மிளகுக்கு பதிலா இலவம்பஞ்சு கொட்டை… மஞ்சத்தூளுக்கு பதிலா மரத்தூள் : பொங்கல் பரிசுப் பொருட்களில் கலப்படம்… பொதுமக்கள் கோபம்..!!

Author: Babu Lakshmanan
17 January 2022, 7:48 pm
pongal gift - updatenews360
Quick Share

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரும் முதல் பொங்கல் பண்டிகை, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் சோதனையாகவே அமைந்து விட்டது. குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த வெல்லம் உருகியது, புளியில் பல்லி இருந்தது, கரும்பு உயரம் குறைந்திருந்தது. ரவையில் பூச்சி இருந்தது என அடுத்தடுத்து பல்வேறு குளறுபடிகளால் தமிழக அரசு பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

எதிர்கட்சிகளான, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இதனை விடாப்பிடியாக பிடித்துக் கொண்ட நிலையில், கமிஷனுக்காக வெளிமாநிலங்களுக்கு விடப்பட்ட டெண்டரில் நிகழ்ந்த முறைகேடே, இந்த தரமற்ற பொருட்களை விநியோகிக்க காரணம் என்று எல்லாம் குற்றம்சாட்டி வருகின்றன.

தற்போது, பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையிலும், இந்த பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. பொங்கலுக்கு முன்னதாக, அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாதவர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கொடும்பம்பள்ளி, செலந்தம்பள்ளி, கரம்பூர் உள்ளிட்ட பல்வேறு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கலப்படப் பொருள்கள் இருந்ததாகத் தகவல் கிடைத்தது.

காக்கணாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் நியாய விலை கடையில், பொதுமக்கள் நியாயவிலைக் ஊழியர்களுடன் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களில் கலப்படம் நடந்திருப்பதாகக் கூறி, பொதுமக்கள் அந்தப் பொருட்களை தரையில் கொட்டி வாக்குவாதம் செய்து வந்தனர்.

அப்போது, அவர்கள் கூறுகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள் அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளதாகவும், 21 பொருடகளில் எதுவுமே தரத்துடன் இல்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருக்கும் மிளகு பாக்கெட்டில் மிளகே இல்ல என்றும், அதற்கு பதிலாக இலவம்பஞ்சு கொட்டையையும், அவரைக் கொட்டையையும், வெண்டைக்காய் விதையையும் சேர்த்து மிளகுனு பாக்கெட் செய்து கொடுத்திருப்பதாகவும், மிளகாய்த்தூள், மஞ்சத்தூள் பாக்கெட்டுகளில் வெறும் மரத்தூளை அடைத்து கொடுத்திருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கொரோனா காலத்தில் இதுபோன்று கலப்படப் பொருட்களை கொடுத்தால், அதனை சமைத்து சாப்பிடும் குழந்தைகள், பெண்களின் உடல்களுக்கு ஏற்படும் பாதிப்பு அரசு கொஞ்சமும் யோசிக்கத் தவற விட்டதாகவும் காக்கணாம்பாளையம் ஊராட்சி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், “இது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட கான்டராக்டரோட தவறு. பொதுமக்கள் அனைவருக்கும் புதிதாகப் பொருள்கள் வழங்க உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்லாமல் இதற்கு முன்பு வாங்கிச் சென்றவர்களுக்கும் புதிதாக மீண்டும் பொங்கல் பொருள்கள் வழங்கப்படும்,” என்றனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கடும் விமர்சனத்தை திமுக தலைமையிலான தமிழக அரசு சந்தித்துள்ள வேளையில், தற்போது கலப்படப் பொருட்களால் முதலமைச்சர் ஸ்டாலினின் இமேஜ் பெரும் டேமேஜ் ஆகியுள்ளது. எனவே, அவர் தலையிட்டு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதுமட்டுமில்லாமல், இத்தனை பொருட்களை கொடுத்து இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு பதிலாக, தரமுள்ள 5 பொருட்களை மட்டும் கொடுத்து விட்டு, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ரொக்கத் தொகையை கொடுத்திருந்தாலே, ஸ்டாலின் அரசுக்கு பேரும் புகழும் கிடைத்திருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Views: - 721

0

0