தேர்தல் கருத்து கணிப்புகள் தடை செய்யப்படுமா…? கொந்தளிக்கும் வாக்காளர்கள்!

Author: Babu Lakshmanan
18 April 2024, 8:49 pm
Quick Share

நாடாளுமன்றத்துக்கான முதல் கட்டத் தேர்தல் நாளைய தினமான
ஏப்ரல் 19ம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி, ராஜஸ்தான், மராட்டியம், அசாம்,உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நடைபெற இருக்கிறது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. இப் பட்டியலில் அடுத்த இடத்தில் வருவது ராஜஸ்தான். அங்கு
12 தொகுதிகள் முதல் கட்ட வாக்குப்பதிவில் அடங்குகின்றன. மற்ற மாநிலங்களில் எல்லாம் மிகக் குறைந்த தொகுதிகள் எண்ணிக்கையில்தான் ஓட்டுப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் ஜூன் 1ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடும்.

மேலும் படிக்க: இந்த நபர் அதிமுகவா…? அப்ப உடனே தூக்கு… திமுக மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!!!

முதல் கட்ட தேர்தலில் மிக அதிகபட்சமாக 21 மாநிலங்கள் இடம் பெறுவதும், மற்ற ஆறு கட்டங்களை விட அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

அதேநேரம் 2024 தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய மற்றும் மாநில அளவில் நாளிதழ்கள், டிவி செய்தி சேனல்கள், வார இதழ்கள், யூ டியூப் சேனல்கள், எப் எம் ரேடியோ ஆகியவை மிக மிக அதிக எண்ணிக்கையில் எடுத்து வெளியிட்டுள்ளன. குறிப்பாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களும் தனிப்பட்ட முறையில் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளை வாக்காளர்களிடம் எடுத்து பொதுவெளியில் வைப்பது ஊடகங்களுக்கான சுதந்திரம் என்று கூறப்பட்டாலும் கூட கடந்த ஒரு மாதமாக வெளியிடப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை பார்த்தால் அதில் நடுநிலை என்பது மிக மிக குறைவாகவே தென்படுகிறது.

நமது நாட்டில் தேசிய அளவில் 30க்கும் மேற்பட்ட ஆங்கில மற்றும் இந்தி டிவி செய்தி சேனல்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல தங்களுக்கென்று யூ டியூப் சேனல்களையும் நடத்துகின்றன. இது தவிர அந்தந்த மாநிலங்களில் 25க்கும் அதிகமான பிரபல தனியார் செய்தி சேனல்களும் உள்ளன. இதேபோல் அச்சு ஊடகப் பிரிவின் கீழ் வரும் நாளிதழ்கள், வார இதழ்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டும். இவை அனைத்து மொழிகளிலும் உள்ளன.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டிவி செய்தி சேனல்கள், பிரபல நாளிதழ்கள், வார இதழ்கள், எப் எம் ரேடியோ, யூ டியூப் சேனல்கள் மற்றும் யூ டியூபர்கள் 350க்கும் மேற்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆஹா வாக்காளர்களின் மனநிலையை இவை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளன என்று கூறப்பட்டாலும் கூட ஊடக தர்மத்தை மறந்துவிட்டு தங்களுக்கு பிடித்தமான கட்சிகளின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வெளிப்படுத்தும் நோக்கத்தை மட்டுமே இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலனவை வெளிப்படுத்தின என்பதுதான் இதில் வேதனை.

அதிலும் குறிப்பிட்ட சில ஆங்கில மற்றும் தமிழ் டிவி செய்தி சேனல்கள் அரசியல் கட்சிகளிடமும், அவற்றின் வேட்பாளர்களிடமும் பெருமளவில் பணத்தை வாங்கிக் கொண்டு அந்தக் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்து கணிப்புகளை வெளியிடுகின்றனவோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழும் அளவிற்கு அவை அமைந்து இருந்ததும் நிஜம்.

இதில் நடுநிலை சிந்தனை கொண்டவர்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என்று நினைத்து
டிவி செய்தி சேனல்கள், நாளிதழ்கள், யூடியூப் சேனல்கள் எல்லாவற்றையும் பார்க்க, படிக்க நேர்ந்தால் அவர்கள் தலைசுற்றி மயக்கம் போடாத நிலைதான் வரும்.

மேலும் படிக்க: அமைச்சர் உதயநிதி, கோவை திமுக வேட்பாளருக்கு சிக்கல்…. சமூக ஆர்வலர்கள் அளித்த பரபரப்பு புகார்…!!

