ஆவின் பாலிலும் அரசியல்… ஆரஞ்சு நிறத்தை நிறுத்தி, சிகப்பு நிறம் கட்டாயம் வாங்க நிர்பந்தமா? தமிழக அரசு மீது அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2022, 9:14 pm
Annamalai Condemned - Updatenews360
Quick Share

அரசின் ஆவின் பால் பாக்கெட்டில் ஆரஞ்சு வண்ணத்தை நிறுத்தி சிகப்பு வண்ணம் கட்டாயமாக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துவந்த, மக்கள் விரும்பி வாங்கிய, அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்படவுள்ளதாக அறிகிறேன். அதற்கு பதிலாக சிவப்பு வண்ண பால் பாக்கெட் வாங்க மக்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.

500 மிலி அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும், இடைநிலையில் பச்சைவண்ண பால் பாக்கெட் 22 ரூபாய்க்கும், நீலவண்ண பால் பக்கெட் 20 ரூபாய்க்கும் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சத்து நிறைந்த ஆரஞ்சு வண்ண பால் பாக்கெட் மக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்படுகிறது.

தரமிக்க இந்த பாலினை நிறுத்திவிட்டு. மறைமுகமாக மக்கள் மீது, சத்து குறைவான சிவப்புநிற பால் பாக்கெட் திணிக்கப்படுகிறதா? பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் எல்லாம் மிகச்சிறப்பாக லாபம் ஈட்டி இயங்கிக் கொண்டிருக்கும் போது தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் எப்போதும் நஷ்டக் கணக்கு காட்டி வருவது ஏன்? மக்களின் மிக அத்தியாவசியத் தேவையான பால் விற்பனையில் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த நிறுவனத்தில் என்ன நடக்கிறது? ஒரு பக்கம் ஆவின் இனிப்பு வகைகளின் விலையை இந்த அரசு உயர்த்தியுள்ளார்கள்.

இப்போது தீபாவளிக்கு பால் மற்றும் பால் பொருட்களை பயன்படுத்தி பலகாரங்கள் எல்லாம் தயாரிக்கும் இந்த வேளையிலே மறைமுகமாக பால் விலையை உயர்த்தும் வகையில் ஆரஞ்சு வண்ணத்தை தடைசெய்து சிவப்பு நிறத்தை முன்னிறுத்துவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதிலும் கரவை மாடு வைத்து பால் உற்பத்தி செய்து கொண்டிருக்கும், ஏழை விவசாய மக்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்காமல், விற்பனை விலையை மட்டும் அதிகரித்து மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மறக்கவே முடியாத, மட்டரகமான பொங்கல் பரிசு தந்து, அதிர்ச்சிக்குள்ளாக்கிய திமுக அரசு, தற்போது தீபாவளி பண்டிகைக்கு, தமிழக மக்களுக்கு தந்திருக்கும் பரிசு ஆவின் பால் மற்றும் இனிப்பு விலை உயர்வு.

ஆளும் அரசுக்கு ஆரஞ்சு வண்ணத்திற்கு பெருகி வரும் மக்கள் ஆதரவு அதிக வெறுப்பாகி விட்டது போல, அதனால், சிவப்பு வண்ணத்தை அதிகமாக வெளியீட்டு, மக்கள் விரும்பாத, சத்துக்குறைவான சிகப்பு வண்ணத்தை பயன்படுத்த, கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். மக்கள் கருத்தை அறிந்து செயல்படுவதே மக்களாட்சி என்று தெரிவித்துள்ளார்.

Views: - 467

0

0