அடுத்து தலைமை பொறுப்பு யாருக்கு…? காங்கிரஸில் வெடிக்கும் மோதல் : சோனியா, ராகுலுக்கு தீராத தலைவலி..!!!

Author: Babu Lakshmanan
10 August 2021, 3:56 pm
COngress - updatenews360
Quick Share

சச்சின் பைலட் கொடுத்த ஷாக்

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில், கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அக்கட்சிக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டது. இளம் தலைவர் சச்சின் பைலட் தனக்கு 32 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று திடீரென போர்க்கொடி உயர்த்தினார். இதனால் அசோக் கெலாட் தலைமையிலான அரசு ஆட்டம் கண்டது.

என்றபோதிலும் சச்சின் பைலட் சொன்னபடி, 32 எம்எல்ஏக்கள் அவர் பக்கம் சாயவில்லை. 19 பேர் மட்டுமே அவருடன் நின்றனர். சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்ய பிரச்சனை ஐகோர்ட் வரை சென்றது.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம், சச்சின் பைலட்டை டெல்லிக்கு வரவழைத்து சமாதானம் செய்து வைத்து அனுப்பியது. அப்போது, “நான் காங்கிரசை விட்டு விலகப் போவதில்லை. கட்சியில் இருந்தவாறே போராட்டத்தை தொடர்வேன்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அதாவது, தான் பாஜகவில் சேரப் போவதில்லை என்பதை சூசகமாக குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல் “ராஜஸ்தானில் என்னுடைய கடினமான உழைப்பால்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது என்பதால், கட்சியைவிட்டு விலகமாட்டேன்” எனவும் அப்போது அவர் உறுதியாக தெரிவி்த்திருந்தார்.

அசோக் கெலாட் திட்டவட்டம்

ஆனாலும் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவு எம்எல்ஏக்களின் போன்கள் மாநில அரசால் ஒட்டுக்கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இருவருக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்தது.

உடனடியாக அசோக் கெலாட்டை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று, சச்சின் பைலட் ஆதரவாளர்கள் டெல்லி மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டதால் இருதரப்பினரையும் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் சமாதானம் செய்தனர்.

Ashok_Gehlot_Updatenews360

இந்த நிலையில், “2023 சட்டப் பேரவைத் தேர்தலிலும் நான் போட்டியிடுவேன், எனது தலைமையில்தான் காங்கிரஸ் ராஜஸ்தானில் தேர்தலை சந்திக்கும்” என்று அசோக் கெலாட் அதிரடியாக அறிவித்தார்.

இது, சச்சின் பைலட்டையும் அவருடைய ஆதரவாளர்களையும் மேலும் எரிச்சல் அடைய வைத்தது. 2018 சட்டப்பேரவைத் தேர்தலை சச்சின் பைலட்டை முன்நிறுத்திதான், காங்கிரஸ் சந்தித்தது. ஆனால் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, தனக்கு சோனியாவிடம் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி 70 வயது அசோக் கெலாட் முதலமைச்சர் பதவியை தட்டிப் பறித்துவிட்டார், என்பது அரசியலில் உள்ளோர் அனைவரும் அறிந்த உண்மை. இதன் காரணமாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

அசோக் கெலாட் ஆதரவாளர்களோ, “மாநிலத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்களில் நமது முதலமைச்சரும் ஒருவர். அவருக்கு 70 வயதுதான் ஆகிறது. அதனால் இன்னொரு தேர்தலை அவருடைய தலைமையில் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அமைச்சர் பதவிகளை நிரப்புங்க

கடந்த ஆண்டு சச்சின் பைலட்டை டெல்லி மேலிடம் சமரசம் செய்தபோது, உங்களுடைய ஆதரவாளர்களுக்கு விரைவில் அமைச்சர் பதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் மாநிலத்தில் காலியாக உள்ள 411 அமைச்சர் பதவிகள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகவே உள்ளது. இதனால் சச்சின் பைலட் ஆதரவாளர்களிடம் மீண்டும் முணுமுணுப்பு சத்தம் கேட்கத் தொடங்கியது.