இன்னும் சில யூ டியூபர்கள் தங்களது பேச்சுத் திறமையை மூலதனமாக வைத்து உணர்வுகளை தூண்டி விடும் வகையில் மிகச் சாதுர்யமாக பேசி வீடியோ பார்ப்பவர்களையும், வாக்காளர்களையும் மூளைச்சலவை செய்து தங்களது விருப்பங்களை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கும் காட்சிகளை அரங்கேற்றியதையும் காண முடிந்தது. இதனால் இழுபறியாக இருக்கும் தொகுதிகளில் ஒரு சில வேட்பாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வெற்றி வாய்ப்பை பாதிப்பதாகவும் இந்த பதிவுகள் அமைந்து இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போல திணிக்கப்படும் கருத்துக் கணிப்புகளை தேர்தல் ஆணையம் ஒட்டு மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு மட்டும் அல்ல, வாக்குப்பதிவுக்கு பின்பு நடத்தி வெளியிடப்படும் Exit Pollகளையும் அனுமதிக்க கூடாது என்ற கோஷங்களும் ஆங்காங்கே பலமாக ஒலிக்க தொடங்கிவிட்டன.

இதுகுறித்து தமிழகத்தின் பிரபல யூ டியூபர்களில் ஒருவரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு pre-poll survey ஒரு பெரிய வியாபாரமாக மாறிவிட்டது! தேர்தல் ஆணையம் இந்த கேவலமான விஷயத்தை தடை செய்வதும் ஜனநாயகத்திற்கு நல்லது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

“இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை மட்டுமின்றி, தேர்தலில் ஓட்டு போட்டவர்களிடம் கருத்து கேட்டு வெளியிடும் ‘எக்ஸிட் போல்’ முடிவுகளையும் தடை செய்வதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும்” என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இப்படி அவர்கள் சொல்வதற்கு பல காரணங்களும் உண்டு.

“ஏனென்றால் வட மாநிலங்களில் உள்ள பிரபல ஆங்கில மற்றும் இந்தி டிவி செய்தி சேனல்கள் தமிழகத்தில் நேரடியாக களத்திற்கு சென்று வாக்குரிமை உள்ளவர்களிடம் கருத்து கேட்டு பெறுவது மிக மிக குறைவான அளவில்தான் உள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிகளிலும் 150 பேரிடம் கருத்து கேட்டாலே அது மிகப் பெரிய விஷயமாக இருக்கும். மற்றபடி அவர்கள் தமிழகத்தில் உள்ள முன்னணி நாளிதழ்கள், டிவி செய்தி சேனல்கள், யூ டியூப் சேனல்களில் பணியாற்றும் செய்தி ஆசிரியர்கள், மூத்த நிருபர்கள், பிரபல யூ டியூபர்கள் என இன்னொரு 150 பேரிடம் போன் மூலம் கருத்து கேட்டு இந்த இரண்டையும் பல மடங்காக பெருக்கி காட்டுவதைத்தான் வழக்கமாக வைத்துள்ளனர்.

இன்னும் சில ஊடகங்கள் தேர்தலுக்கு தேர்தல் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து
வெற்றி பெற வைக்கும் சென்சிட்டிவான குறிப்பிட்ட சில தொகுதிகளை மட்டும் தேர்வு செய்து அங்குள்ள 100 முதல் 150 வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்தும் வெளியிடுகின்றன.

ஆனால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பதால் சில நேரங்களில் இந்த கருத்துக்கணிப்புகள் துல்லியமாக அமையாமல் போய்விடுவதும் உண்டு. இதனால்தான் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை கருத்துக் கணிப்பில் தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்ற அறிவிப்பையும் அந்த ஊடகங்கள் வெளியிட்டு தப்பித்துக் கொள்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை முன்னணி நாளிதழ்களும், பிரபல டிவி செய்தி சேனல்களும் தேர்தல் தொடர்பாக வாக்காளர்களிடம் சர்வே எடுக்க சென்றால் அந்த ஊடகத்தினர் எந்தக் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப கருத்துக்களை தெரிவிப்பவர்களே அதிகம். அதனால் இதிலும் துல்லியம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

எனவே தேர்தல் நேரத்தில் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களை பைத்தியக்காரர்கள் போல மாற்றும் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேர்தல் ஆணையம் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்.

மேலும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை டிவிக்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தடை விதிக்கும் தேர்தல் ஆணையம் நாளிதழ்கள் மட்டும் தேர்தல் நடக்கும் நாளன்று காலை வரை வெளியிடுவதற்கு எப்படி அனுமதிக்கிறது என்றுதான் தெரியவில்லை. இதையும்
தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நேரத்திலேயே தேர்தல் ஆணையம் நிறுத்துவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனென்றால் இந்த விளம்பரங்களும் ஓட்டு போடச் செல்லும் முன்பாக வாக்காளர்களின் மனநிலையை மாற்றிவிட கூடிய வாய்ப்பு உண்டு.

இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக பல்வேறு நூதன விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இது பாராட்டத்தக்க ஒன்றுதான். அதேபோல் தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போட பணம், மது, போதைப் பொருள், பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தேர்தல் ஆணையம் முற்றிலுமாக தடுக்கவேண்டும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதற்கு இவர்களின் யோசனைகள் பயன்படும் என்றே சொல்லவேண்டும்!

Views: - 136

0

0