பாஜகவில் இணைந்தார் முன்னாள் காங்., அமைச்சர் நமச்சிவாயம்..!!! அதிர்ச்சியில் புதுச்சேரி காங்கிரஸ்..
28 January 2021, 7:18 pmடெல்லி : புதுச்சேரியின் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்தார்.
புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக உள்ளவர் நமச்சிவாயம். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நமச்சிவாயத்தை முன்னிலைபடுத்தி காங்., திமுக கூட்டணி தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்தது. பின்னர், முதலமைச்சராக கட்சி தலைமை நாராயணசாமியை தேர்வு செயது நமச்சிவாயத்தை அமைச்சராக்கியது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார்.
இதனிடையே, கடந்த ஆண்டு நமச்சிவாயம் வகித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், மேலும் அதிருப்தி அடைந்த அவர் கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அவ்வப்போது கட்சி தலைமை சமாதானப்படுத்திய நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியது.
இதனால், காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயத்தை தற்காலிக நீக்கம் செய்து புதுச்சேரி காங்., தலைவர் ஏவி சுப்ரமணியம் அறிவித்தார். இதையடுத்து, புதுச்சேரியின் உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்தார். அவருடன், மேலும் ஒரு எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அளித்தார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாயந்தானும் பாஜகவில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில், “வளமான புதுச்சேரியை உருவாக்கவே பாஜகவில் இணைந்தேன். உலக அளவில் இந்தியாவை தலை நிமிர வைத்தவர் பிரதமர் மோடி,” என்றார்.
0
0