கடந்த மாத இறுதியில் இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்தபோது, மீண்டும் சச்சின் பைலட் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு சமாதானம் செய்து அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல முதலமைச்சர் அசோக் கெலாட் உடனடியாக காலியாக உள்ள அமைச்சர் பதவிகளை நிரப்பவேண்டும். அதில், சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.

sachin pilot - udpdatenews360

எனினும், காங்கிரஸ் தலைமையிடம் தான் வைத்த கோரிக்கைகள் 2 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாதது குறித்து கடும் அதிருப்தியில் சச்சின் பைலட் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் மேலிடம் வாக்குறுதி அளித்து 3 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை, ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் சச்சின் பைலட்டும், அவருடைய ஆதரவாளர்களும் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

பாஜகவில் சச்சின் பைலட்

இதையறிந்த பாஜக அவர்களுக்கு தூண்டில் போட்டுள்ளது. அதை உறுதிப்படுத்துவதுபோல்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜகவின் தேசிய துணைத்தலைவர் அப்துல்லா குட்டி கூறுகையில், “காங்கிரசின் இளம் தலைவர் சச்சின் பைலட் சிறந்த தலைவர்தான். எதிர்காலத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். சச்சின் பைலட் பாஜகவில்கூட சேர்வார் என்று நான் நினைக்கிறேன்.

பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என சிலர் அவதூறு பரப்புகிறார்கள். அது தவறானது, பொய்யானது. மரியாதைக்குரிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கூறியுள்ளபடி இந்துக்கள், முஸ்லிம்கள் மரபணு ஒன்றுதான். அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான் பாஜகவின் கொள்கை” என்று தெரிவித்து இருந்தார்.

இது, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் கொந்தளிக்க வைத்துவிட்டது. பல இடங்களில் அப்துல்லா குட்டியின் உருவ பொம்மையை கொளுத்தி தங்களுடைய எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, அசோக் கெலாட்- சச்சின் பைலட் விவகாரம் மறுபடியும் சூடு பிடித்திருக்கிறது.

அசோக் கெலாட் அமைச்சரவையை விரிவுபடுத்தாமல் தாமதம் செய்வதால்தான் இது போன்ற செய்திகள் உலா வருகின்றன. எனவே உடனடியாக ராஜஸ்தான் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மக்கானுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியிருக்கின்றனர்.

அசோக் கெலாட் ஆதரவாளர்களோ, சச்சின் பைலட்டுக்கு பொறுமையாக இருக்க முடியவில்லை. பாஜக மூலம் சிண்டு முடியும் வேலையை செய்கிறார், என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆக, அக்கப்போர் மீண்டும் தொடர்கிறது. இதில் யார் கை ஓங்கும் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

தோற்கடிக்கவும் தயங்கமாட்டார்

இதுகுறித்து டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “அசோக் கெலாட் பிடிவாதம் காட்டுகிறார். சச்சின் பைலட் அமைதியாக இருந்து போராடி வருகிறார். அவர், பாஜகவில் இணைவார் என்பதெல்லாம் சற்று மிகைப்படுத்திய கற்பனைதான். 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றால் மட்டுமே அவர் மாற்று வழியை தேடுவார். அசோக் கெலாட்டை முன்னிறுத்தி அடுத்த தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால் சச்சின் பைலட் சும்மாயிருக்கமாட்டார். அவரை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளில்தான் இறங்குவார். அதற்காக தனிக்கட்சி தொடங்கவும் தயங்கமாட்டார்.

அப்படி நடந்தால் அது காங்கிரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தும். ஏனென்றால் மறு வருடமே நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள காங்கிரசுக்கு அது பலத்த சவாலாகவும் அமையும்” என்று தெரிவித்தனர்.

சச்சின் பைலட் விவகாரத்தில் சோனியாவும், ராகுலும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 339

0

0