P. K. நடத்தும் ஓய்வு நாடகம்… ?ஆலோசகர் பதவியிலிருந்து திடீர் ராஜினாமா… பதுங்குகிறாரா…? பாய்கிறாரா..?

Author: Babu Lakshmanan
6 August 2021, 5:09 pm
PK - congress - updatenews360
Quick Share

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் வியூக வகுப்பாளர், பிரசாந்த் கிஷோர் பிரதான கட்சிகளுக்கு ஆலோசனைகள் கூறுவதுடன் சரி.

ஒரு மாநிலத்தில் ஏற்கனவே எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ இருந்த அல்லது இருக்கும் கட்சிக்குத்தான் அவர் ஆலோசனைகள் வழங்குவது வழக்கம். அதுவும் திரை மறைவில்தான் பெரும்பாலும் அவர் இருப்பார். நேரடியாக களத்திற்கு வரமாட்டார். அதேபோல் ஆலோசனை வழங்கும் கட்சி அதிகாரத்தில் இருந்தால், தனிப்பட்ட முறையில் பதவி எதையும் அவர் எதிர்பார்ப்பதில்லை.

பஞ்சாப்பில் புதுப்பொறுப்பு

ஆனால் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், சில மாதங்களுக்கு முன் அவரை தனது முதன்மை ஆலோசகராக நியமித்துக் கொண்டார். இது மாநிலத்தின் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவிக்கு இணையானது. இந்த பதவியை ஏற்றுக் கொண்டதற்கு முக்கிய காரணம், 2017 தேர்தலில் அமரீந்தர் சிங்கிற்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தவர், பிரசாந்த் கிஷோர் என்பதுதான்.

Prasanth Kishore 02 updatenews360

அந்த தேர்தல் வெற்றிக்கு காரண கர்த்தாவாக பிரசாந்த் கிஷோர் இருந்ததால்தான் 2022-ம் ஆண்டு,தேர்தலை மனதில் வைத்து அவருக்கு முதன்மை ஆலோசகர் பதவியும் வழங்கப்பட்டது.

ஆனால் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டு 6 மாதங்கள் கூட முடியாத நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அதிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவருடைய ஐபேக் குழு, முழுவீச்சில் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்காக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் தலைவரே, முக்கிய பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருப்பது பஞ்சாப் அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறிது காலம் ஓய்வு

தொடர்ந்து 9 வருடங்களாக அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் வகுத்து கொடுப்பதில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் என்று தனது ராஜினாமாவிற்கான காரணத்தை பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.

இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது, தெரியவில்லை. ஏனென்றால் தமிழகம் மற்றும் மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தல்களில் அவர் வியூகம் வகுத்துக் கொடுத்த திமுகவும், திரிணாமுல் காங்கிரசும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோதும் அவர் இப்படித்தான் கூறினார்.

Amarinder Singh - sidhu - updatenews360

ஆனால் அதற்கு முன்பே அமரீந்தர் சிங், தனது முதன்மை ஆலோசகராக நியமித்து விட்டதால், பிரசாந்த் கிஷோரால் அதை தட்டிக்கழிக்க முடியவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரசில் கோஷ்டிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியது. பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார். ஆனால் அதற்கு அமரீந்தர் சிங் முட்டுக்கட்டை போட்டார்.

இதனால் டெல்லி வரை சென்று காங்கிரஸ் மேலிடத்திடம் சமாதானம் பேச வேண்டிய நெருக்கடி நிலை பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்டது. அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக அவர் செயல்பட்டாலும், பஞ்சாப் காங்கிரஸில் சித்துவின் கையே ஓங்கியது. சித்து மாநில காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இது பிரசாந்த் கிஷோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பி.கே.வை சரிகட்டிய சோனியா

அதுமட்டுமின்றி, அவரை முதன்மை ஆலோசகர் பதவியில் நியமித்த அமரீந்தர்சிங்கிற்கும் இது பெரும் பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால், 2022 தேர்தலில், அமரீந்தர் சிங் பஞ்சாபின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரம் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதை தெரிந்துகொண்ட பிறகுதான் பிரசாந்த் கிஷோர் பதவி விலகி விட்டார் என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும், 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஆலோசனை கூறும்படி பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், அதை அவர் ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், வெகு விரைவில் காங்கிரஸ் கட்சியின் பிரதான அரசியல் வியூக வகுப்பாளராக நியமிக்கப்படுவார், என்றும் கூறப்படுகிறது.

Sonia_Rahul_UpdateNews360

அதற்காகவே அவர் சிறிது காலம் ஓய்வெடுக்க விரும்புகிறார். நிச்சயம் அவர் ராகுல்காந்தியைத்தான் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவார். எப்படியும் 15 எதிர்க்கட்சிகளை பிரசாந்த் கிஷோர் ஒரே அணியில் இணைத்து விடுவார் என்று காங்கிரசின் மூத்த தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

பி.கே வழிகாட்டுதல்

இது தொடர்பாக டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “காங்கிரசை பொறுத்தவரை, பஞ்சாபில் சித்துவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால், ஆம் ஆத்மி கூட்டணி மற்றும் சிரோமணி அகாலிதளம் கூட்டணியை எளிதில் வீழ்த்தி விட முடியும் என்று டெல்லி தலைமை நம்புகிறது. 2022 தேர்தலை சந்திக்கும்போது அமரீந்தர் சிங்கிற்கு 80 வயது ஆகிவிடும். அது கட்சிக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் காங்கிரஸ் கருதுகிறது.

