கைகொடுக்குமா ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ : தமிழகத்தில் இன்று முதல் பிரச்சாரம்…!!!

23 January 2021, 10:40 am
Rahul_Gandhi_UpdateNews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் ஒருசில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அதற்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் நிலையோ, பரிதாபமாக உள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸுடனான கூட்டணியை திமுக வெளிப்படையாக முறித்துக் கொண்டது. இதனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திமுகவின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மங்கிப் போனதால், அக்கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றவே திமுக தலைவர் ஸ்டாலின், மூத்த தலைவர்களை வைத்து காங்கிரஸை பந்தாடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுமா..? என்பதே சந்தேகமாக உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். “ராகுலின் தமிழ் வணக்கம்” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த சுற்றுப்பயணத்தின்போது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர், 11 மணிக்கு கோவை வருகிறார். ராகுல்காந்தி வருகையையொட்டி திருப்பூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

இதுதொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி சனிக்கிழமை மாலை திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரும் அவர் கோவையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர் மதிய உணவை முடித்துக் கொண்டு கார் மூலமாக திருப்பூர் வருகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவினாசி ரோடு அனுப்பர்பாளையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் மாலை 3 மணிக்கு அனுப்பர்பாளையம்புதூரில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடி முன்பு திறந்த வேனில் நின்றபடி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதையடுத்து மாலை 4 மணிக்கு திருப்பூர் ரெயில்நிலையம் அருகில் உள்ள திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் ராகுல்காந்தி, அதே இடத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதன் பின்பு மாலை 4.30 மணிக்கு பல்லடம் ரோடு ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அன்று இரவு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ராகுல்காந்தி தங்குகிறார். திருப்பூரில் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசு, செல்லக்குமார் எம்.பி. உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். ராகுல்காந்தியை வரவேற்க கட்சியின் மாவட்ட, மாநகர, வட்டார, சர்க்கிள், மண்டல, வார்டு, கிளை நிர்வாகிகள் அணி திரண்டு வருவதுடன், அவருடைய பிரசார நிகழ்ச்சியில் தொழில்துறையினர், தொழிலாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Views: - 4

0

0