சுகாதாரத்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி : அரசின் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி..!!
28 January 2021, 4:28 pmசென்னை : சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் எனக் கோரி, கல்லூரி வளாகத்திலேயே கடந்த மாதம் போராட்டத்தை தொடங்கினர்.
இந்தப் போராட்டமானது 50 நாட்களை கடந்து விட்ட நிலையில், அரசே இந்தக் கல்லூரியை ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்களும் மாணவர்களுக்காக குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத்துறையின் கீழ கொண்டுவரப்படுவதாக தமிழக அரசு இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாறியுள்ளது.
அதோடு, ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது ராஜா முத்தையா கல்லூரி, சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
0
0