பொன்முடிக்கு மீண்டும் சிக்கல்?…திகைப்பில் திணறும் திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2023, 8:47 pm
Ponmudi - Updatenews360
Quick Share

அமைச்சர் பொன்முடி அவருடைய மகன் தெய்வீக சிகாமணி எம்பி இருவரின் சென்னை, விழுப்புரம் வீடுகளிலும்,அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை திடீர் ரெய்ட் நடத்தி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அடுத்ததாக பொன்முடி இன்னொரு பெரும் சோதனையை சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

ஏற்கனவே அவருடைய வீட்டில் கணக்கில் காட்டப்படாத 82 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 13 லட்ச ரூபாய் வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு வங்கியில் டெபாசிட் தொகையாக போட்டு வைத்திருந்த 42 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கிய அதிர்ச்சியிலிருந்தே பொன்முடி மீண்டு இருக்கமாட்டார்.

அந்த வேதனை மறைவதற்குள், அடுத்து பேரதிர்ச்சி தருவதுபோல அவரை ஒரு புதிய விவகாரம் பலமாக உலுக்கி விட்டுள்ளது.

பொன்முடிக்கு புதிய சிக்கல்

1996 முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதும் அவருடைய மனைவி விசாலாட்சி மீதும் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002-ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர் ஐகோர்ட் உத்தரவுப்படி, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது., கடந்த ஜூன் 28-ம் தேதி நீதிபதி வசந்த லீலா அமைச்சர் பொன்முடி அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு போதிய ஆதாரங்களும் இல்லை எனக் கூறி இருவரையும் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

தமிழக அரசை உலுக்கிய உத்தரவுகள்

இந்நிலையில்தான், சென்னை ஐகோர்ட்டில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடி மீதான வேலூர் கோர்ட் தீர்ப்பு தொடர்பான வழக்கை ஐகோர்ட் சார்பாக தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த வழக்கில் அவர் பிறப்பித்த உத்தரவுகள் நீதித்துறை வட்டாரத்தை மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியை மட்டுமின்றி சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சிலரின் செயல்பாடுகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இதனால் இவர்கள் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்களோ என்ற எண்ணத்தை இது பொதுவெளியில் ஏற்படுத்தியும் உள்ளது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த அந்த உத்தரவில் வேலூர் கோர்ட் அவசர கதியில் செயல்பட்டு அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரித்து தீர்ப்பளித்து உள்ளது என்றும் கடுமையாக சாடி இருக்கிறார்.

அவசர கதியில் மோசமான விசாரணை

அவர் பிறப்பித்த உத்தரவு இதுதான். நான் எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்பதால் கீழமை நீதிமன்ற ஆவணங்களை பரிசீலித்தேன். 

இதுவரை நான் பார்த்ததில், மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன்.

இந்த வழக்கின் மீதான விசாரணை இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு துரித கதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் நீதித்துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களின் ஆசிர்வாதத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜராகி இருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சாட்சியிடம் ஒரே நாளில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல ஜூன் 23ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

நான்கு நாட்களுக்குள், வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, ஐகோர்ட்டே ஆச்சர்யப்படும் விதமாக 172 சாட்சிகளின் வாக்கு மூலங்கள் மற்றும் 381 ஆவணங்களை பரிசீலித்து 226 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். இதை அந்த நீதிபதியின் தனித்துவமான சாதனையாகவே பார்க்க முடிகிறது.

தீர்ப்பை வழங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த நீதிபதி ஜூன் 30 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்று மகிழ்ச்சியுடன் சூரிய அஸ்தமனத்திற்கு சென்றார்.

ஒரு வழக்கை கீழ் கோர்ட் விசாரிக்கலாமா? கூடாதா? என்பதை குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 407-ன் நீதி பரிபாலன ரீதியாகத்தான் ஐகோர்ட் உத்தரவிட முடியுமே தவிர நிர்வாக ரீதியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது.

இப்படி விதிகளை மீறி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த ஊழல் வழக்கை வேலூர் மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றியது முற்றிலும் சட்ட விரோதம். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 227ன் கீழ் நிர்வாக ரீதியான உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பிக்கலாம் என்றாலும் கூட அதை ஒன்று அல்லது இரண்டு நீதிபதிகளால் மட்டும் பிறப்பிக்க இயலாது.

சட்டப்படி செல்லாது

ஐகோர்ட்டின் அனைத்து நீதிபதிகளும் கொண்ட முழுமையான அமர்வுதான் இது போன்றதொரு உத்தரவை பிறப்பிக்க முடியும். தவிர இந்த வழக்கு வேலூர் கோர்ட்டுக்கு ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்த காரணத்தை உத்தரவை பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டின் நிர்வாக நீதிபதிகள் இருவரும் கூறவே இல்லை.

