வெறும் பேச்சுக்குத்தான் எங்கும் தமிழ்… எதிலும் தமிழா…? பொங்கல் பரிசுத் தொகுப்பில் இந்தி வந்தது எப்படி..? பாஜக கிடுக்குப்பிடி கேள்வி…!!

Author: Babu Lakshmanan
5 January 2022, 8:25 pm
Quick Share

பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை திமுக அரசு கொள்முதல் செய்தது தொடர்பாக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகையை இந்த முறை நிறுத்தியதால், பொதுமக்கள் பெரும் அதிருப்தியுள்ளனர்.

இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை தமிழக அரசு கொள்முதல் செய்த நடவடிக்கைகளுக்கும், அது சார்ந்த நிறுவனங்களைப் பற்றியும் சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துக்களும், கேள்விகளும் எழுந்து வருகின்றன.

அந்த வகையில், பாஜக செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன், தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகத்தில் தயாரிப்போம் என்றெல்லாம் குரல் கொடுத்த திமுக அரசு, தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலுக்கு அரசு வழங்கும் பொருட்களை மட்டும் பிற மாநிலங்களில் வாங்கியது ஏன்..? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகத்தில் தயாரிப்போம் என்றெல்லாம் குரல் கொடுத்த திமுக அரசு, பொங்கல் பையுடன் வழங்கப்படும் 21 பொருட்களில் பெரும்பாலானவற்றை தமிழகத்தில் தயாரிக்கும் நிறுவனங்களிடத்தில் வாங்காமல் குஜராத் உள்ளிட்ட வெளிமாநில நிறுவனங்களிடத்தில் வாங்குவதன் மர்மம் என்ன?

உப்பை மட்டும் தமிழக நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதன் ரகசியம் என்ன? அவை அனைத்திலும் ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கிறதே? ஒரு வேளை, திமுகவினர் வட மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறார்களோ? அல்லது அங்கே தான் பேரம் படிந்ததா? ஏன்? தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

சென்ற வருடம் பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டிய திமுக, இந்த வருடம் அதே நிறுவனங்களிடம் கொள்முதல் செய்துள்ளதா?அப்படி செய்திருந்தால் எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்ன குற்றச்சாட்டு தவறு என்று ஒப்பு கொள்கிறதா? அது சரியென்றால் இப்போது ஊழல் நடந்துள்ளதா? மேலும்,

வழங்கப்படும் 21பொருட்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன? கடந்த வருடம் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது? கடந்த வருடம் எந்தெந்த நிறுவனங்கள் இந்த பொருட்களை அளித்தன? இந்த வருடம் எந்த நிறுவனங்களிடம் வாங்கப்பட்டது போன்ற விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Views: - 312

0

0