புளியில் பூச்சி… தரமில்லாத பொங்கல் பரிசு : தமிழகத்தில் அடுத்தடுத்து வெடிக்கும் போராட்டம்…மயிலாடுதுறையில் பொருட்களை சாலையில் எறிந்து மக்கள் மறியல்…!!
Author: Babu Lakshmanan18 January 2022, 8:21 pm
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பின் சர்ச்சை தொடர்ந்து கொண்டேதான் இருந்து வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றிருந்த வெல்லம் உருகியது, புளியில் பல்லி இருந்தது, கரும்பு உயரம் குறைந்திருந்தது. ரவையில் பூச்சி இருந்தது என அடுத்தடுத்து பல்வேறு குளறுபடிகளால் தமிழக அரசு பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அண்மையில், மிளகு பாக்கெட்டில் மிளகே இல்லை என்றும், அதற்கு பதிலாக இலவம்பஞ்சு கொட்டையும், மிளகாய்த்தூள், மஞ்சத்தூள் பாக்கெட்டுகளில் வெறும் மரத்தூளை அடைத்து கொடுத்திருப்பதாக திருப்பத்தூரில் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களில் கலப்படம் நடந்திருப்பதாகக் கூறி, பொதுமக்கள் அந்தப் பொருட்களை தரையில் கொட்டி, தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. குத்தாலத்தை அடுத்த திருவாலங்காடு எனும் ஊரில் நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப்பொருட்களில் வண்டுகள் மொய்க்கும் அரசி, உருகிய வெல்லம் என மிகவும் மோசமான நிலையில் பொருட்கள் வழங்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதுமட்டுமல்லாது பொருள்கள் வாங்கியவர்களுக்கு வரும் குறுந்செய்தி போல், பொருள்கள் வாங்காதவர்களுக்கும் வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக நியாய விலைக்கடை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பொங்கல் பரிசுத் தொகுப்பை நாங்கள் கேட்டோமோ, இப்படி தரமில்லாத பொருட்களை தருவதற்கு பதிலாக, தராமலே இருந்திருக்கலாம் என்றும், புளியில் பூச்சி இருப்பதாகவும், மிளகாய்த்தூளுக்கு பதிலாக மரத்தூளை தருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற தரமற்ற பொருட்களை எப்படி சமைத்து சாப்பிடுவது எனக் கேள்வி எழுப்பிய அவர்கள், பொங்கல் பண்டிகை முடிந்து வழங்கப்படும் இந்தப் பொருட்களால் என்ன பயன் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையறிந்து அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி தரமான பொருள்கள் வழங்குவதாக உறுதியளித்த பின்னர், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
0
0