கொரோனா பாதிப்பால் பலியானவர்களுக்கான இழப்பீடு குறைப்பு…! ராமதாஸ் வருத்தம்
7 August 2020, 2:10 pmசென்னை: கொரோனா தடுப்பு பணியில் இறந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறைத்தது வருத்தமளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனோ ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு பலியான 28 முன் கள பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்கும் அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.
இந் நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இப்போது அது ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அறிவித்த தொகையை வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு பெற வேண்டும். இதன்மூலம் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்; அரசுக்கும் அதிக செலவு ஏற்படாது என்று தமது பதிவில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.