மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தல் : திமுகவிற்கு கிளம்பிய எதிர்ப்பால் காங்., கூட்டணியில் குழப்பம்..!

11 September 2020, 7:35 pm
Quick Share

சென்னை: மாநிலங்களவைத் துணைத்தேர்தல் பதவிக்கு திமுகவை நிறுத்துவதை காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளும் ஏற்காத நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளரை நிறுத்த மற்ற கட்சிகள் கோரிக்கை வைப்பதால் திமுக முடிவு செய்த வேட்பாளரான திருச்சி சிவா போட்டியிடுவது உறுதி செய்யப்படவில்லை.

ஏற்கனவே இருந்த, ஹரிவன்ஷ் நாராயண்சிங்கின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும், அடுத்த வாரம் கூடவுள்ளன. கூட்டத்தொடரின்போது மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

Parliment 01 updatenews360

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண்சிங், தற்போது மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளதாலும், பீகார் சட்டசபைத் தேர்தல் வரப்போவதாலும், அவரையே மீண்டும் தேசிய ஜனநாயகக்கூட்டணி வேட்பாளராக, பாஜக, நிறுத்தலாம் என தெரிகிறது. ஹரிவன்ஷ் நாராயண்சிங்கிற்கு போட்டியாக, பிற கட்சிகளுடன் ஆலோசித்து, பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவெடுத்தது.

கூட்டணிக் கட்சியான திமுக வேட்பாளரை எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. திமுகவுடன் பேச்சு நடத்திய பிறகு அக்கட்சியின் சார்பில் திருச்சி சிவாவை நிறுத்த திமுக ஒப்புதல் தெரிவித்தது.

தற்போது, மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்குப் பெரும்பான்மையுள்ள நிலையில், எதிர்க்கட்சி வெற்றிபெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தினால் ஏனைய மாநிலங்களில் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகள் அதை ஆதரிக்க முன்வராது. திமுகவை அந்தக் கட்சிகள் ஆதரித்தால் கடும் போட்டியை ஏற்படுத்தலாம். சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் பாஜகவுக்கு எதிராகத் திரட்டலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டது.

ஆனால், பிற கட்சிகள் எதிர்ப்பால் காங்கிரஸ் திட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி வேட்பாளரான மனோஜ் ஜா எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட வேண்டும் பிற கட்சிகள் கருதுகின்றன. நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், பீகார் மாநிலத்தைகச் சேர்ந்தவரையே பாஜக கூட்டணி நிறுத்தியுள்ளது. அதே முறையைப் பின்பற்ற எதிர்க்கட்சிகள் பலவும் வலியுறுத்துகின்றன. இப்பிரச்சினையில் விரைந்து முடிவெடுக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர்..

Views: - 11

0

0