ராமாவரம் தோட்டத்தில் ரஜினிக்கு நடந்தது என்ன..? ரகசியங்கள் அவிழ்கின்றன

14 February 2020, 6:36 pm
rajini - mgr - updatenews360
Quick Share

அது 1978-ம் வருடம். வில்லனிலிருந்து ஹீரோவாக ஆக ரஜினி தயாரான ஆரம்பக் காலம். சங்கர் சலீம் சைமன் என்ற பெயரில் பழம்பெரும் இயக்குனர் பி.மாதவன் எடுத்த படத்தில் சைமன் கேரக்டரில் நடிக்க ரஜினிக்கு வாய்ப்பளித்தார்.
அந்தப் படத்தில் ரஜினியின் ஜோடி நடிகை லதா. லதா எம்ஜிஆரோடு ஜோடியாக நடித்து மிகவும் புகழ் பெற்ற நடிகை. அவரோடு சேர்ந்து நடிக்கவே ரஜினி பயந்தார்.

அதை லதா புரிந்து கொண்டு, ரஜினியின் பயத்தைப் போக்கும் விதமாக அவரிடம் இயல்பாகப் பேசினார். ரஜினியும் லதாவின் எளிமையான அணுகுமுறையால் கவரப்பட்டு, பயமின்றி அவரோடு நடிக்கத் தொடங்கினார். அந்த நட்பு மேலும் ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் நடித்தபோது மேலும் வளர்ந்தது. இந்த நட்பைப் பற்றி பல கதைகள் அப்போது தமிழகம் எங்கும் பேசப்பட்டன.

rajini

அப்போது, ரஜினி பலவழிகளில் அலைக்கழிக்கப்பட்டு வழக்குகளுக்காக கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருந்தார்.

அந்தக் குடைச்சல்கள் எல்லாம் அன்றைய தமிழக முதலமைச்சரான எம்ஜிஆரால்தான் ரஜினிக்குக் கொடுக்கப்பட்டது என்றும், அதற்கு லதாவுடன் ரஜினி கொண்டுள்ள நட்புதான் காரணம் என்றும், அக்காலத்தில் எம்ஜிஆரின் இருப்பிடமான ராமாவரம் தோட்டத்திற்கே ரஜினியைத் தூக்கி வந்து “லதாவை மறந்து விடு” என்று எம்ஜிஆர் மிரட்டியதாகவும்,ஏன் அடித்ததாகவும் கூட வதந்திகள் றெக்கை கட்டிப் பறந்தன.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பத்திரிகைகளில் அன்று இந்தச் செய்தி வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, இது வாய்மொழியாகவே தமிழகம் முழுவதும் பரவியதுதான் ஆச்சரியம். இன்னும் சொல்லப்போனால் அக்காலத்தில் மீடியா ஒன்றும் அவ்வளவு பரந்த அளவில் கிடையாது. இப்படி செவிவழிச் செய்தியாகப் பரவிய இவ்விஷயத்தை தமிழர்கள் பெரும்பாலானோர் நம்பினார்கள்.

அப்புறம், முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடிக்க வேண்டிய லதா, திடீரென கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க இயலாததும் கூட இந்த வதந்திக்கு வலுசேர்த்தது. பிறகு, வேறு ஒரு லதாவை ரஜினி நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக செட்டிலானதும், மக்கள் இந்த வதந்தியை மறந்தே போயினர்.

Latha updatenews360

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடிகை லதா ஒரு பேட்டியில், இந்த வதந்தியைப் பற்றிக் கூறும் போது, “சகல இடங்களிலும் ரஜினிக்கும், எனக்கும் காதல் என்ற வதந்தி பரவியிருந்தது. புரட்சித்தலைவர் கூட இதைப் புரிந்து கொள்ளவில்லை,” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆக, இதில் ஏதோ உள்விஷயம் இருக்கிறது என்பதை அந்தப் பேட்டி உறுதி செய்தது.

இப்போது, நேற்று எம்ஜிஆரின் உதவியாளரும், ஒருகாலத்தில் எம்ஜிஆருக்காக டூப் போட்டு நடித்தவரும், எம்ஜிஆரோடேயே எப்போதும் இருந்தவருமான கே.பி. ராமகிருஷ்ணன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

kp-ramakrishnan2-updatenews360

அதில், ராமாவரம் தோட்டத்தில் ரஜினியை எம்ஜிஆர் அடித்ததாகச் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். ராமாவரம் தோட்டத்திற்கு ரஜினி வந்திருக்கிறார். எம்ஜிஆர் ரஜினிக்கு உடற்பயிற்சியின் அவசியம் உள்ளிட்ட பல விஷயங்களில் நல்ல அறிவுரை கூறினார். ரஜினி மீது எம்ஜிஆருக்கு நல்ல மரியாதை உண்டு. அவர் பெரும் புகழடைவார் என்பதை எம்ஜியார் அன்றே யூகித்தார் என்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

kp ramakrishnan- updatenews360

எம்ஜிஆரைப் பற்றி கருத்துக் கூற இப்போது உயிரோடு இருப்பவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் ஆர்.எம். வீரப்பன், இன்னொருவர் கே.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மட்டுமே.

அந்த முக்கியமான எம்ஜிஆரின் கூடவே இருந்த ராமகிருஷ்ணனே இதைச் சொல்லிவிட்டதால், இவ்வளவு வருடமாகப் பரவிய நடிகை லதா ரஜினி காதல் மற்றும் ராமாவரம் தோட்டத்தில் ரஜினியை அடித்ததாகக் கூறிய வதந்தி ஆகிய எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய முற்றுப் புள்ளி வைக்கப் பட்டுவிட்டது.

Leave a Reply