‘திருப்தி இல்லை’ : ரஜினியின் கருத்தால் மாவட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி..!! கேள்விக்குறியாகும் அரசியல் பிரவேசம்?

30 November 2020, 11:30 am
rajini-updatenews360
Quick Share

சென்னை: அரசியல் நடவடிக்கை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இருப்பினும், தக்க நேரம் வரவேண்டும் அதற்காக காத்திருப்பதாகக் கூறி, 3 ஆண்டுகள் ஓடிவிட்டன.

இதனிடையே, கொரோனா சூழலில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஷாக் கொடுத்தார் ரஜினி.

இந்த சூழலில், அரசியல் நடவடிக்கை தொடர்பாக மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை நடத்துவதாகவும், இதற்காக மாவட்ட செயலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியது.

அதன்படி, சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலர்களுடன் ரஜினிகாந்த் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் போது, மாவட்ட வாரியாக மக்களிடம் தனக்கு எந்த அளவிற்கு செல்வாக்கு இருப்பது என்பது குறித்தும் கேட்டறிவதாக கூறப்படுகிறது.

அப்போது, சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்றும், முதலமைச்சர் வேட்பாளராக ரஜினிகாந்தே நிற்க வேண்டும் எனவும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு, தொகுதி வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் நிர்வாகிகள் எடுத்துரைத்துள்ளனர்.

இந்த நிலையில், மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசியல் கட்சி துவங்குவது குறித்து தான் முடிவெடுப்பேன், பொறுத்திருங்கள் என அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அரசியல் என்ட்ரி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகிகளிடம் அவர் அதிருப்தி தெரிவிப்பது, அரசியல் நடவடிக்கைக்கு முழுக்கு போடும் விதமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு ரஜினி வெளியிடும் அறிக்கையை பொறுத்தே, அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும்.

Views: - 0

0

0