‘எப்போதும் முன்மாதிரியாக திகழ்பவர் பிரதமர் மோடி’: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் புகழாரம்..!!

1 March 2021, 5:20 pm
harshvarthan - updatenews360
Quick Share

புதுடெல்லி: எப்போதுமே முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும் எனக் கூறும் பிரதமர் மோடி முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் புகழ்ந்துள்ளார்.

இந்தியாவில் இன்று முதல் 2ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது, நமது நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் பிரதமருக்கு நன்றி கூறுகிறோம்.

நீங்கள் எப்போதுமே முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும் என்று அவர் எங்களிடம் கூறினார். அதேபோல், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியதும் முதல் நபராக போட்டுக்கொண்டார். பிரதமர் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். அதற்கு எதிராக நிறைய தவறான தகவல்கள் பரவின. ஆனால், பிரதமர் நாட்டிற்கு ஒரு தெளிவான செய்தியை அளித்துள்ளார் என்று நினைக்கிறேன்.
அனைத்து தவறான தகவல்களும் தயக்கங்களும் புதைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக நான் இன்று முன்பதிவு செய்து, நாளை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளேன். 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள், அனைத்து எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசியால் பக்க விளைவுகள், வீக்கம் அல்லது காய்ச்சல் போன்றவை மிகக் குறைவாகவே உள்ளது. சாதாரண தடுப்பூசி செலுத்தும்போது கூட சில நேரங்களில் இதுபோன்று நிகழ்கிறது.

தடுப்பூசி போட்ட 4 நாட்கள் அல்லது 10 நாட்களுக்குப் பிறகு ஒருவர் இறந்துவிட்டால், அது தடுப்பூசியால் இறந்ததாக கருத முடியாது. அவ்வாறு இறந்தவர்களது காரணம் குறித்து அறிவியல் பூர்வமாக ஆராயப்பட்டுள்ளது. உயர் ஆற்றல்மிக்க நிபுணர் குழு அதை மதிப்பீடு செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 1

0

0