காமராஜர் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை : அரசியல் தலைவர்களும் புகழஞ்சலி..!!

15 July 2021, 11:26 am
kamaraj - updatenews360
Quick Share

காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், கல்விக் கண் திறந்தவர் எனப் போற்றப்படுபவருமான காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இவர் அறிமுகப்படுத்திய பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை உலகளவில் இன்று வரை போற்றப்பட்டு வருகிறது.

Stalin Letter - Updatenews360

இந்த நிலையில், காமராஜரின் 119வது பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள காமராஜரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவ படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

Oppostion Party Leader EPS - Updatenews360

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்த அறிவிப்பில், “கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சி பாதையில் பெருமை அடைய செய்யும் எனும் தனது தொலைநோக்கு பார்வையால் எண்ணற்ற பள்ளிகளும், அணைகளும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மனித குலத்துக்கும், நாட்டிற்கும் அருந்தொண்டாற்றி இந்திய மக்களின், குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருப்பவரும், இளம் வயதிலிருந்தே நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும், தொண்டு என்பதற்கு ஓர் உதாரணமாக விளங்கியவரும், கொடி பிடிக்கும் அடிப்படைத் தொண்டனாய் இருந்து தன்னலமற்ற தன் உழைப்பினால் கொடி கட்டி ஆளும் முதலமைச்சராக ஆனவரும், “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணம் தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கியவருமான, கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு என் மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” தெரிவித்துள்ளார்.

இதேபோல, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று 119 -ஆவது பிறந்தநாள். ஏழைகளுக்கு மறுக்கப்பட்ட கல்வியை மீட்டெடுத்துக் கொடுத்து, படிக்கும் சமுதாயத்தை அமைக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த மாபெரும் மக்கள் தலைவரை இந்த நன்னாளில் வணங்குவோம்…. போற்றுவோம்!. கல்வியில் சிறந்த தமிழகத்தை அமைக்க வேண்டும் என்பது தான் காமராஜரின் நோக்கம். சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் கொள்கை. இவை இரண்டும் நிறைவேற வேண்டும்!

கல்வியில் சிறந்த தமிழகத்தை படைப்பதும், அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை கட்டாயமாக வழங்குவதும் பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே சாத்தியம். அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக உழைக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 136

0

0

Leave a Reply