அதிமுக – பாமக கூட்டணி உறுதியா..? ஜிகே மணியை சந்தித்த பிறகு முதலமைச்சரிடம் விளக்கிய அமைச்சர்கள் குழு..!!!
3 February 2021, 8:00 pmசென்னை : வன்னியர்களுக்கான 20 % இடஒதுக்கீடு குறித்து பாமகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக அமைச்சர்கள் குழு முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து விளக்கிக் கூறியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. மேலும், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என பாமக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசை 3ம் தேதி சந்தித்து முறையிடுவது என பாமக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை பொறுத்தே கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாமக சார்பில் ஜிகே மணி, ஏகே மூர்த்தி உள்பட 6 பேர் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் எஸ்பி வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பாமகவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர்கள் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது. இன்றைய சந்திப்பை தொடர்ந்து பாமக, அதிமுக கூட்டணியில் நீடிக்குமா..? இல்லையா..? என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் ஊகிக்க முடியும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
0
0