கண்ணாடியை திருப்பினால் ஆட்டோக்கள் ஸ்டார்ட் ஆகி ஓடுவதில்லையா? திமுக அரசை விளாசிய ராமதாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2023, 3:57 pm
ramadass
Quick Share

கண்ணாடியை திருப்பினால் ஆட்டோக்கள் ஸ்டார்ட் ஆகி ஓடுவதில்லையா? திமுக அரசை விளாசிய ராமதாஸ்!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் சமூகநீதித் தொட்டில் தமிழ்நாடு. நூற்றாண்டுக்கு முன் நீதிக்கட்சி ஆட்சியில் இந்தியாவுக்கான சமூகநீதி தமிழ்நாட்டில் பிறந்ததால் தான் இந்த பெரும்பெயர் நமக்கு!

இரண்டாம் தலைமுறை சமூகநீதி இப்போது பிகார், கர்நாடகத்தில் தொடங்கி இந்தியா முழுவதும் பிரசவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பல மாநிலங்களிலும் கருக் கொள்கிறது!

ஆனால், சமூகநீதியின் தாய் என மார்தட்டும் தமிழ்நாட்டின் வயிறு வாடிக் கொண்டிருக்கிறது, அதன் கருப்பையோ காய்ந்து கொண்டிருக்கிறது! காரணமான ஆட்சியாளர்களுக்கோ கவலை இல்லை!

தமிழ்நாடு என்ற தொட்டிலில் சமூகநீதியாவது இருக்கிறதா?
என எட்டிப் பார்த்தேன். அது ஆடாமல் காலியாகக் கிடந்தது.
இரும்புக் கட்டில் என்பதால் ஆட மறுக்கிறதோ? என்று
ஆட்டிப் பார்த்தேன். அந்தத் தொட்டில் துரு பிடித்துக் கிடந்தது!” என்று குறிப்பிட்டு உள்ளார்.

நேற்றும் ராமதாஸ் தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அதில், “சமூக நீதி என்பது பசிப்பிணி தீர்க்கும் உணவு என்றால், அதை தயாரிப்பதற்கான உணவு தானியம் தான் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1931-ஆம் ஆண்டில் தான் கடைசியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், அதன் பின் வந்த ஆட்சியாளர்கள், 1931-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், நிகழ்கால சாதிவாரி மக்கள்தொகையை கணித்து அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்ட நாதன் ஆணையம், அம்பாசங்கர் ஆணையம். நீதியரசர் ஜனார்த்தனன் ஆணையம் போன்றவை இதற்காகத் தான் ஏற்படுத்தப்பட்டன. இந்த ஆணையங்களின் பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் இப்படி என்றால், தேசிய அளவில் காகா கலேல்கர், பி.பி.மண்டல் ஆகியோர் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அமைக்கப்பட்டு, சமூகநீதி வழங்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களான கர்நாடகத்தில் அவானூர் ஆணையம், நாகே கவுடா ஆணையம், கேரளத்தில் தாமோதரன் ஆணையம், ஆந்திரத்தில் அனந்தராமன் ஆணையம், முரளிதரராவ் ஆணையம் போன்றவை அமைக்கப்பட்டன. பிகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு இன்னும் ஒரு படி மேலே போய், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அத்துடன் நிற்கவில்லை அந்த அரசு. புதிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் அம்மாநில இட ஒதுக்கீட்டின் அளவையும் 75% ஆக உயர்த்தியுள்ளது.

கர்நாடகத்தில் சித்தராமைய்யா தலைமையிலான அரசு, அதன் முந்தைய பதவிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. அதன் விவரங்கள் அடுத்த மாதத்தில் வெளியிடப்படவுள்ளன. ஒதிஷா அரசும் இத்தகைய கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட்டது. அதன் விவரங்களும் விரைவில் வெளியிடப்படவுள்ளன. ஆந்திரா மாநிலத்தில் நடப்பு மாதத்திலும், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த சில மாதங்களிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

சரி… சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் இதற்காக என்ன செய்யப்பட்டிருக்கிறது? கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.
என்ன?

ஆமாங்க…பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார். எங்களுக்கு அதிகாரமில்லை. நீங்களே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று அதில் கோரியிருக்கிறார்.

பாருங்கள்…. என்னவொரு தொலைநோக்குப் பார்வை? தமிழ்நாட்டில் சட்டநாதன் ஆணையம் அமைத்தவரில் தொடங்கி பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தந்தவர் வரை பலருக்கும் தெரியாத அரசியல் தந்திரம் இவருக்கு தெரிந்திருக்கிறது பாருங்களேன். அவர்களெல்லாம் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறார்கள். தேவையில்லாமல் ஆணையம் அமைத்து, கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டை உயர்த்துவதெல்லாம் எவ்வளவு கடினம்? அவற்றைப் போய் அவர்கள் செய்திருக்கிறார்களே பிழைக்கத் தெரியாதவர்கள்.

ஒரே கடிதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி பாதுகாப்பு என இரண்டு மாங்காய்களை அடித்துள்ள நமது முதல்வர் எவ்வளவு சிறந்தவர். எந்த அளவுக்கு பிழைக்கத் தெரிந்தவர்? அவரது மாடலிலேயே தமிழ்நாட்டில் சமூகநீதி தழைத்தோங்கட்டும். அதற்கு உரமிடும் வகையில் அவ்வப்போது பிரதமருக்கு அவர் கடிதம் எழுதட்டும். கண்ணாடியை திருப்பினால் ஆட்டோக்கள் ஸ்டார்ட் ஆகி ஓடுவதில்லையா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

Views: - 207

0

0