கண்ணீரில் மூழ்கிய ஊழியர்கள்… தமிழகத்தில் தள்ளாடும் தனியார் மினி-டவுன் பஸ்கள்… இயக்கினால் காத்திருக்கும் சவால்கள்!!

19 June 2021, 10:03 pm
private bus - updatenews360
Quick Share

உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி என்பார்கள். இந்தப் பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ தமிழகத்தில் டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் வைத்திருக்கும் அதிபர்கள், அதில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு 100 சதவீதம் பொருந்தும்.

தமிழ்நாட்டில் சுமார் 7500 தனியார் பஸ்கள் உள்ளன. இவை தவிர 4 ஆயிரம் மினி பஸ்களும் சென்னை நகரை தவிர்த்து மாநிலத்தின் அத்தனை மாவட்டங்களிலும் ஓடுகின்றன.

ஊரடங்கிற்கு பிறகும் வேதனை

அரசுப் போக்குவரத்து கழகங்களிடம் மொத்தமுள்ள பஸ்களில் இது பாதிதான் என்றாலும் கூட லாபகரமாக இயக்கப்படுவதில் தனியார் பஸ்கள்தான் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்தன.

உள்ளூர் பஸ்கள் எனப்படும் டவுன் பஸ்கள், குறுகிய தூரத்துக்கு இயங்கும் மினி பஸ்கள், 40 முதல்100 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கப்படும் பஸ்கள், 300 கிலோ மீட்டருக்கும் மேல் செல்லும்
ஆம்னி பஸ்கள் என 4 அடிப்படையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் பஸ்கள் ஓடுகின்றன.

இவற்றில் டிரைவர்கள், கண்டக்டர்கள், பராமரிப்போர், அலுவலக ஊழியர்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக தற்போது பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் தனியார் பஸ்கள் ஒன்றுகூட கடந்த 40 நாட்களாக இயக்கப்படவில்லை.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் 2400 தனியார் டவுன் பஸ் மற்றும் 4000 மினிபஸ்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள்தான். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எல்லோரையும் போல்தானே இவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள்? இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான்.

ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும்போது, முன்பை விட மோசமான சூழலுக்கு இவர்கள் தள்ளப்படும் அபாயம் உருவாகி இருப்பதுதான், இதில் வேதனை.

பெட்ரோல், டீசல் விலை உச்சம்

அதற்கு இந்த பஸ்களில் வேலை பார்ப்போர் கூறும் காரணங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

அவர்கள் சொல்வது இதுதான்.

“கடந்த மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு தமிழகத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை 86 ரூபாய் 65 காசு. ஜூன் 19-ம் தேதி நிலவரப்படி டீசல் விலை ஒரு லிட்டர் 92 ரூபாய் 31 காசு. லிட்டருக்கு ஏறக்குறைய 6 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு
100 லிட்டர் பயன்படுத்துகிறோம் என்றால் இனி கூடுதலாக 600 ரூபாய் செலவாகும்.

Petrol_Bunk_UpdateNews360

சரி, கூடுதல் செலவை ஈடுகட்ட கட்டணத்தை சிறிது உயர்த்தலாம் என்றால் அதுவும் நடக்காத காரியம்.

நெருக்கடியான அரசு அறிவிப்பு

இதற்கு முக்கிய காரணம், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதுதான். தற்போது, இந்த சலுகை பெறுவோர் வரிசையில் மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் தினமும் தனியார் பஸ்கள் மற்றும் தனியார் மினி பஸ்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை சராசரியாக 16 லட்சம் முதல் 18 லட்சம் வரை இருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியபோது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பின்பு, தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்துபோனது. இதனால் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக கடந்த ஆண்டு பல வழித்தடங்களில் பஸ்களை இயக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.

செப்டம்பர் மாதத்துக்கு பிறகு நிலைமை சீரடைந்ததால் ஓரளவு இயல்பு நிலை திரும்பியது. அப்போது பஸ்களை இயக்கியதில் லாபம் இல்லை என்றபோதிலும் அதிகமாக கையைக் கடிக்கவில்லை.

