பொதுக்குழுவில் அதிமுகவை உரசாத பா.ம.க. : ஆளுங்கட்சி கூட்டணியில் நீடிக்க முடிவு!!

7 September 2020, 8:10 pm
pmk - admk - updatenews360
Quick Share

சென்னை: நேற்று நடைபெற்ற பாமக சிறப்புப் பொதுக்குழுவில் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணியை முதலமைச்சராக முன்னிறுத்துவது குறித்து முன்னணித் தலைவர்கள் கருத்து தெரிவித்தாலும், அது குறித்து தீர்மானம் எதுவும் நிறைவேற்றாமல் அடக்கி வாசித்தது, அதிமுக கூட்டணியில் அக்கட்சி தொடர விரும்புவதையே காட்டுவதாகவும் ஆளுங்கட்சியைத் தேவையில்லாமல் சீண்ட வேண்டாம் என்று பாமக தலைவர்கள் முடிவு செய்திருப்பதையே வெளிப்படுத்துவதாகவும் இரு கட்சித் தொண்டர்கள் கணிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத்தேர்தலுக்கு 8 மாதங்களே இருக்கும் நிலையில் ஆளும் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக மீண்டும் தனித்துப்போட்டியிடப்போவதாகவும் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாகவும் பேச்சுகள் எழுந்தன. சிறப்புப் பொதுக்குழுவில் ‘அன்புமணி முதல்வர் வேட்பாளர்’ என்னும் முழக்கம் மீண்டும் உயிர்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பொதுக்குழுவில் அது குறித்துத் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றுவது அதிமுக அரசை உரசிப்பார்ப்பதாக முடியும் என்று கட்சித்தலைவர்கள் ராமதாசும், அவர் மகன் அன்புமணியும் எண்ணியதே அதற்குக் காரணம் என்று தெரிகிறது. மேலும், அத்தகைய தீர்மானம் அதிமுக கூட்டணியில் சலசலப்பு என்று எதிர்க்கட்சிகள் பேசவும், தொண்டர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும், வழியை உருவாக்கியிருக்கும். அதிமுகவின் உறவை எந்த விதத்திலும் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதே பாமகவின் முடிவுக்குக் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பாமகவின் இந்த நிலைப்பாடு அதிமுக தலைவர்கள் மத்தியிலும் தொண்டர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்றும், அதற்கான தனிச் சட்டத்தை சட்டப்பேரவையில் விரைவாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென்றும், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கும் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டில் தொகுப்பு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசுப் பணிகளில் ஓபிசிகளுக்கான 27% இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

மத்திய அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனப்பணிகளில் ஒவ்வொரு நிலையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அவை 27 விழுக்காட்டை விட எந்த அளவு குறைவாக உள்ளனவோ, அவற்றைப் பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வு மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் கோரப்பட்டது.

pmk-aiadmk-alliance- updatenews360

கூட்டணி குறித்தோ தனித்துப்போட்டியிடுவது பற்றியோ தீர்மானம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைப்பதும் தனித்துப் போட்டியிடுவதும் எப்போதும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக நீடிப்பது 2021-தேர்தலில் கூட்டணிக்கு வலிமை சேர்க்கும். தற்போதைய சட்டமன்றத்தில் பாமகவுக்கு ஒரு இடம் கூட இல்லை. நாடாளுமன்ற மேலவையில் மட்டும் ஒரு உறுப்பினர் (அன்புமணி) இருக்கிறார். கட்சியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாம்பழம் சின்னம் 2021 சட்டமன்றத் தேர்தலில் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அங்கீகாரத்துக்குத் தேவையான இடங்களையும், ஓட்டுகளையும் வெல்லும் வாய்ப்பு பாமகவுக்கு இருக்கிறது. மூன்றாவது அணி அமைப்பதோ, தனித்துப் போட்டியிடுவதோ, கட்சியின் அங்கீகாரத்தை மீட்டுத்தராது. இடப்பிரச்சனையை தேர்தல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று பாமக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் களமிறங்கிய 7 தொகுதிகளிலும் தோற்றாலும், அதே நேரத்தில் நடைபெற்ற 22 சட்டமன்றத்தேர்தல்களில் 9 இடங்களில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதில் பாமகவின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர் ஆகிய தொகுதிகளில் பாமகவின் வாக்குகள் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்தது.

Ramdoss 02 updatenews360

வரும் 2021 சட்டமன்றத்தேர்தலிலும் பாமகவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பாமகவின் வட தமிழகத்தில் இருக்கும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் அரியலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கொங்குப்பகுதியில் சேலம் மாவட்டத்திலும் தேர்தல் முடிவுகளை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

நவம்பர் மாதம் பீகார் மாநிலத் தேர்தல் நடைபெறுவதாக இருக்கிறது, அதன் பிறகு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுகள் வேகமெடுக்கும். அப்போது, பாமக சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து தனது கோரிக்கைகளை வலியுறுத்தும் என்று தெரிகிறது.

Views: - 0

0

0