அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? ரஜினியுடன் அரசியல் பேச்சு எதற்கு.. பொங்கும் சிபிஎம்!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 11:03 am
Quick Share

நடிகர் ரஜினியை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து அரசியல் பேசியதற்காக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை – கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், ஆளுநருடன் 25 முதல் 30 நிமிடங்களை வரை பேசியதாகவும் கூறினார்.

மேலும், ஆளுநர் ஆர்என் ரவி, தமிழக ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்டு விட்டதாகக் கூறிய ரஜினிகாந்த், அரசியல் தொடர்பாக விவாதித்தாகவும், ஆனால், அதனை வெளியில் கூற முடியாது என்றும் கூறினார்.

இந்தநிலையில் ரஜினி – ஆளுநர் ஆர்.என்.ரவி இருவரும் சந்தித்து அரசியல் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது’ எனவும் திரு ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது.

ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது. இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றி, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 558

0

0