பலன் தராத ஒட்டு வேலை!! புதுவையில் திமுக – காங்., கூட்டணி முறிகிறது!

6 February 2021, 4:31 pm
Cong - dmk - cover - updatenews360
Quick Share

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் தமிழகத்தின் பக்கத்து குட்டி மாநிலமான புதுச்சேரியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் அண்மையில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். பிறகு டெல்லி சென்று பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதாவில் தங்களை இணைத்தும் கொண்டனர். அவர்களில் ஒருவர் அமைச்சராக பதவி வகித்த நமச்சிவாயம். இதனால் தற்போது நாராயணசாமி தலைமையிலான புதுவை காங்கிரஸ் அரசு நூலிழை மெஜாரிட்டியுடன் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

30 உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்போது காங்கிரசுக்கு 12 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
திமுகவின் 3 உறுப்பினர்கள் மற்றுமொரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவுடன் காங்கிரஸ் அரசு தட்டு தடுமாறுகிறது. இந்த அணியில் இருந்து இனி ஒரு எம்எல்ஏ பதவி விலகினாலும் நாராயணசாமி அரசின் ஆட்டம் ‘குளோஸ்’ ஆகிவிடும்.

Pondy CM Narayanasamy - updatenews360

அதே நேரம் இதற்கான முயற்சியிலும் அண்மையில் பதவி விலகி பாஜகவில் இணைந்த இரு எம்எல்ஏக்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் புதுச்சேரிக்கும் வருகிற மே மாத மத்தியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதுவரை காங்கிரஸ் அரசு ஆட்சியில் நீடிக்குமா என்பது சந்தேகம் தான். புதுச்சேரியில் பாஜக வேகம் காட்டுவதைத் பார்த்தால் இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடும் என்றே அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறுகிறார்கள். ஏனென்றால், கூட்டணிக் கட்சியான திமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நடக்கும் வெளிப்படையான மோதல்தான் இதற்கு முக்கிய காரணம்.

கடந்த மாதம் 18-ம் தேதி திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் புதுவை மாநில திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, வருகிற தேர்தலில் திமுக 30 இடங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெறும் என்று பகிரங்கமாகவே அறிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படியே, தான் நடந்து கொள்வதாகவும் அதற்காகவே இங்கே வந்திருக்கிறேன் என்று அவர் வெளிப்படையாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் தனது கூட்டணியில் உள்ள காங்கிரசை கழற்றிவிடும் முடிவில் திமுக இருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், ஜெகத்ரட்சகனின் பேச்சு காங்கிரசின் டெல்லி தலைமைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால், காங்கிரஸ் மேலிடம் உடனே திமுக தலைவர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, “உங்களது செயல்பாடு பாஜகவை நோக்கி திரும்புவதாக இருக்கிறது. உங்கள் கட்சி எம்பி பேசியது மிக அதிகபட்சமானது” என்று தனது கண்டனக் குரலை பதிவு செய்தது.

stalin campaign - updatenews360

இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் புதுவை விவகாரம் பற்றி எதுவுமே தெரியாதது போல, அப்பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டார். பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையே உறவில் ஏற்பட்ட விரிசல் பசை தடவியது போல் ஒட்டப்பட்டதால் சற்று அமைதி நிலை உருவானது. ஆனாலும் இந்த விவகாரம் இன்னும் நீறுபூத்த நெருப்பாகத்தான் இருக்கிறது என்பது நேற்று நடந்த ஒரு நிகழ்வு மூலம் அம்பலமானது.

புதுவை முதல்வர் நாராயணசாமி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தீவிர விசுவாசி. 2004 முதல் 2014 வரை மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது காங்கிரசுக்கும், திமுகவுக்கும் இணைப்பு பாலமாக இருந்தவர். அதனால் இருவரும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக் கொள்வது வழக்கம். கருணாநிதி மீது கொண்டிருந்த விசுவாசம், நட்பு காரணமாகத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவையில் தொடங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கருணாநிதியின் பெயரை நாராயணசாமி சூட்டினார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் காரைக்கால் சென்றபோது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். சென்னை- நாகைப்பட்டினம் நெடுஞ்சாலையில் காரைக்கால் அருகே கட்டப்பட்டு வரும் மேற்கு புறவழிச்சாலைக்கு திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

