பாஜகவின் முடிவால் இருண்டு போன 3வது அணி முடிவு : அதிமுகவுடன் கைகோர்க்காவிட்டால் தனித்துவிடப்படும் பாமக!!

24 November 2020, 11:27 am
PMK cover - updatenews360
Quick Share

சென்னை : போன தேர்தலில் வன்னியர் கட்சி அல்ல என்று சத்தியம் செய்த பாமக தலைவர்கள் மீண்டும் சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளனர். வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிப் பெரியதொரு போராட்டத்தை நடத்தப்போவதாக ராமதாஸ் இப்போது அறிவித்துள்ளார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துவிட்ட நிலையில், அதிமுகவைக் குறைகூறி பெரிய போராட்டம் நடத்துவதால், அதிமுகவுடன் கூட்டணியோ, மூன்றாவது அணியோ அமைக்க முடியாமல் பாமக தனித்துவிடப்படுமோ என்ற கவலையில் பாமகவினர் ஆழ்ந்துள்ளனர்.

பாமக சாதிக்கட்சி அல்ல என்றும், அது வன்னியர்களுக்கான கட்சி என்று பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது என்று 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்த அந்த கட்சியின் நிறுவனர் ச. ராமதாஸ் மீண்டும் வன்னியர் பிரச்சினையைக் கையில் எடுத்து திமுகவை மட்டுமின்றி கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் கடுமையாக சாடியுள்ளார். போராட்டத்தில் தானே கலந்துகொள்ளப்போவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். போராட்டம் தொடங்கி நாலு நாளில் அரசு பாமகவிடம் பேசுவதற்கு வருகின்ற அளவு போராட்டம் கடுமையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

ramadoss updatenews360

”தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களைச் செய்து இருக்கிறோம்; 21 இன்னுயிர்களை இழந்திருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை”, என்று கூட்டணிக்கட்சியான அதிமுகவையும் எதிர்க்கட்சியான திமுகவையும் சாடியுள்ளார். போன தேர்தலில் பொதுவான கட்சி என்று கூறிக்கொண்ட பாமக ஒரு சாதிக்கட்சிதான் என்பதையும், அது வன்னியர்களுக்கான கட்சி மட்டுமே என்பதையும அடித்துச்சொல்வதாக ராமதாஸின் அறிக்கை உள்ளது. பாமகவை பொதுமக்கள் யாரும் நம்பாமல் வேறு சமூகத்தைத் சேர்ந்தவர்கள் யாரும் அந்தக் கட்சியை ஆதரிக்காமலும் புறக்கணித்தது சரிதான் என்பதை ராமதாஸின் அறிக்கை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

2016 சட்டமன்றத்தேர்தலில் தனியாகப் போட்டியிட்டது தோல்வியைத் தந்ததால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் ராமதாஸ். தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி தோற்றுப்போனாலும் அதிமுகவுடன் அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், அன்புமணியை முதல்வராக்கும் ஆசை இன்னும் ராமதாசுக்கு இருப்பதால், வரும் 2021 தேர்தலிலும் ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்து வருகிறார்.

Anbumani 03 updatenews360

2021 தேர்தலில் கூட்டணி சேருவதற்கு மாநில ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையையும், அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்பதையும் பாமக வலியுறுத்தி வருகிறது. இல்லையென்றால் பாமகவையும் பாஜகவையும் இணைத்து மூன்றாவது அணி அமைக்கலாம் என்று ராமதாஸ் திட்டமிட்டுவந்தார். அதே நேரம் வன்னியருக்கு 20 சதவீத ஒதுக்கீடுப் போராட்டத்தையும் போனமாதமே அவர் அறிவித்தார். பல்வேறு நடவடிக்கைகளால் அதிமுகவை வழிக்குக்கொண்டுவரும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.

ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். இதனால், பாஜகவுடன் அணி சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டம் காலியாகிவிட்டது. திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கே போதிய இடங்கள் இல்லாத நிலையில் அந்தக் கூட்டணியில் சேர முடியாது. மூன்றாவது அணியும் அமைக்க முடியாது. அதிமுகவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அந்த அணியில் இடம் பெற முடியாவிட்டால் பாமக தனித்துவிடப்படும் நிலைதான் ஏற்படும்.

தற்போது, வன்னியர் கட்சி என்று வெளிப்படையாகக் கூறிக்கொள்வதால் வேறு சமூகத்தினர் பாமகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். வன்னியர்களுக்காகப் பெரிய போராட்டம் நடத்தி மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தாலும் பாமக போட்டியிடும் தொகுதிகளில் வேறு சமுதாயத்தினர் பாமகவை ஆதரிக்க மாட்டார்கள், ஏற்கனவே, சாதி அடிப்படையில் பாமகவுக்கு ஓட்டுப்போடுபவர்கள் மட்டுமே மீண்டும் வாக்களிப்பார்கள். இதை வைத்து தொகுதிகள் எதையும் வெல்ல முடியாது. தனித்துவிடப்பட்டால் நிலை மேலும் மோசமாகும் என்ற கவலையில் பாமகவினர் ஆழ்ந்துள்ளனர்.

Views: - 0

0

0