அதன் பிறகு 8 மாதங்களுக்கு பஸ்களை இயக்குவதில் சிரமம் இல்லை என்றாலும் கூட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் அவ்வளவாக பஸ்களை நாடவில்லை. குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்டோர் பஸ்களில் பயணிப்பதையே தவிர்த்ததால் நெருக்கடி மேலும் அதிகமாகிப்போனது. இதனால் தனியார் டவுன் பஸ்கள், மினி பஸ்களில் அன்றாடம் பயணம் செய்வோர் எண்ணிக்கை 12 லட்சத்துக்கும் கீழாக குறைந்தது.

தமிழக அரசு முன்வர வேண்டும்

கடந்த மாதம் 10-ந் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பஸ்களை முழுமையாக இயக்க முடியாத மீண்டும் சூழல் உருவானது. விரைவில் பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதியளிக்கும் தெரிகிறது.

அவ்வாறு பஸ்களை இயக்கும்போது, தனியார் டவுன் பஸ்களும், மினி பஸ்களும் முன்பிருந்ததை விட மோசமான நிலைக்கு தள்ளப்படும். ஏனென்றால் தனியார் டவுன் பஸ்களில் ஒரு நாளைக்கு 12 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள் என்றால் அதில் 5 லட்சம் பேர் பெண் பயணிகள்.

Cbe Bus strike - Updatenews360

தற்போது அரசின் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால், இனி இவர்கள் தனியார் டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்களில் பயணிப்பது 80 சதவீதம் வரை குறைந்துவிடும். அத்துடன் மட்டுமின்றி பெண் பயணிகளுடன் வரும் அவர்களுடைய குடும்பத்தினரும் பிரிந்து பயணம் செய்யக்கூடாது என்பதற்காக அரசு பஸ்களில்தான் ஏறுவார்கள். இதனால் தனியார் டவுன் பஸ்களுக்கு இரட்டை பாதிப்பு ஏற்படும்.

அதாவது அன்றாட வசூல் கிட்டத்தட்ட 60 சதவீதம் வரை குறைந்து போய்விடும். ஒருபக்கம் டீசல் விலை உயர்வு, இன்னொரு பக்கம் பெண் பயணிகள் இல்லாமை போன்றவற்றால் படுநஷ்டம் ஏற்பட்டு பஸ்களை இயக்குவதே கடினமான செயலாக மாறிவிடும்.

100 கிலோமீட்டர் வரை இயக்கப்படும் தனியார் பஸ்களுக்கும், ஆம்னி பஸ்களுக்கும் இதுபோன்ற நெருக்கடிகள் அதிகம் இருக்காது. தமிழகத்தில் இயங்கும் 3500 ஆம்னி பஸ்களை பொறுத்தவரை போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் ஆயுத பூஜை, தீபாவளி,பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களின்போது கட்டணத்தை உயர்த்தி இதுவரை ஏற்பட்ட நஷ்டத்தை சரி கட்டி லாப நிலைக்கு வந்துவிடுவார்கள். அவர்களிடம் பணிபுரியும் டிரைவர்கள் கண்டக்டர்கள் ஊழியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படாது. அதேநேரம் நான்கைந்து டவுன் பஸ்களை வைத்துள்ள உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திக்க விரும்பாமல் தங்களுடைய தொழிலையே விட்டு விடக்கூடிய அபாயம் உருவாகும்.

TN Secretariat- Updatenews360

இதுபோன்ற தனியார் டவுன் பஸ் மற்றும் மினி பஸ் முதலாளிகளிடம் மட்டுமே சுமார் 56 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகிறோம். எங்கள் அனைவருக்கும் இனி வேலை பறிபோகலாம்.

அப்படியொரு சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டால் எங்கள் அனைவருக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி வழங்க தமிழக அரசு உடனடியாக முன்வரவேண்டும்!” என்று கோரிக்கை வைத்தனர்.

தனியார் டவுன் பஸ்கள், மினி பஸ்களில் வேலை பார்க்கும் டிரைவர்கள் கண்டக்டர்கள், ஊழியர்களின் அச்சமும், கோரிக்கைகளும் நியாயமானதே!

Views: - 187

0

0