இதுபோன்ற நிலையில் விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு வழக்கை மாற்றிய உத்தரவும், பொன்முடி, விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து வேலூர் கோர்ட் வழங்கிய தீர்ப்பு உள்ளிட்ட அத்தனை நடவடிக்கைகளும் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல.

நீதித்துறையில் இதுபோன்ற சட்ட விரோத செயல்கள் நடக்கும்போது அதை ஐகோர்ட்டுகள்தான் சரி செய்தாக வேண்டும். இல்லையென்றால் குற்றங்களை கோர்ட்டில் மறைக்கின்றனர் என்று எண்ணம்தான் மக்களிடம் ஏற்படும். அதை தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கும், பொன்முடி, விசாலாட்சி ஆட்சி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிடுகிறேன். இதை தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கும் விதமாக உத்தரவின் நகலை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனுப்பி வைக்கவேண்டும்” என்று கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 7ம் தேதிக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.

அதிரடி காடிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இதுபோன்றதொரு அதிரடி தீர்ப்பை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுநாளே அதை விசாரணைக்கும் எடுத்துக்கொண்டு அதன் மீது புதிய உத்தரவையும் பிறப்பித்து விட்டடார்.

“தமிழகத்தில் நீதித்துறை வரலாற்றிலேயே ஒரு ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அமைச்சருக்கு ஆதரவாக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி
அதை சட்டப்படி செல்லாது என்று அறிவித்திருப்பதுடன் அந்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது எப்போதும் நடந்திராத ஒன்று” என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கோட்டை விட்ட திமுக

“பெரும்பாலும் கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்கும் வழக்குகளில் இருந்து அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும் எளிதாக தப்பி விடுவார்கள். ஆனால் நாட்டிலேயே மிக வலுவான சட்டப்பிரிவு அணியை கொண்ட திமுக இந்த வழக்கைப் பொறுத்தவரை கோட்டை விட்டுவிட்டது என்றே கருதத் தோன்றுகிறது.

ஏனென்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் எங்களுக்கும் மனுதாரர்களுக்கும் இடையே சமரசம் ஆகிவிட்டது என்று கூறி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் ஏற்றுக்கொண்டு கடந்த ஆண்டு அந்த வழக்கை ரத்தும் செய்தது.

ஆனால் இதே விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றபோது, இந்த வழக்கை தொடர்ந்து அமலாக்கத்துறையும், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசும் விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டு தற்போது அதன் மீது தீவிர விசாரணையும் நடந்து வருகிறது.

அதனால் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலும் இது போன்றதொரு நெருக்கடியான சூழல் உருவாகலாம் என்பதை திமுகவின் சட்டப் பிரிவு ஏன் கணிக்க தவறிவிட்டது என்றுதான் தெரியவில்லை.

ஒரே நேரத்தில் இரு அமைச்சர்கள் வழக்கு

ஒருவேளை அமைச்சர் பொன்முடி மீதான வழக்கும்,செந்தில் பாலாஜி மீதான வழக்கும் ஒரே நேரத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்ததால் இந்த விஷயத்தை ஆளும் கட்சியான திமுக சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லையோ? என்ற சந்தேகமும் எழுகிறது.

பொதுவாக நீதித்துறை தொடர்பான விவகாரங்களில் திமுக மிகவும் உஷாராக இருக்கும். ஆனால் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி இருவர் தொடர்பான வழக்குகளையும் சரிவர கையாளாமல் திமுக தனக்குத்தானே தலைவலியை உருவாக்கிக் கொண்டதோடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே மத்திய பாஜக அரசுடன் திமுக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இது இன்னொரு பூதாகரமான விஷயமாக உருவெடுத்து இருக்கிறது.

எப்படி எதிர்கொள்ளப் போகிறது திமுக?

செந்தில் பாலாஜி மீது புதிய வழக்குகளை பதிந்து அவரை கைது செய்து மீண்டும் தங்களது கஸ்டடியில் கொண்டு வருவதற்கான முயற்சியில் அமலாக்கத்துறை
இறங்கி இருப்பதாக கூறப்படும் நிலையிலும், தன்னை அமலாக்கத்துறை எந்த நேரத்தில் கைது செய்யுமோ என்று பொன்முடி அச்சத்திலும் உள்ள நிலையிலும் அவர் மீதான வழக்கில் வேலூர் கோர்ட் அளித்த தீர்ப்பு சட்டப்படி செல்லாது என்று ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருப்பது திமுக அரசுக்கு பின்னடைவுதான் என்றே சொல்ல வேண்டும்” என்று அந்த சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதை திமுகவும், முதலமைச்சர் ஸ்டாலினும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 221

0

0