பாக்க’லியோ’…. அனுமதியில்’லியோ’…. நடிகர் விஜய் படத்திற்கு அழுத்தம் கொடுத்தாங்க ; ரைமிங்கில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்..!!!

Author: Babu Lakshmanan
19 October 2023, 12:28 pm
Quick Share

திருப்பூர் மருத்துவ கல்லூரியில் ஆயுத பூஜைக்கு கடவுள் படங்களை வைத்து கொண்டாடக் கூடாது என்று அக்கல்லூரியின் முதல்வர் சுற்றறிக்கை வெளியிட்டிருப்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்தடைந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு மதம் சார்ந்த படங்கள் வைக்கக்கூடாது என திருப்பூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஒருவேளை வைத்திருந்தால் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். எடுத்தால் தான் பிரச்சனை வரும். காலம் காலமாக விஜயதசமி, ஆயுத பூஜை என்றால் சக்தி பூஜை என அர்த்தம். அரசு அதிகாரிகள் என்றால் இப்படி பேசினால் தான் இந்த அரசுக்கு பிடிக்கும் என பேச ஆரம்பித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அப்படி ஒரு சுற்றறிக்கை இல்லை என கூறுகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது சரஸ்வதி, லட்சுமி, சக்தி ஆகிய தெய்வங்களின் படங்கள் இருக்கும். ஆயுதங்களையே சக்தியின் கையில் வைத்து தான் நாம் கொண்டாடுகிறோம். ஒட்டுமொத்தமாக மதம் சார்ந்த உணர்வுகளை ஒதுக்கி தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழக அரசு இதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும். ஏன் இது போன்ற சுற்றறிக்கை வரவேண்டும் என கூற வேண்டும்.

குறிப்பாக இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்பவர்கள் மீது பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஒருதலைபட்சமாக எப்போதும் மத உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருப்பது என்பது சரியில்லை என்பது எனது கருத்து. நீட் தேர்ச்சியின் மூலம் பயிற்சியின் தேர்வின் மூலம் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து என சொன்ன திமுக அரசு, இதை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மறந்து இதுபோன்று ஒருதலைபட்சமாகவே நடந்து கொள்வது சரியில்லை.

லியோ திரைப்படம் புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி அளித்த பின்பும், அழுத்தம் காரணமாக ஒன்பது மணிக்கு தான் திரையிட முடிந்தது. தமிழக அரசின் அழுத்தம் காரணமாக, சுத்தம் தமிழில், தூய தமிழில் நிறுவனம் நடந்து வரும் ரெட் ஜெயன்ட் பெயரில் பிரச்சனை என நிர்வாகத்தினர் கூறுகின்றனர். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என கூறுகின்றனர். அப்படி நான் சினிமாவை சினிமா என்றுதானே பார்க்க வேண்டும்.

சுதந்திரமான ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதை நான் கூறுகிறேன். ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறியதால் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் எதுவும் கூற வேண்டாம் என கூறவில்லை. யாருக்கு உள்ளுணர்வாக வெற்றியை கொண்டாட தோணுகிறது. அதை சொல்லிக் கொண்டாடட்டும், இதை எல்லா மதத்தினரும் செய்கின்றனர். வெற்றியின் வெளிப்பாடாக உற்சாகத்தோடு இறைவன் தான் அந்த வெற்றியை கொடுத்தார் என்ற எண்ணத்தில் சொல்கின்றனர். எனவே அதை தப்பு என கூற முடியாது, என்றார்.

ஆதீனங்கள் காலம் காலமாக தமிழோடு ஆன்மீகத்தை வளர்த்தவர்கள். அவர்கள் ஒன்று சொன்னால், அரசாங்கம் அதை நிச்சயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மற்ற மதங்களை மற்ற பிரச்சனைகளையோ சொல்லும் போது, அரசாங்கம் உடனடியாக கவனத்தை செலுத்துகிறது. ஆனால் இந்து மதம் சார்ந்த எந்த ஒரு பிரச்சனைகளுக்கு கவனம் கொடுப்பதில்லை.

