தொடர்ந்து நீடிக்கும் சூப்பர் ஸ்டாரின் சஸ்பென்ஸ்..!! 2021 தேர்தல் களத்தில் அதிமுக – திமுக நேரடி மோதல்
30 November 2020, 9:19 pmசென்னை : நடிகர் ரஜினிகாந்த் அரசியல் முடிவு குறித்து மீண்டும் பரபரப்பாக தனது ரசிகர்களை சந்தித்து, மறுபடியும் எந்த முடிவும் எடுக்காததால் அவரது ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர். இதற்கு முன் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியவர், தான் எந்த முடிவு எடுத்தாலும் அதை ரசிகர்கள் ஏற்க வேண்டும் என்று சொல்வது, அவர் அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சர்கள் கருதுவதால், வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் களம் மீண்டும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான போட்டியாகவே இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்பது தமிழகத்தில் தொடர்ந்து ஒரு பேசு பொருளாகவே இருந்து வருகிறது. இதுவரை அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என்றும், முழு நேர அரசியல் பிரவேசம் குறித்தும் ரஜினி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவர் 2017 டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். “எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை” என்று அந்த அறிவிப்பின்போது அவர் பேசி இருந்தார். அதற்குப் பிறகும் கட்சி தொடங்குவது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கடந்த மார்ச் மாதம், சென்னையிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் “தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும், அப்போதுதான் அரசியலுக்கு வருவேன்” என்றும் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது. இருப்பினும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வந்த நிலையில்தான், கொரோனா காலத்தில் தமது உடல்நிலை வெளியே வந்து மக்களை சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக ரஜினியே தெரிவிப்பது போல சமூக ஊடகங்களில் கடந்த அக்டோபர் மாதம் செய்திகள் பரவின.
இதுகுறித்து விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த், அந்த அறிக்கை தான் வெளியிடவில்லை என்று கூறினாலும், அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.” என்று தெரிவித்தார்.
2011-ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்புக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும், 2016-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதனால் ரஜினிக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ள தகவல்கள் உண்மைதான் என்று அவரே கூறிவிட்ட நிலையில், அவரை அரசியலுக்கு வரும்படி பாஜக தலைவர்களோ, அவரது ரசிகர்களோ கட்டாயப்படுத்தும் வாய்ப்புகள் இல்லாமல் போனது. இந்தக் கொரோனா காலத்தில் ரஜினிகாந்த் மக்களை சந்தித்து அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதால், கொரோனாத் தொற்று அவரை எளிதில் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்று மருத்துவர்கள் அளித்த ஆலோசனைக்குப்பிறகு, அவரது நலனில் அக்கறை கொண்டவர்கள் யாரும் அவர் அரசியலுக்கு வரும்படி கூறமாட்டார்கள்.
இந்தத் தகவல்களுக்குப் பின் கொரோனாவுக்காக அரசியல் முடிவை ரஜினிகாந்த தள்ளிப்போட்டால், ரசிகர்களும் மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதற்கு முன்னோட்டமாக இந்தத் தகவல்கள் இருக்கலாம் என்று கருதப்பட்டது.
அரசியல் கட்சி தொடங்குவது பற்றி என்று கூறாமல், அரசியல் நிலைப்பாடு குறித்து என்று அவர் கூறியதால் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை மட்டும் அவர் முடிவுசெய்வார் என்று தெரிகிறது. தனது உடல்நிலை மோசமாக இருப்பதாக வந்த தகவல் உண்மைதான் என்று அவர் கூறியபோதே, அவர் அரசியலுக்கு வரும் வாய்ப்பு வெகுவாக மங்கிவிட்டது. அவரது உடல்நிலையைவிட அவர் அரசியலுக்கு வருவதுதான் முக்கியம் என்று ரஜினிகாந்தின் உண்மையான ரசிகர்கள் கருதவில்லை.
ஆனால், மீண்டும் ரசிகர்களுடன் அரசியல் குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை என்ற தகவல் பரவியதால், ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தார்கள். தமிழக அரசு கொரோனா பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்திவிட்டதால் துணிச்சலுடன் அரசியலில் இறங்க அவர் முடிவு செய்துவிட்டதாக ரசிகர்கள் ஆர்வத்தில் துள்ளிக்குதித்தனர். இன்று அவர் வெளியிடப்போகும் அறிவிப்பைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியுடன் காத்திருந்தார்கள்.
ஆனால், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவுற்ற பிறகு தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “மாவட்ட செயலாளர்களின் கருத்தை நான் கேட்டறிந்தேன். அதேபோன்று எனது பார்வையையும் அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். பிறகு, ‘நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். எனவே, நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்” என்று மட்டும் கூறினார்.
ஏமாற்றமே வாழ்க்கையாகிப்போன ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு, அவர் மறுபடியும் எதுவும் கூறாமல் பழைய பல்லவியையே பாடியுள்ளது மறுபடியும் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தான் எந்த முடிவு எடுத்தாலும், அதை ஏற்றுக்கொள்ளுவோம் என்று ரசிகர் மன்றத்தினர் உறுதி கூறியிருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இதைக் கொண்டு தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்தாலும், அதை தனது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதியை அவர் பெற்றிருக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது.
ஒருவேளை அவர் யாரையாவது ஆதரிப்பதாகக் கூறுவதற்கு வாய்ப்புள்ளது. நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இருக்கும் மக்கள் நீதி மையத்தையோ அல்லது அதுபோன்ற சிறிய கட்சிகளையோ ஆதரித்தால் அதனால் எந்தத் தாக்கமும் இருக்காது. கடந்த அரை நூற்றாண்டாக தமிழக அரசியலில் ஒவ்வொரு தேர்தலும் அதிமுகவுக்கும். திமுகவுக்கும் இடையிலான போட்டியாகவே இருந்துவருகிறது. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும். திமுக தலைவர் மு.க, ஸ்டாலினுக்கும் இடையிலான நேரடி யுத்தமாக இருக்கும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
0
0