பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 கோடி ஊழல்… தமிழக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : கோவையில் எச். ராஜா அதிரடி..!!

Author: Babu Lakshmanan
20 January 2022, 11:50 am
Quick Share

தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளதாக கோவையில் பா.ஜ.க. மூத்த நிர்வாகி எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை செல்வபுரம் சி.ஜி.வி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 2500 ரொக்க தொகையாக வழங்கியபோது, ரூபாய் ஐந்தாயிரம் வழங்க கோரிய தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தற்போது வெறும் பொங்கல் தொகுப்பு வழங்கி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளார். மேலும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தரமற்றவையாக கலப்படமாக இருந்துள்ளது. பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1800 கோடி ரூபாயில், 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது, எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, குடியரசு தின விழாவில் தமிழக சிறப்பு ஊர்திகள் புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது : – தமிழக அரசு இதில் நாடகம் ஆடுகிறது. கடந்த 2006ம் ஆண்டில் மத்தியில் தி.மு.க கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போதும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்தது. மற்ற சில ஆண்டுகளில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அரசுக்கும், இதற்கும் தொடர்பில்லை.
கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உ.பி. அரசிற்கு வாகன ஊர்தி அனுமதி கிடைக்கவில்லை.

வரும் உள்ளாட்சி தேர்தலில் பொங்கல் தொகுப்பில் மக்களை ஏமாற்றிய தமிழக அரசிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள், என தெரிவித்தார்.

பேட்டியின் போது தமிழக பா.ஜ.க.கலை கலாச்சார பிரிவின் மாநில செயலாளர் பி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர் கார்த்தி, செல்வபுரம் மண்டல் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 316

0

0