திருப்பூர் முதல்வரின் மருத்துவமனை முதல்வரின் கருத்து சுற்றறிக்கையை கூட அரசு கவனமாக கவனிக்க வேண்டும். ஆதீனங்கள் சொல்கிறார்கள் என்றால், அதில் உண்மை இருக்கிறதா..? என்பதை பார்க்க வேண்டும் எனது வேண்டுகோள். சென்னிமலையில் மக்கள் எந்த அளவிற்கு திரண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மேல்மருவத்தூரிலும் இதேபோல் ஒரு பிரச்சனை வந்தது. அவரவர்கள் நம்பிக்கையை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதிலும், மற்றவர்களின் நம்பிக்கையில் அவர்கள் உள் புகுவதும் தவறு என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், எனக் கூறினார்.

INDIA கூட்டணியின் மகளிர் மாநாடு குறித்து அவர் பேசியதாவது :- சோனியா காந்தி அவர்கள், தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த மரியாதைக்குரிய கலைஞர், அண்ணாதுரை அவர்களின் நேரத்தில்தான் பெண்களுக்கான சம உரிமை கொடுக்கப்பட்டது என கருத்தை கூறியுள்ளார். அதற்கு முன்னால் இருந்த காமராஜரை முற்றிலுமாக மறந்துள்ளார். காமராஜர் படிப்பறிவை கொடுத்ததால் தான் பெண்களுக்கு நிச்சயமான ஒரு புரிதலும், ஒரு பக்க பலமும், மேன்மையும் வந்தது. அதனால் அதை மறந்தது தவறு.

மேலும் சாமானிய பெண்களுக்கான மாநாடு என சொல்லிவிட்டு, அதில் இருந்தவர்கள் அரசியல் தலைவர்களின் வாரிசுகளாகவே இருந்தனர். சாதாரண பெண்கள் தலைவர்கள் என யாரும் இல்லை. மிக தவறான அவ நம்பிக்கையை மகளிர் மத்தியில் திணிக்கிறார்கள். மகளிர் இடஒதுக்கீடு இப்போது வராது என கூறுவது தவறு. அனைத்து கட்சியைச் சார்ந்த மகளிர் 33 சதவீத மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி கூற வேண்டும். அதை கனிமொழி போன்றவர்கள் கூட கண்துடைப்பு என கூறுவது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

நான் மட்டுமல்ல பாரதப் பிரதமர் அவர்களும், காமராஜரின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் கருப்பு பண ஒழிப்பிற்கு என்னை பாராட்டிருப்பார் என பிரதமர் கூறியுள்ளார். எனவே, ஊழலற்ற தன்மை முன்னேற்றத்திற்கு உதாரணமாக காமராஜரை எடுத்துக் கொள்வோம்.

அவருக்கு என்ன மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. பெட்டி பெட்டியாக பணம் எடுத்த பின்பும், பழிவாங்கும் நடவடிக்கை என கூறுகின்றனர். இது அனைத்தும் மக்களின் பணம், இதை பழிவாங்குகிறது என சொன்னால் மக்கள் நம்ப மாட்டர்கள். காவிரி விவகாரத்தை பொருத்தவரை எதிர்க்கட்சியாக இருந்த துணிச்சல், ஆளும் கட்சியாக வந்த பின்பு ஸ்டாலின் இடம் காணாமல் போய்விட்டது என்பதுதான் என்னுடைய கருத்து.

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதில் இந்தியா மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. உக்ரைன் போராக இருக்கட்டும், இன்றைக்கு இஸ்ரேல் போராக இருக்கட்டும், கொரோனா காலகட்டத்திலும் நமது இந்திய அரசு பாரதப் பிரதமரின் வழிகாட்டுதலில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டில் மிக பத்திரமாக இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

பெரும் போர் சூழலில் இருந்து இந்தியர்களும், தமிழர்களும் வந்துள்ளார்கள் என்பது பிரதமருக்கு அயல் நாடுகளில் எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதும், அதன் காரணமாகத்தான் இந்தியர்களை பத்திரமாக அனுப்பி வைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியர்கள் உலகில் எந்த பகுதியில் பிரச்சனை இருந்தாலும், அவர்களை இந்திய அரசு பத்திரமாக மீட்டு வரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை நான் ஒரு சாதாரண குடிமகள் என்பதால், எனவே அனைத்து விஷயங்களிலும் கருத்து கூறுவது உரிமை எனக்கு உண்டு, என்றார்.

Views: - 237

0

0