரூபாயும், எஞ்சிய 22 கோடியே 25 லட்சம் பேருக்கு 200 ரூபாயும் மானியமாக கிடைக்கிறது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.

சரி! மூத்த அரசியல் நோக்கர்கள் இது பற்றி கூறுவது என்ன?….

“பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் எதிர்வரும் ஐந்து மாநில தேர்தலில் மட்டும் அல்லாமல், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் வெற்றியை இந்த விலை குறைப்பு தீர்மானிக்கும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் கூட்டணி ரொம்பவே அஞ்சுகின்றன.

இக்கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சித் தலைவர்கள் சிலிண்டர் விலை குறைப்பு என்பது கண் துடைப்பு நாடகம் என்றும், ஐந்து மாநில சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை தவிர்ப்பதற்காக மத்திய பாஜக அரசு செய்யும் தந்திர வேலை என்று காட்டமாக விமர்சித்தாலும் இந்த விஷயத்தில் திமுக இதுவரை வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஒருவேளை இதை கடுமையாக விமர்சிக்க நேர்ந்தால், தமிழக மக்களும் கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி 2021 தேர்தலில் வாக்குறுதி அளித்தீர்களே அவையெல்லாம் என்னவாயிற்று? என்னும் கேள்விக்கணைகள் நம்மை நோக்கி எழுப்புவார்களோ என்று பயந்து அமைதி காக்கிறதா எனத் தெரியவில்லை.

உண்மையில், நாடாளுமன்ற தேர்தலின்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எதிர்க்கட்சிகளின் கூட்டணி 400 ரூபாயை குறைத்து அறிவிக்க திட்டம் தீட்டி இருந்தன. அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிக உறுதியாக இருந்தார். இதன் மூலம் பாஜகவும், காங்கிரசும் நேருக்கு நேர் மோதும் எளிதில் வெற்றியை பறித்து விடலாம் என்று கணக்கு போட்டும் வைத்திருந்தார். ஆனால் அதை மத்திய பாஜக அரசு ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே அறிவித்து காங்கிரசை திணறடித்து நிலைகுலைய வைத்தும் விட்டது.

இதனால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை குடும்பங்களுக்கு வேறு எந்த வகையில் பணப்பயன் தரும் வாக்குறுதிகளை அள்ளி விடலாம் என்று யோசிக்கும் நிலைக்கு அத்தனை எதிர்க்கட்சிகளும் தள்ளப்பட்டுவிட்டன என்பதே எதார்த்தமான உண்மை. இனி மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவது மிகக்கடினம் என்பதால் மக்களை கவர்ந்திழுக்கும் விதமாக
20, 30 வாக்குறுதிகளை எதிர்க்கட்சிகள் கூட்டணி துணிச்சலாக அடித்து விடவும் செய்யலாம். ஆனால் அதற்குரிய பலன் 2024 தேர்தலில் கிடைக்குமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான அஸ்திரங்களை இப்போதே பாஜக கையில் எடுத்து விட்டது என்பது மட்டும், நன்றாக புரிகிறது!

Views: - 234

0

0