ஹத்ராஸ் செல்ல ராகுல் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி : அனைவரையும் அனுமதிக்கக் கோரி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..!

By: Babu
3 October 2020, 5:01 pm
rahul gandhi - updatenews360 (2)
Quick Share

உத்தரபிரதேசம் : உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி உள்பட 5 பேருக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயதுடைய தலீத் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி, பிரியங்கா, உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் 203 பேர் மீது நொய்டா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும், ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சி குழுவினர் இன்று மதியம் ஹத்ராஸ் பயணம் மேற்கொள்கின்றனர். ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதை யாராலும் தடுக்க முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஹத்ராஸிற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பிக்கள் குழுவினர் பயணம் மேற்கொண்டனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்த நொய்டாவில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், ராகுல் காந்தி உள்பட 5 பேருக்கு மட்டுமே போலீஸார் அனுமதியளித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மட்டும் காரில் புறப்பட்டு சென்றனர்.

ஆனால், அனைவரையும் ஹத்ராஸ் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 37

0

0