சுயநலத்துக்காக கட்சியும், ஆட்சியும் நடத்தும் CM ஸ்டாலின் : கிருஷ்ணசாமி பயங்கர குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
2 October 2023, 10:34 am
Quick Share

காவிரி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மௌனம் சாதிப்பதாகவும், திமுக சுயநலத்துக்காக தான் கட்சியும், ஆட்சியும் நடத்துகின்றனர் என கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் அமலில் இருந்த பூரண மதுவிலக்கை முன்னாள் முதல்வர் கருணாநிதி வரலாற்று பிழை செய்துவிட்டார். இதனால் தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆண்களின் 60 சதவீதம் பேர் மதுபானம் அருந்துகின்றனர் என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இளைஞர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவிகளும் மது அருந்தும் நிலை உள்ளது. காந்தி ஜெயந்தி முன்னிட்டு இன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் எங்கள் கட்சியினர் பூரண மதுவிலக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற மனு அளிக்க உள்ளனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும்.

டிசம்பர் 15ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் 26 ஆம் ஆண்டு விழாவை மது ஒழிப்பு சிறப்பு மாநாடாக நடத்த உள்ளோம். கனிம வள கொள்ளையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. வைப்பாற்றில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இதற்கு ஆளுங்கட்சி பிரதிநிதிகளே துணை போகின்றனர்.

வந்தே பாரத் ரயில் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ரயிலுக்காக பாண்டியன் விரைவு ரயில் உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்களின் நேரத்தை அதிகரிக்க கூடாது. வந்தே பாரத் ரயில் சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். கடந்த 2019, 2021-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் தான் இருந்தது.

கடந்த ஜூலை மாதம் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் அதிமுக- பாஜக இடையே சிறு பிரச்சினைகள் இருப்பது தொடர்பாகவும், அவர்களுக்கிடையே இணக்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும் பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் வலியுறுத்தினேன். இது தொடர்பாக கடிதமும் எழுதினேன். கூட்டணியில் ஒரு கட்சி இருப்பதும் வெளியேறுவதும் அவரவர் விருப்பம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் இருக்கும் நிலையில், தமிழகத்தில் யாரும் எதிர்பாராத கூட்டணி மாற்றங்கள் நடைபெறும். தமிழகத்தைப் பொறுத்தவரை, அதுவும் தென் தமிழகத்தை பொறுத்த வரை 14 முதல் 20 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ளது. தென் தமிழகத்தின் வளர்ச்சியை உறுதிப்பட நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கும் வகையில் எங்களது கூட்டணி அமையும்.

திமுக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. திமுக கடந்த 40 ஆண்டு காலமாக தனது குடும்பத்துக்காகவே பாடுபட்டு வருகிறது. பேச்சு மட்டுமே தமிழர் என்று உள்ளது. ஆனால் தமிழர் நலனுக்கு எதிராக அவர்களது செயல்பாடுகள் உள்ளது. அவர்களது நோக்கம் எல்லாமே அரசியல் அதிகாரம் மட்டும்தான்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் காவிரி பிரச்சினையில் தமிழக முதல்வர் மௌனம் சாதிக்கிறார். அவர் காங்கிரசை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. காவிரி உரிமை பறிபோனாலும் பரவாயில்லை கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படக்கூடாது என்பது திமுகவின் நோக்கமாக உள்ளது. திமுக சுயநலத்துக்காக தான் கட்சியும், ஆட்சியும் நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டின் அனைத்து மணல், குவாரி, ரியல் எஸ்டேட் திரைப்படம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் ஒரு புள்ளியில் குவித்திட வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளும் ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி உள்ளது. இதைவிட அப்பட்டமான சர்வாதிகாரம், பயங்கரவாதம் வேறு ஏதும் இருக்க முடியாது. பேசுவது தான் ஜனநாயகம். ஆனால் நடப்பதெல்லாம் ஜனநாயகத்துக்கு விரோதம், இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செல்லத்துரை, துணைச் செயலாளர் அதிக்குமார், மாநில பொறுப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Views: - 258

0

0