Karunanithi Narayanasamy - Updatenews360

இதற்கான பெயர் பலகையும் அந்த சாலையில் வைக்கப்படும் என்று அப்போது நாராயணசாமி கூறியிருந்தார். ஆனால் இந்தப் புறவழிச்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே உறுதி அளித்தபடி கருணாநிதி பெயரையும் சூட்டவும்
இல்லை. பெயர் பலகையும் வைக்கவில்லை. இதனால் புதுவை மாநில திமுகவினர் கொதிப்படைந்தனர். காரைக்கால் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நாஜிம் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், நாராயணசாமிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். அங்கிருந்த அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒருவழியாக சமாதானம் செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் இந்த நிகழ்வு ஒரு சாதாரண விஷயமாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. கருணாநிதியின் மேல் பற்றும், பாசமும் கொண்ட நாராயணசாமிக்கு டெல்லி மேலிடம் இந்த விஷயத்தில் கடிவாளம் போட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

அதாவது தமிழ்நாட்டில் காங்கிரஸ் தங்களது கூட்டணியில்தான் இருக்கிறதா என்பதை திமுக இன்னும் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இருமுறை தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்த பின்பும் இந்த இழுபறி நீடிக்கிறது. எனவே நீங்கள் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை கட்டாயம் சூட்டியே ஆக வேண்டுமா? என்ற கேள்வியை நாராயணசாமியிடம் காங்கிரஸ் மேலிடம் அழுத்தம் திருத்தமாக எழுப்பியிருக்கிறது.

அதேபோல் புதுவையில் சமீபகாலமாக திமுக செய்துவரும் குட்டி கலாட்டாக்களையும், ஆட்சிக்கு எதிராக விடுத்து வரும் சவால்களையும் சுட்டிக்காட்டி உள்ளது.

இதைத்தொடர்ந்தே காரைக்கால் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயரை சூட்டும் எண்ணத்தை நாராயணசாமி கைவிட்டார் என்கிறார்கள்.

stalin-rahul- updatenews360

அதேநேரம் திமுக தலைமையை கேட்காமல் புதுவை காங்கிரசுக்கு எதிராக இப்படி திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக புதுவையில் காங்கிரசுக்கு எதிராக சவால்விட்ட ஜெகத்ரட்சகனுக்கு தெரியாமல் இது நடந்திருக்கவே முடியாது என்கிறார்கள்.
ஏனென்றால் நாராயணசாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய நாஜிம், திமுக எம்பியான ஜெகத்ரட்சகனின் கண் அசைவு இன்றி தானாகவே இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு கிடையாது.

அதேபோல் ஜெகத்ரட்சகனும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேட்காமல் நாராயணசாமிக்கு எதிராக புதுவையில் ஆர்ப்பாட்டத்தை தூண்டி விட்டிருக்க மாட்டார் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த விவகாரத்தை எப்படிப் பார்த்தாலும், எந்த கோணத்தில் அணுகினாலும் அது தமிழகத்தில் மட்டுமின்றி புதுவையிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வியில் போய்தான் முடிகிறது.

தற்போது வரை பாஜகவுக்கு எதிர்ப்பு என்கிற நேர்கோட்டில் காங்கிரசும், திமுகவும் இருப்பதால்தான் புதுவையில் காங்கிரஸ் அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது. இல்லை என்றால் ஜெகத்ரட்சகன் பேசிய அன்றே அங்கு காங்கிரஸ் அரசு கவிழ்ந்துபோய் இருக்கும் என்கிறார்கள்.

புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த விரிசலை என்னதான் ஒட்டுப்போட்டு பூசினாலும் விரிசல் மேலும் மேலும் விரிந்து கொண்டே போய் பெரும் பிளவை நோக்கித்தான் செல்கிறது. இதனால்தான் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ‘டம் டமார்’ சத்தம் இந்த கூட்டணிக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இரு மாநிலத்திலும் திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா, முறியுமா? என்ற கேள்விக்கான விடை திமுக தலைவர் ஸ்டாலின் கைகளில்தான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஓரிரு தினங்களில் இதற்கான பதில் தெளிவாக தெரிந்துவிடும்.

அதுவரை இரு கட்சிகளுக்கும் இடையே மௌன யுத்தம்தான் நடக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Views: - 0

0

0