அதனால்தான், அமரீந்தர் சிங், பிரசாந்த் கிஷோர் ஆகியோரின் எதிர்ப்பையும் மீறி சித்துவை பஞ்சாப் மாநில தலைவராக சோனியாவும், ராகுலும் நியமித்து விட்டனர்.

அதேநேரம் பிரசாந்த் கிஷோரின் அரசியல் வியூகங்கள் தங்களுக்கு கை கொடுக்கும் என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. ஏற்கனவே காங்கிரசுக்கு நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டும் திட்டம் மற்றும் கொரோனா தடுப்பு ஊசி போன்ற விவகாரங்களில் ‘டூல்கிட்’டை பிரசாந்த் கிஷோர்
உருவாக்கி கொடுத்ததாக ஒரு பேச்சு உண்டு.

Congress rahul tractor - updatenews360

இப்போது செல்போன் உளவு பார்க்கும் மென்பொருள் விவகாரத்தையும் அவர்தான் பல்வேறு போராட்டங்களாக நடத்துவதற்கு வியூகங்களை வகுத்து கொடுத்திருக்கிறார் என்றும் பேச்சு உள்ளது. அதன் காரணமாகத்தான் ராகுல் டெல்லியில் டிராக்டர் ஓட்டியது, சைக்கிள் பேரணியாக வந்தது என்கின்றனர். இதுபோல நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் 20க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பிரசாந்த் கிஷோரிடம் இருக்கிறதாம். இனி ஒவ்வொன்றாக காங்கிரஸ் அல்லது எதிர்க்கட்சிகள் மூலம் அவை வெளிபடத் தொடங்கலாம்.

360 தொகுதிகளில் நேருக்கு நேர்

அதேபோல அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் 15 எதிர்க்கட்சிகளை ஒன்றாக திரட்டுவதற்கும் பிரசாந்த் கிஷோர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
2024 தேர்தலில் காங்கிரஸ்தான் வலுவான கட்சியாக இருக்கும் என்று கூறி வரும் அவர் எதிர்க்கட்சிகளும் காங்கிரசுக்கு, குறைந்தபட்சம் 360 தொகுதிகளை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அதாவது இந்த 360 தொகுதிகளிலும் காங்கிரசும் பாஜகவும் நேருக்கு நேர் மோதவேண்டும் என்பது அவருடைய இலக்கு. இதில் 180 தொகுதிகள் வரை காங்கிரஸ் ஜெயித்து விட்டால் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துவிட முடியும் என்றும் அவர் நம்புகிறார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா? என்பது சந்தேகம்தான்.

modi sonia - updatenews360

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடமும் பிரசாந்த் கிஷோர், இதுபற்றி விரிவாக விவாதித்துள்ளார். மாநில கட்சிகள் 130 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் 360 இடங்களில் பாஜகவுடன் நேரடியாக மோதுவதன் மூலம், மத்திய பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டிவிடலாம் என்று சரத்பவார், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், முலாயம் சிங், கெஜ்ரிவால், லாலு பிரசாத் போன்றோருக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

இதை பல கட்சிகள் ஏற்றுக்கொண்டு விட்டன. இன்னும் சில எதிர்க்கட்சிகள் யோசித்துவிட்டு சொல்வதாக பதிலளித்துள்ளன. இப்படி எல்லா எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டும்வரை பிரசாந்த் கிஷோர் சிறிது காலம் ஓய்வு எடுப்பார். இந்த ஆண்டு இறுதி வரை அவர் வெளிநாடு சென்று ஓய்வு எடுப்பதற்கும் வாய்ப்பு உண்டு. ஒரு சில கட்சிகள் பிரசாந்த் கிஷோரையே பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் கொம்பு சீவி விட்டுள்ளன.

எது, எப்படி இருந்தாலும் பஞ்சாப் விவகாரம் தொடர்பான முட்டல் மோதல்களுக்குப் பிறகு, பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதலமைச்சரின் முதன்மை ஆலோசகர் பதவியிலிருந்து திடீரென ராஜினாமா செய்திருப்பது அந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவுதான்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது

BJP_FLAG_UpdateNews360

பாஜகவின் முன்னணித் தலைவர்களோ, “அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்று. அவருடைய தேர்தல் உத்தியே, ஒரு கட்சியின் மீதும் அக்கட்சித் தலைவர்கள் மீதும் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக போராட்டங்களை முன்னெடுத்து நடத்துவதுதான். அதைத்தான் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தன்னுடைய பிரதான ஆயுதமாக அவர் பயன்படுத்தினார். ஆனால் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் பிரசாந்த் கிஷோர் நினைப்பது ஒரு போதும் நடக்கப்போவதில்லை” என்றனர்.

Views: - 335

0

0